Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்?

புத்திர தோஷம் என்றால் என்ன? அதனை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

பதில்: புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும்.

“சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.

ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). ஆனால் அவரது ஜாதகத்தில் செவ்வாய் 8இல் மறைந்திருந்தது. அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினேன்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், இதுவரை தனது மனைவி 4 முறை கர்ப்பம் தரித்தாலும், சிறிது நாட்களிலேயே கரு கலைந்து விடுவதாக வருத்தத்துடன் கூறினார். கடக லக்னம், சிம்ம லக்னதாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6 அல்லது 8இல் மறைந்தால் இதுபோன்று நிகழும்.

அதேபோல் ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்திற்கு முன்னர் பொருத்தம் பார்க்கும் போதே இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதேபோல் “புத்திரக்காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூனியம” என்ற ஜோதிட மொழியும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்திரக்காரகன் குரு, புதனின் வீட்டில் (மிதுனம், கன்னி) இருந்தால் புத்திர சூன்யம் (ஆண் வாரிசு இல்லாமை) ஏற்படும் என்பதே இதன் உள்ளர்த்தம்.

ஆனால், குரு பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது லக்னத்திற்கு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, புத்திர தோஷத்தைப் பொறுத்த வரை ஜோதிட ரீதியாக பல விடயங்களை கணக்கிட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil