Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெக்சிகோ காட்டில் புதைந்திருந்த மாயன் நகரம் - தற்செயலாக கண்டுபிடித்த ஆய்வாளர்

Mayan City

Prasanth Karthick

, ஞாயிறு, 3 நவம்பர் 2024 (12:22 IST)

மெக்சிகோவில் காடுகளுக்கு அடியில் புதைந்திருந்த மிகப்பெரிய மாயன் நகரம் ஒன்று, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

தொல்லியல் ஆய்வாளர்கள் மெக்சிகோவின் தென்கிழக்கு மாநிலமான காம்பேச்சியில் பிரமிடுகள், விளையாட்டு மைதானங்கள், மாகாணங்களை இணைக்கும் பாதைகள் மற்றும் சுற்று மாளிகை அரங்கத்தைக் (ஆம்பிதியேட்டர்) கண்டறிந்துள்ளனர்.

 

அப்பகுதியில் புதைந்துபோன வளாகம் ஒன்றையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அதற்கு அவர்கள் `வலேரியானா’ என்று பெயரிட்டுள்ளனர். `லிடார்’ (Lidar) என்னும் லேசர் சென்சார் கருவியைப் பயன்படுத்தி, பூமிக்கு அடியில் புதைந்துபோன கட்டமைப்புகளை ஆய்வாளர்கள் வரைபடமாக்கி வருகின்றனர்.

 

பண்டைய லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய மாயர்கள் நாகரிகத்தின் தொல்லியல் தளமாகக் கருதப்படும் கலக்முல் (Calakmul) நகருக்கு அடுத்தபடியாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

 

தற்செயலாகக் கிடைத்த மாயன் நகரம்
 

தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இணையத்தில் ஆராய்ச்சித் தரவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, "தற்செயலாக" இந்த மாயன் நகரம் இருந்ததற்கான சாத்தியங்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.

 

அதற்குப் பிறகு அவரது குழுவினர் மூன்று தொல்லியல் தளங்களை அங்கே கண்டுபிடித்தனர். அதன் மொத்த பரப்பு ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோ அளவுக்கு இருந்துள்ளது.

 

"நான் கூகுள் சர்ச்சின் 16வது பக்கத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக ஒரு மெக்சிகன் அமைப்பு நடத்திய லேசர் ஆய்வு ஒன்று கண்ணில்பட்டது" என்று கூறுகிறார் லூக் ஆல்ட்-தாமஸ். அவர் அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருக்கிறார்.

 

எதேர்ச்சையாக எதையோ தேட ஆரம்பித்து இந்த நகரத்தை கண்டறிந்தது எப்படி என்பது குறித்து விளக்கும் ஆல்ட் - தாமஸ், "நான் பார்த்தது ஒரு `லிடார்’ லேசர் சர்வே தான்" என்கிறார்.

 

லிடார் தொழில்நுட்பம் என்பது`ரிமோட் சென்சிங்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது. ஒரு விமானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லேசர் பல்ஸ்கள் வெளியிடப்படும். அது பிரதிபலித்து அந்த சிக்னல் திரும்புவதற்கு எடுக்கும் நேரத்தைப் பயன்படுத்தி கீழே உள்ள பொருட்களை வரைபடமாக்கும் முறையே லிடார் லேசர் சர்வே."

 

ஆல்ட்-தாமஸ் அந்த கூகுள் தேடலில், தொல்லியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு தரவுகளைச் செயலாக்கம் செய்து பார்த்தபோது ஓர் உண்மையைக் கண்டறிந்தார்.

 

இதற்கு முன்னர் ஆய்வாளர்கள் கவனிக்கத் தவறவிட்டதை தாமஸ் கண்டார். அந்த லிடார் ஆய்வு முடிவுகள் மூலம், கி.பி 750 முதல் 850 வரை வாழ்ந்த 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள்தொகை கொண்ட ஒரு பெரிய பழங்கால நகரத்தின் இருப்பை அவர் கண்டுபிடித்தார்.

 

இது இன்று இந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையைவிட அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

ஆல்ட்-தாமஸ் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் அருகில் இருந்த ஒரு குளத்தின் பெயரை அடிப்படையாக வைத்து இந்த நகரத்திற்கு `வலேரியானா’ என்று பெயரிட்டனர்.

 

நகரத்தின் அழிவுக்கு என்ன காரணம்?

 

ஆய்வின் இணை ஆசிரியரான பேராசிரியர் மார்செல்லோ கானுடோவின் கூற்றுப்படி, இந்தக் கண்டுபிடிப்பு `வெப்பமண்டங்களில் தான் நாகரிகங்கள் அழிந்துபோயின’ என்ற மேற்கத்திய நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது.

 

உலகின் இந்தப் பகுதி, மிகவும் ஆழமான மரபுகளைக் கொண்ட, பரந்துபட்ட சமூகக் கட்டமைப்புகள் அடங்கிய கலாசாரங்களின் தாயகமாக இருந்துள்ளதாக அவர் விவரித்தார்.

