தமிழ்.வெப்துனியா.காம்: சிறந்த, சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்து கொள்ள சரியான வழி எது? இதுபற்றி விவாதமெல்லாம் நடைபெற்று வருகிறது. காதலித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதன் பிறகு கல்யாணம் செய்வது மூலம் ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்றும், உங்களைக் கேட்டால் ஜோதிடத்தைப் பார்பது அவசியம் என்று சொல்வீர்கள். ஜோதிடம், காதல் இதில் வாழ்க்கை புரிந்துகொண்டு அமைத்துக் கொள்ள சரியான வழி எது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஜோதிடத்தைப் பொறுத்தவரை முன்பெல்லாம் பெரியவர்கள் வந்து பையன் ஜாதகம் எப்படி இருக்கிறது, பேரன் ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுப் போவார்கள். இது முன்பு இருந்த நடைமுறை. தற்பொழுது நம்மிடம் வருபவர்கள் எல்லாமே இளைஞர்கள்தான். பெரும்பாலும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள், திருமணத்திற்குத் தயாராக இருப்பவர்கள்தான் அதிகமாக வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை வசந்தமாக இருக்க வேண்டும். திருமணம் வசந்தமாக இருக்க வேண்டும் என்பதில் ஆவல் அதிகமாக உள்ளது. பெருகிவரும் விவாகரத்து, குறுகிவரும் புரிந்துகொள்ளாத நிலை, கணவரால் துன்புறுத்தப்படுதல் போன்றவைகளையெல்லாம் பார்த்துவிட்டு மிகவும் வெறுப்படைந்து உள்ளனர். ஒரு கல்லூரி மாணவி வந்திருந்தார். அவர் மூன்று பிறந்த தேதிகளைக் கொண்டு வந்திருந்தார். இந்த மூன்று பேருமே என்னை விரும்புகிறார்கள். மூன்று பேருமே என் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று ஜாதங்களில் எது சிறந்தது, எனக்கு எது பொருந்தும் என்று தேர்வு செய்து கொடுங்கள் என்று கேட்டார். பிறகு அந்த மூன்றில் அவருடைய ஜாதகத்திற்கு தகுந்த மாதிரி ஒன்று அருமையாக இருந்தது. அதை தேர்வு செய்து கொடுத்தேன். எப்படியும் இவர்கள் வீட்டில் ஜாதகம் பார்ப்பார்கள். அவர்கள் பார்க்கும் போது நிராகரிப்பதாக இருக்கக்கூடாது. அந்த மாதிரி எது இருக்கிறதோ அதை கொடுங்கள் என்று கேட்டார். என்னுடைய பார்வையில் பர்சனாலிட்டி யாரும் குறைவில்லை. கல்வியும் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் ‘லவ் கம் அரேஞ்சிடாக’ வந்து முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் வீட்டில் உள்ளவர்கள் எதிர்க்கக் கூடாது. அதே நேரத்தில் என்னை நானும் ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. காதல் என்ற பெயரில் சரியில்லாத, பொருந்தி வராத ஜாதகத்தை கல்யாணம் செய்து கொண்டு என்னை நானே ஏமாற்றிக் கொண்டு 4, 5 வருடங்கள் கழித்து பேக் டூ பெவிலியன் வந்து, பிறகு அப்பா, அம்மா பார்க்கிற யாரோ ஒருவரை கல்யாணம் செய்துகொள்கிற சூழ்நிலை வரக்கூடாது. அதனால் நீங்கள் சரியானதை சொல்லுங்கள். இல்லை மூன்றுமே பொருந்தவில்லையென்றாலும் சொல்லிவிடுங்கள். இந்த மூன்றையுமே புறக்கணித்துவிடுகிறேன் என்று கூறினார் அந்தப் பெண். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த மாதிரி காதல் விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. முன்பு ஏதோ ஒன்றிற்காக விரும்புவது, அதற்காக தன்னை பலி கொடுப்பது, அந்த மாதிரியெல்லாம் இப்பொழுது கிடையவே கிடையாது. இப்பொழுது, வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஜாதகமும் பொருந்தி வரவேண்டும். கடைசி வரைக்கும் துணையோடு இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஏனென்றால் தற்பொழுது மறுமணம் அதிகரித்துவிட்டது. அதனால், இப்பொழுது இருக்கிற கன்னிப் பெண்கள், இளைஞர்களுக்கு பயம் வர ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால், ஒரு வருடம், இரண்டு வருடம் அன்யோன்மாக, உயிருக்கு உயிராய் காதலித்துவிட்டு, ஏதோ ஒரு காரணத்தால் திடீரென்று பிரிகிறார்கள். இந்த மாதிரியான ஜாதகத்தையெல்லாம் கூட பார்க்கிறோம். சிலருக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறோம். உங்களுக்கு என்ன இருந்தாலும் காதல் திருமணம் கிடையாது. ஏனென்றால் சுக்ரன் உங்கள் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கிறார். சுக்ரன் நீச்சமானால், வலுவான காதல் கொடுத்து பிறகு அந்தக் காதல் தோல்வியாகி பெரிய காயத்தை இதயத்தில் உண்டாக்கிவிட்டு போய்விடும். இந்த மாதிரியெல்லாம் முன்கூட்டியே சொல்வது உண்டு. நீங்கள் காதலிக்கலாம், காதல் வலுவாக இருக்கும். ஆனால் காதலி மனைவியாகக் கூடியது உங்கள் ஜாதகத்தில் இல்லை என்று கூறுவோம். சனியில் வரும் காதல் சனியோடு போய்விடும்!அதேபோல, ஏழரைச் சனி, அஷ்டத்துச் சனி நடக்கும் போதெல்லாம் தீவிரமாக காதலிப்பார்கள். ஏழரைச் சனி, அஷ்டத்துச் சனி இருக்கிறதே, விட்ட குறை தொட்ட குறை என்று பெரியவர்கள் சொல்வார்களே, அந்த மாதிரி நட்புகளையெல்லாம் நம் கண் முன்னால் நிறுத்தும். விட்ட குறை, தொட்ட குறைதான். அந்தக் குறையாக இருப்பதை அவர்கள் பூர்த்தி செய்துவிட்டுப் போய்விடுவார்கள். ஒரு இரண்டு வருடம் ஆழமான அன்போடு இருப்பார்கள். அனைத்தும் இருக்கும். ஆனால் சனியில் வரும் காதல் சனியோடு முடிந்துவிடும். அந்த ஏழரை சனி முடிந்த உடனேயே ஒரு தெளிவு பிறக்கும். இவ்வளவு நாளாக வீணாக கழித்துவிட்டோமே, வேறு வேலை எதையாவது பார்த்திருக்கலாமே, வீணாக லீவ் போட்டுவிட்டு சுற்றி வந்தோமே, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தோமே என்று இரண்டு பேருக்குமே ஏமாற்றங்களைத் தரக்கூடியது. அதனால்தான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி நடப்பவர்களை கொஞ்சம் எச்சரிக்கை செய்து அனுப்புவது. கொஞ்சம் கவனமாக இருங்கள். இப்பொழுது பேசுகிற வசனங்களை நம்பி வாழ்க்கையைத் தீர்மானிக்காதீர்கள். நட்பாக பழகுங்கள். யதார்த்தமாக ஒத்துவருகிறதா என்று பாருங்கள். காயப்படுத்திக் கொள்ளாமல் கல்யாணம் செய்துகொள்ளப் பாருங்கள். இதில், சில பெற்றோர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். சில பெற்றோர்களுக்கு நாமே எடுத்துச் சொல்கிறோம். எப்படிப் பார்த்தாலும் உங்க பெண்ணுக்கு காதல் திருமணம்தான், ஏனென்றால் 7ஆம் இடத்தில் சனி, 8இல் ராகு, சுக்ரன் அஷ்டத்தில் கிடக்கிறார். உங்கள் ஜாதியிலேயே பார்த்து கொடுப்பது சாதகமாக இருக்காது. இந்த மாதிரியான காதல் திருமணம், காந்தர்வத் திருமணம் எல்லேமே சாதமாக வருகிறது, அதையும் கணித்துச் சொல்லிவிடுகிறோம். சிலரெல்லாம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். நாம் பொருத்தம் பார்த்திருந்தால் கூட அந்த அளவிற்கு பொருந்தியிருக்காது. அவ்வளவு பிரமாண்டமான பொருத்தமெல்லாம் பெற்றிருக்கிறார்கள். அதில் 7க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 7க்கு உரிய கிரகம் நன்றாக ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதியோடு சேர்ந்திருக்கும் போது, சுக்ரன் நன்றாக இருக்கும்போது பார்த்தீர்களென்றால் மிகவும் அற்புதமாக வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த அதிர்ஷ்டம் அவர்களுக்கு அமைந்துவிடுகிறது. சரியில்லாத சிலர்தான் அதில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்த மாதிரியான சில விடயங்களெல்லாம் இதில் உண்டு.