தனது முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என்று ஃபேஸ்புக்கில் திட்டியதற்காக பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு வருட ஜெயில் தண்டனையை எதிர்கொள்கிறார்.
லண்டனை சேர்ந்த 55 வயது லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷ்ரவேஷுக்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. அந்த சமயத்தில் ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்தார் ஷ்ரவேஷ். பின் அவருக்கு விவாகரத்து ஆனதும் பிரட்டனுக்கு தனது மகளுடன் வந்துவிட்டார்.
தனது கணவர் மறுமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவுடன் ஷ்ரவேஷ், ’நீ மண்ணில் புதைந்து போக வேண்டும். இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா’ என்று பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடு எமிரேட்டின் சைபர் குற்றவியல் சட்டப்படி சமூக வலைதளங்களில் மரியாதைக் குறைவான கருத்துக்களை பதிவிட்டால் ஜெயில் தண்டனையோ அல்லது அபராதமோ வழங்கப்படும்.