நவகிரகங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் யாது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
ஆதி காலங்களில் அதாவது கி.மு. காலகட்டத்தில் அமைந்த கோயில்களில் நவகிரக வழிபாடு கிடையாது. கி.பி. காலகட்டத்தில்தான் - 4வது நூற்றாண்டுக்கு பிறகு, ராஜராஜ சோழனின் வருகைக்கு பின்னரே நவகிரக வழிபாடு ஏற்பட்டுள்ளது.
பல கோயில்களில் பிற்காலங்களிலேயே நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரலாற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தீவிர இறை நெறியாளர்கள் சிவனை ஆதியும், அந்தமுமாக வழிபடுபவர்கள், நவகிரக வழிபாட்டை கடைபிடிப்பதில்லை. சிவனைத் தாண்டி என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணமே இதற்கு காரணம். நாளென்ன செய்யும் கோள் என்ன செய்யும் என்ற திருக்கோளர் பதிகம் பாடலின் பொருள் இதுதான்.
நவகிரகங்கள் என்பது இறைத் தூதர்களாக கருதப்படுகின்றனர். இறை-ஏவல் ஆட்கள் என்றும் கூறலாம். அதாவது இறைவன் நினைத்ததை, அவரது உத்தரவை நிறைவேற்றும் ஊழியர்கள்.
இதன் காரணமாகவே மூலவரை வணங்கினால், அவரது ஊழியர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்பது தீவிர இறை நெறியாளர்கள், சைவப் பிரியர்கள், அடியார்களின் தீர்க்கமான கருத்து.
ஆனால் மற்றொரு பிரிவினர் இறைவனுக்கே நேரம் காலம் உண்டு என்று நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, திருவண்ணாமலை போன்ற கோயில்களிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் அக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், அந்த கோயிலுக்கு செல்பவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
நம்முடைய இந்து தர்மப்படி, நாம் உருவாக்கும் சட்ட திட்டத்திற்கு நாமே கட்டுப்பட வேண்டும். அதாவது இறைவனுக்கும் ஜென்ம நட்சத்திரம் உண்டு என்ற வகையில் அவரும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற வாதமும் உள்ளது.
கடவுளுக்கு எவ்வாறு நட்சத்திரம், ராசி கணிக்கிறீர்கள்?
அது அவர்களுடைய பிறந்த நாள் என்று ஏதும் இல்லையாதலால், அவதரித்த நாளைக்கொண்டு நட்சத்திரத்தை கணித்துள்ளனர். சிவபெருமான் ருத்திர அவதாரமெடுத்ததை அடிப்படையாக்க்கொண்டு அவருக்கு திருவாதிரை நட்சத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல சிவனுக்கு நேரம் கெட்டிருந்தபோது அவர் பிச்சையெடுத்த கதையெல்லாம் உள்ளது.
இப்படித்தான் ராமனுக்கு நவமியும், கிருஷ்ணனுக்கு அஷ்டமியும் உள்ளது.
நவகிரகங்களை வழிபடும் முறை: நவகிரகங்களை வழிபடுவது நல்லது என்றாலும், எந்த ஒரு கோயிலிற்குச் சென்றாலும் மூலவரை வழிபடாமல் வெறும் நவகிரக வழிபாட்டை மற்றும் மேற்கொள்வது தவறானது.
முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னர், அந்த கோயிலின் மூலவரை வணங்கி விட்டு, இறுதியாகவே நவகிரக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதுவே சிறந்த பலன்களை அளிக்கும்.
மூலவரை வழிபடாமல் நவகிரங்கங்களை மட்டும் வழிபடுவது எதிர்மறையான பலன்களையே கொடுக்கும்.