தமிழ்.வெப்துனியா.காம்: நல்ல ராசி, நட்சத்திரம், நீண்ட ஆயுள் உள்ள ஆண், இதே அம்சம் கொண்ட பெண்ணிற்கும் பொருத்தம் இல்லை. இவர்கள் திருமணம் செய்து கொண்டால், நல்ல ராசி, நட்சத்திரம், நீண்ட ஆயுள் இதெல்லாம் மாறிவிடுமா? - வாசகர் கேள்வி.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: என்னுடைய தாத்தா கூட இதுபோன்ற சில ஜாதகத்தை எடுத்துக் கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். அதாவது, பையனுடைய ஜாதகத்தில் மனைவி ஸ்தானம் மிகவும் பலவீனமாக இருக்கும். குடும்ப ஸ்தானமும் பலவீனமாக இருக்கும். அதற்கு நல்ல குடும்ப ஸ்தானமும், மாங்கல்ய ஸ்தானமும் இருக்கிற பெண்ணாகப் பார்த்து தேர்வு செய்து கொடுப்பார்கள். இதனுடைய பாதிப்பு அதில் சரியாகும் என்பதற்காக.
வரதட்சணை எதுவும் கேட்காமல், அந்தப் பெண்ணிற்கு நகை போட்டு அழைத்து வா என்று சொல்வார். ஏனென்றால், உன் ஜாதகம் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது. மாங்கல்ய ஸ்தானமும், குடும்ப ஸ்தானமும் நன்றாக இருக்கிறது இந்தப் பெண்ணிடம். ஏழையாக இருந்தாலும் இந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொள் என்று தாத்தா சொல்லியெல்லாம் கேட்டிருக்கிறேன்.
ஜாதகம் என்பது இரட்டை மாட்டு வண்டிதானே. அதில் ஒரு மாடு சற்றே பலவீனமாக இருந்தாலும் மற்றொரு மாடு கொஞ்சம் பலமாக இருந்தால் சமாளித்து கொண்டு போய்விட முடியும். அதிகமாக சுக போகமாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடியாது. அதனுடைய தாக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், வாழ்க்கையே இல்லை என்ற அமைப்பு போய், ஓரளவிற்கு வாழ்க்கை இருக்கிறது என்ற அளவிற்கு கொண்டுவர முடியும்.
இதுபோல, பலவீனமான ஒரு ஜாதகத்துடன் பலமான ஜாதகத்தை சேர்க்கும் போது வாழ்க்கையே இல்லாத அந்த ஜாதகத்திற்கு வாழ்க்கை கிடைக்கும். ஆனால், மிக பலமாக இருப்பார்களா என்று கேட்டால், அவ்வப்பொழுது சண்டை, சச்சரவுகள் உண்டு, ஆனால் வாழ்க்கை பரவலாயில்லை, ஓடிக்கொண்டிருக்கிறது என்ற அளவிற்கு கொண்டு வந்துவிட முடியும்.