சபரிமலைக்கு செல்ல முடியாமல் போவது ஏன்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
தென்னிந்தியாவில் சபரிமலைக்கு செல்வது மிகவும் பிரபலமான வழிபாடாக இருக்கிறது. ஆனால் ஒரு சில ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட சபரிமலை செல்ல முடியவில்லை என வருந்துகின்றனர். அவர்கள் மட்டுமல்ல தங்கள் பரம்பரையில் எந்த ஆணும் சபரிமலை செல்லவில்லை என்று கூறுகின்றனர்.
ஒரு சிலர் மாலை போட்டாலும் சபரிமலைக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவதில்லை. ஏதாவது காரணத்திற்காக பாதியிலேயே மாலையை கழட்டும் நிலை ஏற்பட்டு விடுகிறது என வருத்தம் தெரிவிக்கின்றனர்? இது ஏன?
பதில்: சபரிமலை முற்றிலுமாக சனியின் ஆதிக்கத்தில் இருக்கக் கூடிய இடமாகும். சனிக்கு உரியதான கருப்பு, நீல நிற ஆடைகளை உடுத்தி பக்தர்கள் மலைக்குச் செல்கின்றனர். முகச்சவரம் செய்யாமல் இருப்பதும், குடுமி வைத்துக் கொள்வதும் சனியின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது.
அடர்ந்த காடுகள் வழியாக நடந்து சென்று, காட்டாறு, நதிகளில் குளிப்பதும் கூட சனியின் ஆதிக்கமாகவே கருதப்படுகிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் சனி சிறப்பாக இல்லாத பட்சத்தில் அவரால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள சபரிமலை செல்வது நல்லது. ஒரு சிலருக்கு தொடர்ந்து சபரிமலை செல்ல முடியாதபடி தடங்கல் ஏற்பட்டால், சனி பகவானுக்கு உரிய ப்ரீத்தி செய்து விட்டு மாலையிடலாம். அதற்கடுத்தபடியாக மாலை போடும் நாள், இருமுடி கட்டும் தினம், ஐயப்பனை தரிசிக்கும் நேரம் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ப கணித்து அந்த நேரத்தில் சென்றால் எந்தத் தடங்கலும் ஏற்படாது. பயணமும் சிறப்பாக இருக்கும். பொதுவாகவே, ஆயில்யம், பூரம், கேட்டை, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் மாலை அணிந்தாலோ, மலைக்கு சென்றாலோ தடங்கல்கள் ஏற்படுத்தும்.
சமீபத்தில் நான் மற்றும் எனது நண்பர்கள் உள்ளிட்ட பலர் கைலாயத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டோம். அந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்து தரும் முக்கிய நபர் குறிப்பிட்ட தேதியை கூறி, அன்றைய தினம் பயணத்தை துவங்குவதாக கூறினார். பஞ்சாங்கத்தைப் பார்த்ததில் அன்றைய தினம் விசாகம் நட்சத்திரம் என்று தெரிந்தது. இதையடுத்து அவரிடம் பயணத் தேதியை மாற்றச் சொல்லி காரணத்தையும் விளக்கினேன். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், இறைவனை தரிசிப்பதற்காக செல்கிறோம். இதில் சகுனம், நாள்-நட்சத்திரம் பார்க்கத் தேவையில்லை என்று கூறினார். முடிவில் குறிப்பிட்ட தினத்தில் அவர்கள் பயணம் சென்றனர். நானும், சில நண்பர்களும் செல்லவில்லை. பயணம் முடிந்து திரும்பிய அவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அப்போது அவர் சொன்ன செய்தி என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. கைலாயப் பயணத்தின் போது ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டது மட்டுமின்றி, பயணத்தின் போது இருவர் உயிரிழந்ததாகக் வருத்தத்துடன் கூறினார். பகவான் இருக்கிறார் என்று கூறினீர்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே பகவான்தான் ஜோதிடத்தையும், நாள்-நட்சத்திரம் பார்க்கும் கலையையும் மனிதர்களுக்கு அளித்து அதன்படி செயல்பட வலியுறுத்துகிறார். அதனைப் பின்பற்றாமல் சென்றதால் இழப்புகளை சந்தித்துள்ளீர்கள் என்று அவருக்கு மீண்டும் கூறினேன். எனவே, சபரிமலை பயணத்தின் போதும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ற தேதியில் முக்கிய விடயங்களை செய்தால், சபரிமலைப் பயணம் தடைபடாமல் இருக்கும்.