Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காகத்திற்கு அன்னமிடுவது பற்றி பல கருத்துகள் நிலவுகிறது. இது எதனால்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
காகம்
, புதன், 18 நவம்பர் 2009 (13:46 IST)
காகத்திற்கு அன்னமிடுவதை பெரும்பாலான மக்கள் இன்றளவிலும் கடைப்பிடித்து வருகின்றனர். அமாவாசை மற்றும் முன்னோரின் திதி நாட்களில் காகத்திற்கு படையல் வைத்த பின்னரே குடும்பத்தினர் உட்கொள்கின்றனர். மற்ற பறவைகளுக்கு இல்லாத முக்கியத்துவம் காகத்திற்கு கொடுக்கப்படுவது ஏன்? இது பற்றி ஜோதிடத்தில் ஏதாவது கூறப்பட்டுள்ளதா?

பதில்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை நவகிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாகனம் கூறப்பட்டுள்ளது. அதன்படி சனி பகவானின் வாகனமாக காகம் உள்ளது. ஆனால், ஆதிகால ஜோதிட நூல்களில் கழுகுதான் சனியின் வாகனம் எனக் கூறப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் கழுகு என்பது காகமாக (அண்டங் காக்கை அல்லது கருங்காக்கை) மாற்றப்பட்டு விட்டது.

உலகில் உள்ள பெரும்பாலான மதங்களில் பின்பற்றப்படும் தெய்வ வழிபாடு, விரதம், நோன்பு ஆகியவை ஜீவகாருண்யத்தை (பிற உயிர்களுக்கு உதவுதல்) வலியுறுத்தக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக விரதம் கடைப்பிடித்து அதனை நிறைவு செய்யும் போது நாம் உண்ணும் உணவை சிறிது தானம் செய்த பின்னரே உட்கொள்ள வேண்டும்.

விரத காலத்தில் பசி அதிகமாக இருக்கும். ஆனாலும், பசியின் போது கூட பிற உயிர்களுக்கு தானம் செய்வதை மனிதன் மறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவே மேற்கூறிய சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது.

காகம் என்பது பரவலாக அனைத்து இடங்களிலும் இருக்கக் கூடிய ஒரு பட்சி. சனி பகவானின் ஆசி பெற்ற பறவை என்றும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. காகத்திற்கு அன்னமிட்டால், அது சனி பகவானுக்கே தானம் வழங்கியது போலாகும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.

மேலும், பிற பறவைகளை விட சற்று தைரியமாகவும், அழைத்தவுடன் தனது சுற்றத்துடன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுச் செல்வதால், காகத்துடன் மனிதர்களின் நட்புறவு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.

பல வீடுகளில் முன்னோர்களுக்கு திதி படைத்த பின்னர் அந்த உணவை காகத்திற்கு முதலில் தானம் செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆண்டுதோறும் திதி படைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஆண்டில் எந்தக் காகமும் அந்த வீட்டில் வைத்த அன்னதான உணவை சாப்பிடவில்லை. அந்தக் குடும்பத்தினரும் எத்தனை முறை கூப்பிட்டுப் பார்த்தும், காகம் அன்னத்தை தொடவில்லை.

பின்னர் அந்த வீட்டின் மருமகள், படையலின் போது தனது மாமனாருக்கு வேஷ்டி வைக்க மறந்து விட்டதாக வருத்தத்துடன் பிறரிடம் கூறினார். எனவே, விரதத்தின் தன்மையையும் சோதிக்கும் வல்லமை காகத்திற்கு உண்டு என்பதை இந்த நிகழ்வின் மூலம் வாசகர்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

விரத காலங்களில் காகத்திற்கு அன்னமிட்டு, அடியார் ஒருவருக்கு உணவளித்த பின்னரே மனிதர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என சில நூல்களில் கூறப்பட்டு உள்ளது.

காகத்தின் ரூபத்தில் முன்னோர்கள் நம்மிடம் இருக்கிறார்கள், பேசுகிறார்கள் என்ற ஆழமான நம்பிக்கை இன்றளவிலும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது தவறானது அல்ல. சனி பகவானின் வாகனமான காகம், கர்ம வினைகளை மனிதர்களுக்கு நினைவூட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil