Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னிக்கு பெயர்ச்சியாகும் சனியால் ஆசியாவில் என்ன மாற்றங்கள் நிகழும்?

Advertiesment
கன்னிச்சனி
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

வரும் செப்டம்பர் 26ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதுவரை சிம்மத்தில் இருந்த சனி, அன்றைய தினம் கன்னி ராசிக்கு வருகிறார். சனி பகவானின் நட்பு வீடாக கன்னி திகழ்கிறது. அதேபோல் புதனின் சொந்த வீடாகவும் கன்னி திகழ்கிறது. ஒரு சில பண்டைய ஜோதிட நூல்களில் சனியும், புதனும் அலி கிரகங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஒரு அலி கிரகம் (சனி) மற்றொரு அலி கிரகத்தின் (புதன்) வீட்டிற்கு வருவதால் உலகெங்கும் முறையற்ற பாலுறவு, ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட சம்பவங்கள் உயர்ந்து கொண்டே செல்லும். மற்றொருபுறம் அடக்குமுறைகள் அதிகரிக்கும்.

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சட்டத்தை வளைக்கவும், எதிராளிகளை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.

ஆனால் கன்னி, புதனின் வீடு என்பதால் சாதாரண மக்கள் கூட அடக்குமுறையை எதிர்த்து போராடத் துணிந்து விடுவார்கள். எனவே, உலகளவில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடிப்பது சகஜமாகிவிடும்.

அடுத்ததாக, புதன் வீட்டிற்கு சனி வருவதால் மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிப்படைவர். புதுநோய்கள் உருவாகும். கல்வியில் மாற்றங்கள் உருவாகும். பாடச்சுமை குறையும். மாணவர்களிடையே வக்கிர புத்தி அதிகரிக்கும். சிறுவயதிலேயே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படும். ஆசிரியர்-மாணவர் உறவு முறையில் மோதல் போக்கு காணப்படும்.

புதன் சட்டத்திற்கு உரிய கிரகம் என்பதால் வழக்கறிஞர்கள் பாதிப்படைவர். வருமானம் குறைதல், அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுதல் போன்ற சிக்கல்கள் வழக்கறிஞர்களுக்கு ஏற்படும்.

கைத்தொழில், சுதேசி தொழில் ஆகியவை மிகவும் நலிவடைவது மட்டுமின்றி, இருந்த இடம் தெரியாமல் போகலாம். பண்டைய கலைகள் அழிவதற்கும், சில மொழிகள் காணாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

புதன் கல்விக்கு உரிய கிரகம் என்பதால், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், புரட்சிகரமான எழுத்தாளர்கள், கட்டுரையாளர்களுக்கு அடக்குமுறை அதிகரிப்பதால் பாதிப்பு ஏற்படும். ஆனால் அடக்குமுறையைத் தாண்டி இவர்கள் வெற்றி பெறுவார்கள்.

உலகளவில் ஒத்த சிந்தனை உடைய சிந்தனையாளர்கள் ஒருங்கிணையும் காலகட்டமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். சுதந்திரம் இழந்தவர்கள், இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்காக போராட்டம் நடத்துவார்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியால் உலகளவில் சீனா வலுப்பெறும். இதுவரை உலக நாடுகளுக்கு பயந்து, மறைமுகமாக சில காரியங்களை செய்து வந்த சீனா, இனி வெளிப்படையாகவே அவற்றை செய்யத் துவங்கும். இதன் காரணமாக கண்டனத்தையும், எதிர்ப்பையும் அந்நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சீனாவில் சில நரித்தனங்களை வெளியுலகம் உணர்ந்து கொள்ளும்.

மின்னணு சாதனங்கள் மேம்படுத்தப்படும். உதாரணமாக செல்போனில் கூட நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். பயங்கரவாதிகளின் கை ஓங்கும். குறிப்பாக இனி நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் நுணுக்கமாக இருக்கும். விஷக் கிருமிகளை (பேக்டீரியா, வைரஸ்) பரப்பி தாக்குதல் நடத்தப்படலாம்.

