Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர்!

Advertiesment
17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர்!
, சனி, 19 பிப்ரவரி 2022 (09:32 IST)
மருத்துவராகவும், சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போலவும் நடித்து 17 பெண்களை வலையில் சிக்கவைத்து மோசடி நபரை புவனேஷ்வர் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
66 வயதான ரமேஷ் சந்திர ஸ்வைன், புவனேஷ்வரின் கண்ட்கிரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். திங்களன்று அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
 
தந்திரமாக பெண்களை ஏமாற்றி வந்த ரமேஷ், எட்டு மாநிலங்களை சேர்ந்த 17 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 17 பெண்களில் நான்கு பேர் ஒடிஷாவைச் சேர்ந்தவர்கள், தலா 3 பேர் அசாம் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள், 2 பேர் மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தலா ஒருவர் உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள்.
webdunia
இந்த 17 பேரைத் தவிர மேலும் பல பெண்களையும் ரமேஷ் தனது வலையில் சிக்க வைத்திருக்கும் வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது என்று புவனேஷ்வர் மாநகர காவல் இணை ஆணையர் உமாசங்கர் தாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"ரமேஷ் கைது செய்யப்பட்ட பிறகு 17 பேரில் 3 பெண்கள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் ஒடிஷா, ஒருவர் சத்தீஸ்கர் மற்றும் ஒருவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மூவருமே உயர்கல்வி முடித்தவர்கள். ரமேஷிடம் விசாரணை நடத்தி, இந்த 17 பேரைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையாவது தனது வலையில் சிக்க வைத்துள்ளாரா என்பதைக் கண்டறிய முயற்சிப்போம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
ரிமாண்டின் போது ரமேஷின் மோசடி குறித்த கூடுதல் தகவல்களைப் பெற புவனேஸ்வர் மகளிர் காவல்நிலைய பொறுப்பாளர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தாஸ் கூறினார். ரமேஷின் மொபைல் போன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும். அவரது நிதி பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
 
ரமேஷ் பிடிபட்டது எப்படி?
 
"இவரைப் பல நாட்களாகத் தேடி வந்தோம். அவரைப்பிடிக்க வலை விரித்தோம். ஆனால், சில மாதங்களாக புவனேஷ்வரை விட்டு வெளியே வசித்து வந்த அவர், தனது மொபைல் எண்ணையும் மாற்றியுள்ளார். அதனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. கடைசியாக ஞாயிற்றுக்கிழமை அவர் புவனேஷ்வருக்கு வந்துள்ளார் என்று எங்களுக்கு ஒரு துப்பு கிடைத்தது. அதே இரவில் அவரது கண்ட்கிரி குடியிருப்பில் இருந்து அவரைப் பிடித்தோம்,"என்று ரமேஷ் கைது செய்யப்பட்ட தகவலை அளித்த டிசிபி தாஸ் குறிப்பிட்டார்.
 
அவரால் ஏமாற்றப்பட்ட 17 பெண்களில் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட புகார் தொடர்பாக புவனேஷ்வர் போலீசார் ரமேஷை தேடிவந்தனர். ரமேஷின் கடைசிப் பலிகடா, டெல்லி பள்ளி ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஆவார்.
webdunia
தன்னை சுகாதார அமைச்சகத்தின் துணை தலைமை இயக்குநர் என்று கூறிக்கொண்ட ரமேஷ், இந்தப் பெண்ணுடன் நட்பை வளர்த்துக்கொண்டார். பின்னர் 2020இல் குபேர்புரியில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் அவரை திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் சில நாட்கள் தங்கியிருந்த ரமேஷ், தனது புது மனைவியுடன் புவனேஷ்வர் வந்து கண்ட்கிரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார்.
 
டெல்லியைச் சேர்ந்த இந்தப் பெண் புவனேஸ்வரில் தங்கியிருந்தபோது, ரமேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்ற விஷயம் அவருக்கு எப்படியோ தெரிய வந்தது. இதை உறுதிசெய்துகொண்ட பிறகு அவர், 2021 ஜூலை 5ஆம் தேதி புவனேஷ்வரில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் ரமேஷுக்கு எதிராக புகார் அளித்துவிட்டு டெல்லிக்குத் திரும்பினார்.
 
புவனேஸ்வர் போலீசார் ரமேஷ் மீது ஐபிசி 498 (ஏ), 419, 468, 471 மற்றும் 494 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால் இந்த விஷயம் ரமேஷுக்கு தெரிய வந்ததும் அவர் தனது மொபைல் எண்ணை மாற்றிக்கொண்டு புவனேஷ்வரில் இருந்து தலைமறைவானார்.
 
இந்தக் காலகட்டத்தில் அவர் தனது மற்றொரு மனைவியுடன் குவஹாத்தியில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 
ஏழு மாதங்களுக்குப் பிறகு ரமேஷ் புவனேஷ்வருக்குத் திரும்பினார். ஆனால் ரமேஷ் கண்ட்கிரி பிளாட்டுக்கு திரும்பியவுடன் தனக்குத் தகவல் தர டெல்லியைச் சேர்ந்த அவரது மனைவி ஒரு நபரை ஏற்பாடு செய்து வைத்துள்ளார் என்பது அவருக்குத் தெரியாது. அந்த பெண் உடனடியாக புவனேஷ்வர் போலீசிடம் இந்த தகவலை கொடுத்தார். பல ஆண்டுகளாக பல்வேறு பெண்களையும் போலீசாரையும் ஏமாற்றி வந்த ரமேஷ் இறுதியாக போலீசாரின் பிடியில் சிக்கினார்.
 
