ஊடகவியலாளர் எக்னளிகொட வழக்கு விசாரணையை சீர்குலைக்க ராஜபக்ஷ குடும்பத்தினர் சதி: மனைவி குற்றச்சாட்டு
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (18:12 IST)
ஊடகவியலாளர் பிரகீத் எக்னளிகொட காணாமல்போனது தொடர்பான வழக்கின் விசாரணைகளை சீர்குலைப்பதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவரது மனைவி சந்தியா எக்னளிகொட குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கு விசாரணை ஒன்றுக்காக உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தபோதே இதனை அவர் தெரிவித்தார்.
எக்னளிகொட காணாமல்போன வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரிகளின் சார்பில் வழக்கறிஞர் காலிங்க இந்திரதிஸ்ஸ ஆஜராகி வருகிறார்.
காலிங்க இந்திரதிஸ்ஸ பல முறை தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக கூறிய சந்தியா, ஐ.நாவின் மனித உரிமை பேரவை கூட்டங்களுக்குச் சென்று, தான் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை சுமத்திவருவதாகவும் கூறினார்.
விசாரணைகளை சீர்குலைத்து சந்தேக நபர்களை காப்பதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் செயற்பட்டு வருவதை இதன் முலம் உறுதி செய்துகொள்ள முடியுமென்றும் சந்தியா எக்னளிகொட கூறினார்.
இதேவேளை பிரகீத் எக்னளிகொட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நான்கு ராணுவ அதிகாரிகள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக எதிர்வரும் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் போலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
எந்த விதமான காரணங்களுமின்றி தங்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக கூறிய அவர்கள், தங்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.