குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளால் முடிவெடுக்காத முடியாத மனநிலையில் மக்கள் இருக்கும் போது அதிலிருந்து மீளுவதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் அல்லது யாரை வணங்கலாம்?
மேற்கூறப்பட்டுள்ளவை எல்லாம் சிம்மச் சனியால் ஏற்பட்டவை. சனியை ஜோதி கிரகம் என்றும் கூறலாம். அந்த வகையில் முனிவர்களை வழிபடுவது நல்லது. நவகிரகங்களில் சனி ஆர்ப்பாட்டம் இல்லாத குணமுடையது.
எனவே பல நூறு பேரை அழைத்து பூஜை, பஜனை நடத்தி வழிபடுவதை விட, முனிவர்கள் அல்லது மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று அமைதியாக சில நிமிடங்கள் சனியை நினைத்தது தியானம் செய்தால் பலன் பெறலாம். மக்களுக்கு தற்போதைய சூழலில் ஆடம்பரம் இல்லாத பக்திதான் தேவை.
சூரியனின் வீடு சிம்மம். அந்த வகையில் திருவண்ணாமலை திருத்தலத்தில் வழிபாடு செய்யலாம். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரரை வணங்குவதுடன், ரமணர் மகானையும் வழிபட முடியும்.
ஷேசாஸ்த்ரி சுவாமிகளும் அங்கு இருக்கிறார்கள். கிரிவலம் செல்ல முடியும். இதுபோல் அவரவர் மனதிற்கு பிடித்த முறையில் பிரார்த்தனை மேற்கொள்ள முடியும். ஏன்... அங்குள்ள கோசாலைக்கு செல்லலாம் அல்லது மலையடிவாரத்திலேயே இறைவனை நினைத்து அரை மணி நேரம் தியானித்து விட்டு வரலாம். இதன் மூலம் மனதளவில் சில தீர்வுகள் கிடைப்பதுடன், நிம்மதியும் பிறக்கும்.
கிறித்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு என்ன பரிகாரம்?
இஸ்லாமிய சகோதரர்களாக இருப்பின் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவிற்கு சென்று வழிபடலாம். அந்த மதத்தினருக்கு அந்த தர்கா ஒரு பெரிய பலத்தை அளிக்கும். எனவே இஸ்லாமியர்கள் சிறப்பான பலனைப் பெற முடியும்.
கிறிஸ்தவ நண்பர்களும் மலை மேல் உள்ள தேவாலயங்களுக்கு சென்று வழிபடலாம். உதாரணமாக (சென்னையில்) செயின்ட் தாமஸ் மவுண்ட், செயின்ட் சேவியர்ஸ் சர்ச் ஆகியவற்றிற்குச் சென்று வழிபடுவதன் மூலம் தெளிவான மனநிலையைப் பெறலாம்.