ஆஸி. ஓபனில் பட்டம் வெல்வாரா ஃபெடரர்: ஜோதிடர் கணிப்பு
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
ஆஸ்ட்ரேலிய ஓபன் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் பட்டம் வெல்வாரா என்று கேள்வியுடன் அவரது பிறந்த நேரம், இடம், தேதி ஆகியவற்றை எமது ஜோதிடரிடம் கொடுத்தோம். அதனைக் கணித்த பிறகு அவர் அளித்த பதில்...
இவரது ஜாதகம் பிரம்மாண்டமாக இருக்கிறது. இவர் விசாகம் நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்துள்ளார் என்று அவரது பிறந்த நேரம், இடம், தேதியை வைத்துக் கணித்துள்ளேன். விசாகம் குருவின் நட்சத்திரம், துலாம் சுக்கிரனின் ராசி. எனவே இவரிடம் போராடும் குணம் இயற்கையிலேயே இருக்கும்.
சிறு வயதிலேயே அதிக கஷ்டங்களை அனுபவித்து வாழ்வில் முன்னேறுவார். சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும், முக்கியமான கிரகங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக சுக்கிரன் சிறப்பாக இருக்கிறார். குருவும், சனியும் ஒன்றாக இருப்பதும், சனி அஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளதும் நல்ல பலன் தரும்.
துலாம் ராசிக்கு சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதியாக சனி பகவான் இருக்கிறார். அவர் (சனி) சந்திரனின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இந்த சேர்க்கையால் அவர் உலகளவில் புகழ், கணக்கிட முடியாது அளவுக்கு சொத்து என அனைத்தையும் பெறுவார்.
இவரைப் பொறுத்தவரை 2 ராஜ கிரகங்கள் நல்ல ஆதிபத்தியம் உள்ள கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது பெரிய பாக்கியமாக கருதப்படுகிறது. மேலும் இவர் பிறக்கும் போதே சூரியன், ராகு சேர்க்கை பெற்றுள்ளது. இதனால் ஒருவித மனப்போராட்டம் எப்போதும் இருக்கும்.
அதாவது, தாம் இருக்கும் துறையில் பல சாதனைகளைப் புரிந்தாலும் அதனால் மனத் திருப்தி அடைய மாட்டார்கள். மேலும், ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புவர்.
நியூமராலஜி முறையில் பார்க்கும் போது இவரது பிறவி எண் (ஆகஸ்ட் 8), விதி எண் ஆகிய இரண்டும் 8 ஆகும். ஒரு சிலர் எண் கணிதத்தில் 8ம் எண் சிறப்பு இல்லாதது எனக் கூறுவர். ஆனால் இவர் எட்டாம் தேதியில் பிறந்து, அதற்குரிய கிரகமான சனி சிறப்பான (நட்பு வீட்டில்) இடத்தில், ராஜ கிரகமான குருவுடன் இணைந்துள்ளதால், இவரைப் பொறுத்த வரை எட்டு என்பது “மெகா ஹிட்” ஆக உள்ளது.
மேலும் இவரது ஜாதகத்தில் புதன் மிக வலுவாக உள்ளது. புதாதித்திய யோகமும் உள்ளது. அதனால் அரசு மரியாதை நிச்சயம் கிடைக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இவரது துறையில் (டென்னிஸ்) பல சாதனைகளைப் புரிவார்.
தற்போது இவருக்கு புதன் தசை நடந்து வருகிறது. பாக்கியாதிபதி (9க்கு உரிய கிரகத்தின்) தசை நடப்பதால் மிகப் பெரிய வளர்ச்சியை இவர் அடைவார். பொன், பொருள் சேர்க்கை, பரிசு பாராட்டுகள், விருதுகள் குவியும்.
ஆஸ்ட்ரேலிய ஓபன் பட்டம் வெல்வார்: இதுமட்டுமின்றி ஜனவரி 31ஆம் தேதி நடக்கும் ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியிலும் இவர் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.