11 குட்டிகளை ஈன்ற உலகின் மிக வயதான ஓராங்குட்டான் மரணம்

செவ்வாய், 19 ஜூன் 2018 (15:20 IST)

உலகின் மிகவும் வயதான சுமத்ரான் ஓராங்குட்டானாக (ஒரு வகை குரங்கினம்)கருதப்படும் 62 வயதான புவான், ஆஸ்திரேலியாவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்தது. இதற்கு 11 குட்டிகள் மூலம் 54 வழித்தோன்றல்கள் உலகம் முழுவதுமுள்ளது.

"மிகவும் வயதான பெண்" என்று குறிப்பிடப்படும் புவான் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலுள்ள மிருகக்காட்சி சாலையில் வயது சார்ந்த பிரச்சனைகளின் காரணமாக இயற்கையான விதத்தில் திங்கட்கிழமையன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 1968ஆம் ஆண்டு முதல் இந்த மிருகக்காட்சி சாலையில் இருக்கும் புவான், கடந்த 2016ஆம் ஆண்டு இந்த வகை ஓராங்குட்டான்களில் மிகவும் வயதானதாக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.
அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் ஓராங்குட்டான்கள், காட்டு வாழ்க்கையிலேயே அரிதாகத்தான் 50 வயதிற்கு மேல் வாழ்வதாக பெர்த் மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது.
 
1956ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் பிறந்ததாக நம்பப்படும் இந்த ஓராங்குட்டானுக்கு 11 குட்டிகளின் மூலம் 54 வழித்தோன்றல்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல இடங்களில் அவை இருப்பதாகவும் மிருகக்காட்சி சாலை கூறியுள்ளது.
 
உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகம் முழுவதும் சுமார் 14,600 ஓராங்குட்டான்கள்தான் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழுமா?