Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹேக்கர்களை பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம் அறிவிப்பு

Advertiesment
ஹேக்கர்களை பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம் அறிவிப்பு
, திங்கள், 8 நவம்பர் 2021 (16:50 IST)
டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் ஒரு கோடி அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
 

இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க அல்லது இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க பிணைத் தொகை (ரேன்சம்) கேட்டு ஹேக்கர்கள் தாக்குதல் நடத்துவது ரேன்சம்வேர் தாக்குதல் எனப்படும்.
 
கடந்த மே மாதம் டார்க்சைடு குழுவினர் நடத்திய இணையத் தாக்குதலால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள 5,500 மைல் (8,850 கிலோ மீட்டர்) நீளமுள்ள எரிபொருள் குழாய்களின் இயக்கம் முடக்கப்பட்டது.
 
அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிக்குத் தேவையான 45 சதவீத எரிபொருள் தேவையை இந்தக் குழாய்தான் பூர்த்தி செய்கிறது.
 
டார்க்சைடு இணையதளத் தாக்குதலாளிகள் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் குறித்த அடையாளம் அல்லது இருப்பிடம் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவித்தால் இந்த சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
 
டார்க்சைடு இணையவழித் தாக்குதலாளிகள் குழுவின் ரேன்சம்வேர் தாக்குதலில் பங்கேற்பதற்காக சதித்திட்டம் தீட்டிய யாரையாவது கைது செய்ய உதவும் தகவல்களைத் தெரிவித்தால் அவர்களுக்கு கூடுதலாக 50 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 38 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
 
இந்தக் குழு நடத்திய இணையவழி தாக்குதலால் கோஸ்டல் பைப்லைன் எனும் எரிபொருள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பல நாட்கள் நிறுத்தப்பட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை உண்டானது.
 
தாங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உண்டான பின்பு இந்த நிறுவனம் தாக்குதல்களுக்கு ஹேக்கர்களுக்கு 44 லட்சம் அமெரிக்க டாலரை பிட்காயின் வடிவில் பிணைத் தொகையாக வழங்கியது. இதில் பெரும் தொகை மீண்டும் மீட்கப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
 
டார்க்சைடு தாக்குதலாளிகள் தங்களால் பாதிக்கப்பட்ட 47 வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து குறைந்தது 90 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 67 கோடி இந்திய ரூபாய்) பணத்தை பிணைத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்று பிட்காயின் பகுப்பாய்வு நிறுவனமான எலிப்டிக் தெரிவிக்கிறது.
 
ஹேக்கர்கள் சிக்குவார்களா?
 
ஜோ டைடி, சைபர் செய்தியாளர்
 
ஓர் இணையதள தாக்குதல் குற்றவாளியைப் பிடிப்பதற்கு இதுவரை அறிவிக்கப்பட்ட சன்மானத் தொகைகளிலேயே மிகவும் அதிகபட்சம் ஒரு கோடி அமெரிக்க டாலர்தான்.
 
'எவில் கார்ப்' எனும் ரேன்சம்வேர் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மேக்ஸிம் யாக்கூபெட்ஸ் என்பவரைப் பிடிப்பதற்காக இந்தத் தொகையை அறிவிக்கப்பட்டது.
 
பிரிட்டன் அதிகாரிகளின் உதவியுடன் 2019ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் இவரது பெயரை வெளியிட்டது. அதற்கு முன்பு எவ்கேய்னி போகாசேவ் என்பவர் குறித் தகவல்களுக்காக 30 லட்சம் அமெரிக்க டாலர் சன்மானமாக அறிவிக்கப்பட்டதுதான் அதிகபட்ச சன்மானத் தொகையாக இருந்தது.
 
இவர்கள் அனைவர்க்கும் ஓர் ஒற்றுமை உண்டு. ரேன்சம்வேர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் ரஷ்யாவில், உள்ளூர் காவல்துறையின் எந்தவிதமான பிரச்னைக்கும் உள்ளாகாமல் மிகவும் சுதந்திரமாக வசிப்பதாகவும் கருதப்படுகிறது.
 
ரஷ்யாவில் ஹேக்கர்கள் இருப்பதாக மேற்குலக நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை ரஷ்ய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
 
அவர்கள் படங்கள், இருப்பிடம் உள்ளிட்டவற்றை அமெரிக்கா வெளியிட்ட பின்னும், அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
 
டார்க்சைடு குழுவினரும் ரஷ்யாவில் இருப்பதாகவே கருதப்படுகிறது. மிகப்பெரிய சன்மானம் அறிவிக்கப்பட்டாலும், இவர்கள் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடம்பாக்கத்தை சூழ்ந்த மழை வெள்ளம்! – வேட்டியை மடித்து இறங்கிய எடப்பாடியார்!