ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் காலக்கெடு முடிவடைந்த விசாக்கள், பர்மிட்டுகளுக்கு மேலும் ஒரு மாதம் காலக்கெடு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் விமானங்கள் ரத்தாகி ஐக்கிய அரபு அமீரகத்தில் மாட்டிக்கொண்ட வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது அந்நாட்டின் ஃபெடரல் அத்தாரிட்டி ஃபார் ஐடன்டிட்டி அன்ட் சிட்டிசன்ஷிப் (ICA).
கொரோனா வைரஸ் பிரச்சனை தொடங்கிய நாளில் இருந்து அந்நாட்டில் மாட்டிக்கொண்ட வெளிநாட்டவர்களின் காலாவதியாகும் விசா மற்றும் பர்மிட்டுகளுக்கு காலக்கெடுவை நீட்டித்து வருகிறது அந்நாடு.
இதன் மூலம் காலக்கெடு முடிவடைந்த விசா, பர்மிட் வைத்திருப்பவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் கூடுதல் காலத்துக்கு அபராதத் தொகை ஏதும் செலுத்தத் தேவையில்லை.
இதன்படி சமீபத்திய காலநீட்டிப்பு நேற்று ஆகஸ்ட் 10-ம் தேதியோடு முடிவடையும் நிலையில், நேற்றே இந்தக் காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது ஐ.சி.ஏ. இந்த ஒரு மாத கால நீட்டிப்பு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதில் இருந்து ஒரு மாத காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறும், காலாவதியான விசா, பர்மிட் உடையவர்களுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.