ராசா என்ற பெயருக்கு உரிய கிரகம் குரு. தற்பொழுது குரு சொந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால், சனியினுடைய பார்வையில் இருக்கிறார். அது பாதிப்பைக் கொடுக்கும்.
ஆனால், அவருடைய தனிப்பட்ட ஜாதகம் என்று பார்க்கும் போது நிறைய வித்தியாசப்படுகிறது. அவர் மகர ராசி என்று கேள்விப்பட்டேன். அப்படி மகர ராசியாக இருக்கும் பட்சத்தில் நிறைய இடையூறுகளைச் சந்திக்கக் கூடிய காலகட்டம் இது. 2012 ஜூன் மாதம் வரையில் இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
மகரத்திற்கு தற்பொழுது நெருக்கடியான காலகட்டம் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாயின் போக்கு தற்போது மகரத்திற்கு சரியாக இல்லை. சூரியனுடைய இயக்கம் சரியாக இல்லை. மகரம் என்பது ஜல ராசி. மகராழி என்று சொல்வார்கள். அந்த தண்ணீர் கிரகத்தை நோக்கி நெருப்பு கிரகங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஜல ராசியை நோக்கி நெருப்புக் கிரகங்கள் போய்க் கொண்டிருக்கும் போது அந்த ராசி பாதிக்கப்படும். அந்த ராசிக்கு இயல்பாகவே சில பிரச்சனைகள், இடையூறுகள், அரசு தரப்பில் பாதிப்புகள் போன்றவற்றை கொடுக்கும். இதுபோன்று 2010 ஜூன் வரைக்கும் இருக்கும்.
பொதுவாக அஷ்டமத்துச் சனி நடக்கும் போது பெரிய தொகையெல்லாம் கைக்கு வரக்கூடாது. மகர ராசி எனும் பட்சத்தில் தற்பொழுது இவருக்கு அஷ்டமத்துச் சனிதான் நடந்திருக்கிறது. அதாவது, 2009 செப்டம்பர் வரைக்கு அஷ்டமத்துச் சனி இருந்திருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது. இதுபோன்று அஷ்டத்துச் சனி காலத்தில் பெறக்கூடியதெல்லாம் எந்தக் காலத்திலும் இடையூறுகளைத் தரக்கூடியது.
சாதாரணமாக சொத்து வாங்கலாமா? என்று கேட்டு வருபவர்களிடமே, அஷ்டமத்துச் சனி நடக்கிறது, உங்களுடைய பெயரில் சொத்து வாங்க வேண்டாம். வாங்கினால் அது தங்காது. ஏதோ காரணத்திற்காக விற்க வேண்டியிருக்கும். எதற்கு ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று சொல்லி அனுப்புகிறோம்.
இதேபோல, இந்த அஷ்டமத்துச் சனி காலத்தில் பெரிய விஷயங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும் சொல்வதுண்டு. அதையும் மீறி சிலர் செய்வார்கள். பின்னர் பிரச்சனையில் சிக்கிக்கொள்வதையும் பார்த்திருக்கிறோம். அஷ்டச் சனி இருக்கும் போதே சிலருக்கு தண்டனையை கொடுத்துவிடும். சிலருக்கு அது நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை வைத்து தண்டனை கொடுக்கும். இதுபோன்றெல்லாம் நிறைய பார்க்கிறோம்.