கணவன் அல்லது மனைவிக்கு மோசமான தசை நடக்கும் போது குழந்தை பிறக்கலாமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
வாசகர் கேள்வி: எனக்கு ராகு தசை முடியப் போகிறது. ஆனால் என் கணவருக்கு விரைவில் ராகு திசை துவங்குகிறது. இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என உறவினர்கள் கூறுகின்றனர்? இதில் உண்மை உள்ளதா?
பதில்: பொதுவாக, ‘ராகு கொடுப்பான் கேது கெடுப்பான்’ என ஜோதிடத்தில் கூறுவர். எனவே ராகு தசையில் குழந்தை பெற்றுக் கொள்வது தவறு எனக் கூற முடியாது.
என்னிடம் வந்த பலரது ஜாதகத்தை கணித்ததில், அதில் பலருக்கு நல்ல யோக தசைகளில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போனதும், ராகு தசையில் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதும் எனக்கு தெரியவந்தது.
உலகில் உள்ள அனைத்து வகையான இன்பங்களையும் அனுபவிக்க வாய்ப்பளிக்கும் கிரகம் ராகு. அந்த வகையில் குழந்தை பாக்கியத்தையும் (மழழைச் செல்வம்) அது வழங்குகிறது. எனவே, ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. பாதிப்புகளும் ஏற்படாது.
மனைவிக்கு ராகு தசை முடிந்து கணவருக்கு ராகு தசை துவங்கும் போது அந்தத் தம்பதிகள் தாராளமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எனினும், கணவருக்கு 5ஆம் இடத்தில் ராகு இருந்து ராகு தசை நடந்தால் அவர்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்கள், தீய நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: ராகு தசையில் குழந்தைப் பெற்றுக் கொள்வதால் பாதிப்பு ஏற்படும் என அந்தத் தம்பதிகள் கருதினால், மணமுறிவு பெற்றவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்கள் உதவலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நிதியுதவி, பணிவிடை செய்யலாம். வாழ்ந்து கெட்ட குடும்பங்களுக்கும் உதவலாம். திருக்கருகாவூர் கோயிலில் உள்ள கருகாக்கும் அம்பிகையை வழிபடலாம்.
ஜோதிடத்தைப் பொறுத்தவரை ராகு என்பது பிதுர் (தந்தை) பாட்டன் என்றும், கேது என்பது மாத்ரு (தாய்) வழிப் பாட்டன் என்றும் கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு புத்தாடை வழங்கி ஆசி பெறுவதும் பலனளிக்கும். முடிந்தால் அவர்களை குடும்பத்துடன் வைத்துக் கொள்வது நல்லது.
ஒருவேளை அவர்கள் சொந்த ஊரில் தங்கியிருந்தால், அவர்களை இரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை சென்று சந்திப்பதும் அல்லது தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதும் ராகு, கேதுவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பலனளிக்கும்.