சனி தசை நடக்கும் போது ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
பொதுவாக ஜோதிடத்தைப் பொறுத்த வரை ராகு, கேதுவைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே கிரக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனியால் எந்த ஒரு நல்ல காரியம் நடந்தாலும் அதனை மக்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவரால் ஏதாவது கெட்டது நடந்தால் உடனே ஒரு சிலர் “சனியனே” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக எந்தக் கெட்ட விடயம் நடந்தாலும் அதற்கு சனியும் ஒரு காரணம் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டு விட்டது. ஆனால் அது உண்மை அல்ல. உதாரணமாக எமதர்ம ராஜா என்பவர் மனிதனின் ஆயுள் முடிந்தது அவனது உயிரைப் பறித்துக் கொண்டு போகிறார்.
அவரைப் பொறுத்தவரை சாகப் போகும் நபர் நல்லவரா/கெட்டவரா அவர் புண்ணியம் செய்துள்ளாரா அல்லது பாவம் செய்துள்ளாரா என்று கணக்குப் பார்க்க மாட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பணியை அவர் நிறைவேற்றுகிறார். அதற்காக அவரை கொடூரமானவர் எனக் கூறிவிட முடியாது. இதே கருத்து சனி பகவானுக்கும் பொருந்தும்.
ஊழ்வினையை உணர்த்தக் கூடிய உறுதியான கிரகம் சனி. அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் அவருக்கு விதிக்கப்பட்ட பலன்களை பாகுபாடின்றி வழங்கக் கூடிய வல்லமை சனிக்கு உண்டு. ஆனால் மனிதநேயம், இரக்க சுபாவம் ஆகியவற்றிற்கு உரியதும் சனி பகவானே.
ஒருவருக்கு சனி தசை வரும் போது அந்த ஜாதகர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார். எனவே அந்த ஜாதகதாரர்கள் சனி தசையில் அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இது கடகம், சிம்மம் லக்னத்திற்கும் பொருந்தும்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும். ஒரு சிலர் சனியை புத்தருக்கு இணையாகக் கூறுவர். எதன் மீது நாம் பற்று அதிகம் வைக்கிறோமோ அவற்றால்தான் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
சனி தசை நடக்கும் போது உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் ஆடை வரை எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். பட்டாடைகள் உடுத்தினால் அதனை நீக்கும் விதமாக உடலில் சில உபாதைகளை (அலர்ஜி) சனி ஏற்படுத்துவார். இதன் காரணமாக பருத்தி உடைக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
மேலும், சனி தசையின் போது வாயுத்தொல்லைகள் ஏற்படும். எனவே வறுத்த, பொறித்த உணவு வகைகளை சாப்பிட்டால், அது ஒட்டுக்குடல் நோயில் முடியும் வகையில் சனியின் ஆதிக்கம் இருக்கும். அதனால் காய்கறிகள், அவிக்காத உணவு, இயற்கை உணவுகளை உண்ண வேண்டும். பட்டினிக்கு உரிய கிரகமும் சனிதான். எனவே அரை வயிறு சாப்பாடு எடுத்துக் கொண்டாலே நலமாக இருக்கலாம்.
மாணவர் பருவத்தில் ஒருவருக்கு சனி தசை நடந்தால், அவர்கள் வீட்டில் படிப்புக்காக பெற்றோர் ஏற்படுத்தித் தரும் வசதிகளை அனுபவிக்க முடியாமல் போகும். உதாரணமாக இணையதள இணைபுடன் கூடிய கணினியை மகனுக்காக பெற்றோர் வாங்கித் தந்தாலும், அந்த மாணவன் அதில் பாடல்கள் கேட்பதும், விளையாடுவதுமாக பொழுதைக் கழிப்பார்.
எனவே, சனி தசை நடக்கும் போது மாணவர்களை விடுதியில் தங்கிப் படிக்க வைப்பது ஒரு வகையில் பலனளிக்கும். அதே சமயம் சனிக்கு தனிமை பிடிக்காது. அதனால் குழுக்கல்வி (குரூப் ஸ்டடி), குழுவாக விளையாடுவது, கூட்டு முயற்சி போன்ற நடவடிக்கைகள் மூலம் மாணவர்களை முன்னேற்ற வேண்டும். அதற்கு விடுதி சிறந்த வழி.
சனி தசை வந்தால் சில இழப்புகளும், ஏக்கங்களும் ஏற்படுவது வாடிக்கைதான். உதாரணமாக வீட்டிலேயே வளர்ந்த மாணவன் விடுதிக்கு சென்றால், பெற்றோரைப் பிரிந்த ஏக்கமும், விரும்பிய உணவு வகைகளை சாப்பிட முடியாத (இழப்பு) நிலையும் ஏற்படும். இதனை மாணவர்கள் ஆக்கப்பூர்வமான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சிறிய இழப்புகளை நாம் ஏற்படுத்திக் கொண்டால், பெரிய இழப்புகளை தவிர்க்கலாம்.
வசதியான வீட்டில் வாழ்ந்த மாணவன் விடுதிக்கு சென்ற பின்னர் வாழ்க்கையின் அனைத்து தரப்பு மாணவர்களுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். உதாரணமாக அவனுக்கு நண்பனாக அமையும் மாணவன் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். அவனுக்கு பணத்தின் அருமை தெரிந்திருக்கும். எனவே அவன் மூலமாக செல்வந்தர் வீட்டு மாணவனும் பணத்தின் பெருமையை உணர்ந்து கொள்வான். இப்படி வாழ்க்கையின் பிற பரிணாமங்களையும் சனி தசை உணர்த்திச் செல்லும்.
சனிதசை வரும் போது அதிகம் ஆசைப்படாமல், இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து, நேர் வழியில் சம்பாதித்தால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம். மாறாக அதிகம் ஆசைப்பட்டால் அதற்குரிய பாதிப்புகளை சந்தித்தே தீர வேண்டும்.