Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் மயில்சாமி மறைவு: "எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்; காசு இருந்தால் யோசிக்காமல் உதவுவான்" - வைரலாகும் விவேக்கின் பேச்சு

நடிகர் மயில்சாமி மறைவு:
, ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (14:45 IST)
"எனக்கு கஷ்டம்னா அவர்கிட்ட தான் சொல்லுவேன்"

இப்படி நடிகர் விவேக் மறைந்த போது தழுதழுத்த குரலில் பேசிய நடிகர் மயில்சாமி இன்று உயிருடன் இல்லை.

மாரடைப்பால் இன்று காலை (பிப். 19) மயில்சாமி உயிரிழந்த நிலையில், விவேக் - மயில்சாமி இருவருக்குமிடையே திரையிலும், திரைக்கு வெளியேவும் இருந்த நட்பை பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மயில்சாமி குறித்து விவேக் பேசிய காணொளி ஒன்றும் தற்போது அதிகமாக பகிரப்படுகிறது.

சினிமாவில் ஹிட் அடித்த கூட்டணி

விக்ரம் நாயகனாக நடித்த தூள் படத்தில் விவேக் - மயில்சாமி நடித்த காமெடி காட்சிகள் மிகபிரபலமானவை.

அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் விவேக்கை ஏமாற்ற "திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜிலேபி தான் கொடுக்குறாங்க பாஸ். சந்திரபாபு நாயுடுவே சொல்லிட்டார்" என மயில்சாமி பேசிய வசனம் இன்றும் பல மீம் கிரியேட்டர்களின் டெம்ப்லேட்டாக இருக்கிறது.

'பாளையத்து அம்மன்' படத்திலும் இந்த இருவரின் கூட்டணியில் உருவாகியிருந்த காமெடி காட்சிகள் பலரால் ரசிக்கப்பட்டது.

அந்த படத்தில் போலிச் சாமியார் கதாபாத்திரத்தில் மயில்சாமியும், சித்தர் வேடத்தில் விவேக்கும் நடித்திருப்பார்கள். இந்த காட்சி அந்த காலத்தில் தொலைக்காட்சியில் வெளியாகி ஹிட் ஆகியிருந்த ஒரு நேர்காணலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.
webdunia

இதில் விவேக்கிடம் மயில்சாமி, "அவரு ஔவையாரை ஒளவையார்னு படிப்பாரு" என்று பேசும் இந்த காட்சி இருவரின் காமெடி கூட்டணியில் வெளிவந்த சிறந்த காட்சிகளில் ஒன்றாகும்.

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்த மயில்சாமி, "இந்த காட்சிக்கான வசனம் எழுதியது விவேக் சார். அவரும் நானும் சேர்ந்து ஒரே டேக்கில் இந்த காட்சியில் நடித்தோம். பல ஆண்டுகள் கழித்தும் எனக்கு இந்த காட்சி பெயரைப் பெற்று தருகிறது" என்று கூறியிருந்தார்.

நிஜ வாழ்க்கையிலும் நட்பு

விவேக் - மயில்சாமி நட்பு சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்தது. பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் விவேக்கும் மயில்சாமியும் ஒருவரை ஒருவர் நட்பு பாராட்டி கொண்டிருக்கின்றனர்.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற 'காசு மேல காசு' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மயில்சாமி குறித்து நடிகர் விவேக் பேசிய போது மயில்சாமி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

"காசு இருந்தால் அனைவருக்கும் யோசிக்காமல் உதவுவான். அடுத்த நாள் காசு இல்லாமல் ஜீரோவாக இருப்பான், அவன் தான் மயில்சாமி."

மயில்சாமியின் உதவும் குணம் குறித்து விவேக் பேசிய வார்த்தைகள் இவை.

"மயில்சாமியின் வாழ்க்கையை பாரதிராஜாவிடம் சொல்லி தனிக்கதையாகவே எடுக்கலாம்.

மயில்சாமி எம்.ஜி.ஆரின். தீவிர ரசிகர், விசுவாசி. எம்.ஜி.ஆர் தான் அவரது வாழ்க்கையில் எல்லாமே.

சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய தங்கச் சங்கிலியில் எம்.ஜி.ஆர். டாலரை மாட்டிக் கொண்டவர் மயில்சாமி.

இந்தி நடிகர் விவேக் ஓபராய் தமிழ்நாட்டிற்கு வந்து கடலூருக்கு அருகில் உள்ள தேவதானப்பட்டி என்ற கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதை கேள்விப்பட்டு, தன்னிடம் பணம் இல்லாத நிலையிலும் உதவ நினைத்தவர்.
webdunia

நேராக விவேக் ஓபராயிடம் சென்று தன்னுடைய செயினில் இருந்த எம்.ஜி.ஆர். டாலரை கொடுத்து உதவ வைத்துக் கொள்ள சொல்லி விட்டு வந்து விட்டார் மயில்சாமி.

ஹெல்ப், ஹெல்ப், ஹெல்ப், இதுதான் மயிசாமி. தன்னிடம் இல்லையென்றாலும் அடுத்தவரை தொல்லை செய்தாவது தேவையில் இருக்கும் நபர்களுக்கு உதவி செய்வார்," என விவேக் அப்போது பேசியிருந்தார்.

அதேபோல நடிகர் விவேக்கின் மறைவின் போது, முதல் ஆளாக விவேக்கின் வீட்டிற்கு வந்து அனைத்து வேலைகளையும் முன்னின்று நடிகர் மயில்சாமி பார்த்துக் கொண்டார்.

விவேக்கின் இறுதி ஊர்வலத்தின் போது, மின்சார தகன மேடை வரை அவரின் உடலை கொண்டு சென்ற வண்டிக்கு வழியை ஏற்படுத்த நடந்தே வந்தார்.

சிவராத்திரி பூஜை

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகிலுள்ள சிவன் கோவிலில் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டிருந்தார் மயில்சாமி.

அவருடன் இரவு முழுக்க உடனிருந்த டிரம்ஸ் கலைஞரான சிவமணி பேசிய போது, "தீவிர சிவபக்தராக இருந்தவர் மயில்சாமி. ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று இருவரும் சந்தித்துக் கொள்வோம். நேற்று இரவு முழுவது இருவரும் ஒன்றாகவே கோயிலில் இருந்தோம். நான் டிரம்ஸ் வாசிக்கும் போது எனக்கு மைக் பிடித்துக் கொண்டு இருந்தார். இந்த கோயிலுக்கு ரஜினியை அழைத்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்" என்று தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளைக்கும் ஏடிஎம் கொள்ளைக்கும் சம்பந்தமா?