தமிழ்.வெப்துனியா.காம்: ஊழல் என்பது நமது நாட்டு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதன் அறிகுறி. இது எப்படி போய் முடியும்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார். அதனால், யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும்சரி, தப்பு செய்தால் தண்டனையை அதிகரித்தே தீரவேண்டும் என்ற அமைப்புகள் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
தற்போது கேள்வி கேட்கும் வீடான புதனில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான், யாராக இருந்தாலும் கேட்டுவிடுவது என்ற நிலை வந்தது. அதன்பிறகு, கன்னிக்கு சனி வந்த பிறகுதான் தகவல் அறியும் சட்டம் என்ற சட்டம் வந்தது. சாதாரணமானவர்கள் கூட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பினால், 10 நாள், 15 நாள் ஒரு அலுவலகத்திற்குச் சென்று சேகரிக்க முடியாத தகவல்களைக் கூட பெறக்கூடிய தகவல் அறியும் சட்டம் என்பது வந்தது. யார் யார் என்ன செய்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்தப் பதவிக்கு எந்தப் பணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை சாதாரண, எளிய மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டம் வந்துள்ளது.
அந்த சட்டத்தின் மூலமாகத் தெரிந்த விஷயங்களைத் தண்டிக்கக்கூடிய வீடுதான் துலாம். இந்த துலாத்துக்குதான் சனி வருகிறார். துலாம் என்பது நீதிக்கோள், நீதிபதிக்கு மேல் நீதி தேவை தராசுடன் இருப்பார்களே அதுதான் நடக்கும். டிசம்பரில் இருந்து நிறைய பேர், பெரிய பெரிய ஆட்களெல்லாம் தண்டனையை அனுபவிக்கக் கூடிய நிகழ்வுகள், தப்பித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தப்பிக்கவே முடியாது என்கின்ற நிலை வரும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் கன்னியில் சனி இருப்பதால்தான், உலகத்தையே ஒரு சுற்று வந்து பார்த்தால் பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்து குரல்கள் எழுந்துள்ளது தெரியும். அதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது. இப்பொழுது துலாத்திற்கு சனி வரும்போது, தவறு செய்தவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் எளியவர்களும் பெரிய பதவியில் போய் உட்காரக்கூடிய காலமும் வரப்போகிறது.