பாதிக்கப்பட்ட முதல் பெண்
ஒடிஷாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பாட்குரா பகுதியைச் சேர்ந்த ரமேஷூக்கு 1982-ம் ஆண்டு முதல் திருமணம் நடந்தது. இவருக்கு முதல் மனைவி மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் டாக்டர்கள். இவர்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
webdunia
அவரது முதல் திருமணத்திற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2002ஆம் ஆண்டில், அவர் ஒரு பெண்ணை தனது வலையில் சிக்கவைத்தார். அந்தப் பெண் ஜார்கண்ட் மாநிலத்தில் வசிப்பவர் என்றும், ஒடிஷாவின் துறைமுக நகரமான பாரதீப்பில் தனியார் நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் டாக்டராக இருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
சில காலத்திற்குப்பிறகு இந்த பெண் அலகாபாத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார், பின்னர் ரமேஷ் அங்கு சென்று அந்த "மனைவி" யுடன் வாழத் தொடங்கினார். மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிக்கத்தொடங்கினார்.
 
ரமேஷ் டெல்லியை சேர்ந்த ஆசிரியை மனைவியிடம் 13 லட்சம் ரூபாயும், மத்திய ஆயுதப்படை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் 10 லட்சம் ரூபாயும் மோசடி செய்துள்ளார் என்று புவனேஷ்வர் போலீசாருக்கு இதுவரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மற்ற மோசடிகள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
 
பெண்களை சிக்கவைத்தது எப்படி?
 
ரமேஷ் தனது அடுத்த இலக்கை மிகவும் கவனமாக தேர்வு செய்வார். தனது இரையைக் கண்டுபிடிக்க, அவர் பெரும்பாலும் திருமணத்துக்கு வரன் தேடும் இணைய தளங்களை நாடினார். வயதான பிறகும் திருமணம் ஆகாத அல்லது விவாகரத்து பெற்ற அல்லது கணவரைப் பிரிந்த பெண்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார். அந்தப் பெண் வேலையில் இருக்கிறாரா அல்லது நிறைய பணம் வைத்திருக்கிறாரா என்பதில் அவர் சிறப்பு கவனம் செலுத்தினார்.
 
ரமேஷ் தனது இலக்கை நிர்ணயித்த பிறகு, அவர்களுடன் மேட்ரிமோனியல் தளம் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார். நேரில் சந்தித்த பிறகு, அவர் தனது சுமூகமான பேச்சால் அவர்களின் நம்பிக்கையை வெல்வார்.
 
ரமேஷ் தன்னை ஒரு மருத்துவர் என்றும் சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி என்றும் சொல்லிக் கொள்வார். அவர் பாதிக்கப்பட்டவரின் மனதில் நம்பிக்கையை வளர்க்க பல போலி அடையாள அட்டைகளை தயாரித்து வைத்துள்ளார் என்று புவனேஷ்வர் காவல்துறை தெரிவிக்கிறது.
 
இது தவிர சுகாதார அமைச்சகத்தின் முத்திரை இடப்பட்ட போலி கடிதங்களையும் அவர் பயன்படுத்தி வந்தார். ரமேஷ், பிதுபூஷண் ஸ்வைன் மற்றும் ரமணி ரஞ்சன் ஸ்வைன் என்ற பெயர்களில் போலி அடையாள அட்டைகளை தயாரித்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரது கண்ட்கிரி குடியிருப்பில் இருந்து அவை மீட்கப்பட்டன.
 
ரமேஷ் ஒரு மருத்துவர் அல்ல. ஆனால் அவர் கொச்சியில் இருந்து பாரா மெடிக்கல், லேபரேட்டரி டெக்னாலஜி மற்றும் பார்மசியில் டிப்ளமோ படிப்பை முடித்தவர். அதன் காரணமாக அவருக்கு மருத்துவ அறிவியலில் கொஞ்சம் ஞானம் இருந்தது. இந்த அறிவு பெண்களை ஏமாற்ற பயன்பட்டது.
 
மற்ற மோசடி வழக்குகள்
ரமேஷ் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதோடு கூடவே வேறு பலரையும் ஏமாற்றி வந்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாகக் கூறி இளைஞர்கள் பலரைத் தன் வலையில் சிக்கவைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக, ஐதராபாத் காவல்துறையின் சிறப்பு அலுவல் படையினரால் (STF) அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் தனது மோசடி வேலையை தொடங்கினார்.
 
இது தொடர்பாக புவனேஷ்வர் காவல்துறை, ஐதராபாத் காவல்துறையை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெற்று வருவதாக டிசிபி தாஸ் கூறினார்.
 
இதுதவிர கடந்த 2006-ம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற்றுத்தருவதாக போலி ஆவணம் கொடுத்து கேரளாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரமேஷ் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
இதுமட்டுமின்றி மருத்துவக் கல்லூரி திறக்க அனுமதி பெற்றுத்தருவதாக்கூறி ஒரு குருத்வாராவிடம் 13 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார் ரமேஷ்.
 
நாட்டில் பல மாநிலங்களில் பலரை ஏமாற்றி, இரண்டு முறை கைது செய்யப்பட்ட பிறகும்கூட ரமேஷ் இதுவரை சட்டத்தின் பிடியில் ஏன் வரவில்லை என்பதும் தனது தந்திர புத்தியை பயன்படுத்தி பல பெண்களை திருமணம் செய்து, மேலும் பலரிடம் மோசடி செய்தது எப்படி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலகலக்கும் உள்ளாட்சி தேர்தல்! – காலையிலேயே வந்து ஓட்டு போட்ட பிரமுகர்கள்!