 

இந்த நகரத்தின் அழிவுக்கு காரணம் என்ன என்பதை நாங்கள் உறுதியாகக் கூற முடியாது, ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

 

வலேரியானா, ஒரு தலைநகருக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளது. இந்த நகரம், அடர்த்தியான கட்டுமானங்களுடன், அற்புதமான காலக்முல் நகரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மேலும், காலக்முல்லில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

 

மாயன் சமூகத்தின் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் எக்ஸ்புஜில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பிரதான சாலையில் இருந்து 15 நிமிட பயண தூரத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளது. மக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் இருந்தபோதிலும் யாராலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்தப் பகுதியை `மறைந்துள்ள நிலப்பரப்பு’ என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

இந்தப் புதைந்துபோன நகரத்தின் படங்கள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஏனெனில் யாரும் இப்பகுதிக்குச் சென்றதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் மக்கள் தரையின் கீழ் இடிபாடுகள் இருப்பதாக சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

சுமார் 16.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த இந்த நகரம், 2 கிமீ தொலைவில் பெரிய கட்டடங்களைக் கொண்ட இரண்டு பெரிய மையங்களைக் கொண்டிருந்தது, அருகருகே அமைந்த வீடுகள் மற்றும் தரைப்பாதைகளால் இணைக்கப்பட்ட பகுதிகள் இருந்தன.

 

இங்கு வழிபடும் பிரமிடுகளுடன் இரண்டு பிளாசாக்கள் உள்ளது. அங்கு மாயன் மக்கள் வழிபட்டிருக்கலாம் அல்லது பொக்கிஷங்களை மறைத்து வைத்திருக்கலாம், அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்திருக்கலாம்.

 

மேலும், அங்கு ஒரு பழங்கால விளையாட்டு மைதானமும் இருந்தது.

 

மொத்தத்தில், ஆல்ட் தாமஸ், பேராசிரியர் கானுடோ ஆகியோர் இந்த காட்டுப் பகுதியில் உள்ள மூன்று வெவ்வேறு தளங்களை ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு அளவுகளில் 6,764 கட்டடங்களைக் கண்டுபிடித்தனர்.

 

மாயன்கள் வாழ்ந்த பகுதி சிதைந்தது எப்படி?

 

இந்த ஆராய்ச்சியோடு தொடர்பில்லாத லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் கிரஹாம் கூறுகையில், இந்த ஆய்வின்படி, மாயன் நாகரிக மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கவில்லை. அவர்கள் சிக்கலான அமைப்பைக் கொண்ட நகரங்களில் வாழ்ந்தனர் என்ற கூற்றுகளை இந்த ஆய்வு ஆதரிக்கிறது” என்றார்.

 

"தற்போது அந்த இடங்கள் காட்டுப் பகுதிகளாக மாறியிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அதில் மக்கள் குடியேற்றங்கள் இருந்துள்ளன” என்றும் கூறுகிறார்.

 

ஆராய்ச்சிப்படி, மாயன் நாகரிகத்தின் சரிவு கி.பி 800இல் தொடங்கி இருக்கலாம். அவர்களின் அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் காலநிலை தொடர்பான பிரச்னைகளைத் தாங்க முடியாமல் அழிவு நிகழ்ந்திருக்கலாம்.

 

"இப்பகுதிகளில் வறட்சி சூழல் ஏற்பட்டபோது, இந்த ​​நிலப்பரப்பு மக்களால் நிரம்பி வழிந்தது என்பதை இது குறிக்கிறது. எனவே, மக்கள் இருப்பிடங்களை விட்டு வெகுதூரம் நகர்ந்ததால், முழு கட்டமைப்பும் சிதைந்திருக்கும்" என்று ஆல்ட் தாமஸ் கூறுகிறார்.

 

இறுதியாக, 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஸ்பெய்ன் நாட்டு படையெடுப்பும் மாயன்களின் அழிவுக்கு வழிவகுத்தது.

 

இன்னும் பல நகரங்களைக் கண்டிபிடிக்கலாம்

 

பேராசிரியர் கானுடோ கூற்றுப்படி, தாவரங்கள் நிறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, அழிந்த நாகரிகங்களைக் கண்டறிவதில் லிடார் தொழில்நுட்பம் புரட்சி செய்துள்ளது.

 

அவரது தொல்லியல் பணியின் ஆரம்பக் காலத்தில், தரையை அங்குலம் அங்குலமாகச் சரிபார்க்க எளிய கருவிகளைப் பயன்படுத்தி, உடல் உழைப்பு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

 

ஆனால் மெசோ அமெரிக்கன் பிராந்தியத்தில் லிடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, தொல்லியல் ஆய்வாளர்கள் ஒரு நூற்றாண்டில் செய்த பணிகளைவிட 10 மடங்கு அதிக பகுதிகள் வரைபடமாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

 

ஆல்ட் தாமஸ், "தொல்லியல் ஆய்வாளர்களுக்குத் தெரியாத பல தளங்கள் அங்கு இருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றார்.

 

உண்மையில் பல தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஆய்வாளர்களால் அகழாய்வு செய்ய முடியாது.

 

"ஏதோவொரு கட்டத்தில் வலேரியானாவுக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது சாலைக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பது தெரியாது. அதே நேரம் நாங்கள் அங்கு தொல்லியல் பணிகளை மேற்கொள்வோம் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது" என்கிறார் ஆல்ட் தாமஸ்.

 

மேலும், "லிடார் சகாப்தத்தில் பல புதிய மாயன் நகரங்களைக் கண்டறிவதால் சில பிரச்னைகளும் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை நம்மால் ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு அதிகமானவை" என்று அவர் கூறுகிறார்.

 

இந்த ஆய்வு ஆன்டிக்விட்டி (Antiquity) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமானை கண்டுக்க வேணாம்.. நமது அரசியல் எதிரி யார்னு விஜய் சொல்லியிருக்கார்! - தவெக நிர்வாகி!