தமிழ்.வெப்துனியா.காம்: பெரும் பொருட் செலவு செய்து பிரமாண்டமான ஒரு மண்டபத்தில் அல்லது ஹோட்டலில் திருமணம் செய்வது. என்னதான் வசதியிருந்தாலும் கோயிலில் வைத்து திருமணம் செய்வது. இதில் உங்களுடைய ஆலோசனை என்ன?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: குறிப்பாக, பெரும் பொருட் செலவில் மண்டபங்களில் திருமணம் செய்வது சிறப்பு அல்ல. கோயில்களில் பார்த்தீர்களென்றால், அந்தக் காலத்தில் மன்னர்கள் ஆயிரங்கால் மண்டபம் வைத்து மக்கள் கூடிக் களிப்பதற்கும், முக்கியமாகத் திருமணங்கள், நிகழ்வுகள் இதையெல்லாம் செய்வதற்காகவே அமைத்தார்கள். அது சாமி மட்டும் எழுந்தருளுவதற்காகக் கிடையாது. சாமி விழாக் காலங்களில், பண்டிகைக் காலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்துவிட்டு போய்விடுவார். அந்தக் காலத்தில் மன்னர்களே மக்களைச் சந்திக்கக் கூடிய இடமாக இந்த ஆயிரங்கால் மண்டபம் பயன்படுத்தப்பட்டது.
இன்றும் பலர் கோயில்களில் திருமணங்கள் செய்கிறார்கள். மிகப்பெரிய பணக்காரர்கள் கூட கோயில் திருமணங்கள் செய்வதைப் பார்க்கிறோம். குறிப்பாக திருப்பதியில் திருமணங்கள் செய்வது அதிகம். அங்கே மலை மேல் மண்டபங்கள் நிறைய இதற்காகவே இருக்கிறது. திருத்தணியிலும் இதுபோல மண்டபங்கள் இருக்கிறது. கோயில் சார்ந்த மண்டபங்கள். கோயிலிற்கு உள்ளே சாமி முன்னிலையில் கொடி மரத்திற்கு அருகில் தாலியை கட்டிக்கிட்டு, சாமியை தரிசனம் செய்துவிட்டு, பிறகு கோயிலிருற்கு அருகில் இருக்கும் மண்டபங்களில் வரவேற்பெல்லாம் வைத்துக் கொள்வதும் உண்டு.
ஆலயங்கள் அதற்கென்ற ஆகம விதிப்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சிவன் என்று சொன்னால், அதிகார நந்தி, ஆத்மார்த்த நந்தி என்று நந்தியிலேயே ஐந்து வகைகள் உண்டு. கடைசியாக இருக்கிற நந்தி ரகசிய நந்தி. அதனால்தான் அவருடைய காதில் எல்லோரும் போய் சொல்விட்டு வருவது. ஏனென்றால் அவர் அந்த விஷயங்களை வைத்துக் கொண்டு, நேரம் பார்த்து சிவனிடம் சொல்வார் என்று.
இந்த மாதிரி பெரிய ஆன்மீக அடிப்படையில் உருவானது. அந்தந்த இடத்தில் அந்தந்த அவதாரங்கள் இருந்தால் அந்த இடத்திற்குப் போய்வரும் போது நமக்கு ஒரு சக்தி கிடைக்கும். ஒரு உணர்வு பிறக்கும். நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம் உண்டாகும் என்பது போன்று செய்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆலயங்களில் திருமணங்கள் செய்யும் போது வேறு ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் அவைகள் நீங்கும்.
ஆனால் திருமண மண்டபங்களை எடுத்துக் கொண்டால், எல்லா மண்டபங்களும் வாஸ்து பிரகாரம் உருவாக்கப்பட்ட மண்டபங்கள் அல்ல.
(ஏற்கனவே கூட நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு என்ன இருந்து என்று நமக்குத் தெரியாது என்று.)
ஆமாம், அங்கு ஒரு சிறிய இனம் கூட போராடியிருக்கலாம்.
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் பற்றி எரிந்ததையெல்லாம் நான் சீரியஸாக எடுத்துப் பார்த்தேன். அதிலெல்லாம் பார்த்தீர்களென்றால் வாஸ்துப்படி எதுவும் கிடையாது. வடக்கு, வடகிழக்கு திசையெல்லாம் திறப்பே இல்லாமல் மூடியிருந்தது. இதையெல்லாம் விட ஆயிரங்கால் மண்டபமெல்லாம் திறந்தவெளியாகத்தான் இருக்கும். இறைவனுக்கு அருகில் இருக்கும். அப்பொழுது அங்கு ஒருவித உணர்வு பிறக்கும்.
எனவே கோயிலில் திருமணம் செய்வதே சிறப்பு.