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். எனினும், 2010 மே மாதம் முதல் உலகளவில் பொருளாதாரம் மேம்படும். ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கும். பங்கு வர்த்தகம் மே மாதத்திற்கு பின்னர் ஸ்திரப்படும். பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கன்னியில் சனி அமர்வதால் பணம் படைத்தவர்களுக்கு மேலும் செல்வம் சேரும். பணக்காரர்களுக்கு மட்டுமே தரமான கல்வி என்ற நிலை ஏற்படும். கல்வியை வைத்து சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்தியாவின் அரசியல் சூழல்: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஆள்பவர்களுக்கு எதிரான குரல் மேலோங்கும். எதிர்க்கட்சிகளின் குரல் உயரும். இந்திய நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும்.

அந்நிய சக்திகளுக்கு இந்திய அரசு அடிபணிந்து செல்வதற்கு வாய்ப்புள்ளது. நாட்டின் கடன் விகிதம் அதிகரிப்பதுடன், புதிதாக கடன் கேட்கும் நிலையும் ஏற்படும். அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும். அயல்நாட்டு சக்திகளுக்கு இந்தியா மறைமுகமாக அடிமை ஆவதற்கான நிலையை கன்னிச் சனி உருவாக்கும்.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழிக்கு ஏற்ப அரசு பதவிகளில் உள்ள சிலர் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், வேறு சிலர் பதவியைப் பெறவும் முறையான பண்பாடு, கலாசாரத்தை மீறவும் வாய்ப்புள்ளது.

கன்னிச் சனியால் சிறுபான்மை எனக் குறிப்பிடப்படும் மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான மதத்திற்கு மாறுவார்கள். இதனை அரசுகள் கண்டும் காணாமல் இருக்கும்.

மனிதனை அச்சுறுத்தும் வகையில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும். அடுத்தாண்டு மே மாதம் முதன் சுனாமி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் அழிவைச் சந்திக்கும். அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை சூரிய வட்டம், சந்திர வட்டம் என இரு பிரிவு உள்ளது. இதுவரை சனி பகவான் சந்திர வட்டத்தில் இருந்தார். வரும் செப்டம்பர் 26ஆம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சி பெறுவதன் மூலம் அவர் சூரிய வட்டத்திற்குள் வருகிறார்.

எனவே, வெப்ப நிலை கடுமையாக உயரும். உலகின் சீதோஷ்ண நிலை மாறும். பருவக்காற்று, மழையளவு ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். நெல் விளைந்த இடத்தில் கோதுமை விளையலாம். குறிப்பிட்ட பயிர் அல்லது உணவு வகை ஒரு குறிப்பிட்ட பகுதியில் இதுவரை விளைந்ததில்லை என்ற நிலை மாறும்.

கன்னிக்கு வரும் சனி உணவுப் பஞ்சத்தையும் உருவாக்கும். முறையான சீதோஷ்ண நிலை இல்லாததால் உணவு உற்பத்தி குறையும். இதற்கு பருவநிலை மாறிப் பொழியும் மழையும் காரணமாகும்.

மக்களிடையே இருக்கும் உழைக்கும் எண்ணத்தை ஒழித்து அவர்களை சுகபோகிகளாக மாற்றும் சக்தியும் கன்னிச் சனிக்கு உண்டு. மக்களிடையே மெத்தனப்போக்கு அதிகரிக்கும். இதன் காரணமாக சாதாரண விடயங்களுக்காக நடத்தப்படும் கொலைக் குற்றங்கள் அதிகரிக்கும். மனவளம் குன்றியவர்களின் எண்ணிக்கையும் உயரும். உலகெங்கும் தற்கொலை அதிகரிக்கும். மனம் விட்டு பேசமுடியாத நிலைக்கு (மன இறுக்கம்) மக்கள் தள்ளப்படுவார்கள். கணவன்-மனைவி இடையே சச்சரவுகள் அதிகரிக்கும்.

சட்டத்திற்கு புறம்பாகச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே தருணத்தில் இறை நம்பிக்கை, பக்தியை உலகெங்கும் தழைக்கச் செய்வதுடன், மனிதர்களுக்கு உயிர் மீதான பயத்தை கன்னிச் சனி அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil