தமிழ்.வெப்துனியா.காம்: நண்பர் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவர் நின்று கொண்டுதான் வேலையோ, வியாபாரமோ செய்ய வேண்டும் என்று கூறியிருந்தீர்கள். உட்கார்ந்துகொண்டு செய்யும் வேலையைச் செய்யக் கூடாது என்று கூறியிருந்தீர்கள். எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினீர்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்துகொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது. ஒருவர் வந்திருந்தார். அவருக்கு சனி பகவான் வலுவான நிலையில் இருந்தார். தற்போது அவர் ஓட்டல் வைத்து நடத்துகிறார். ஆனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.
அதனால், உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு போகிற மாதிரியான ஓட்டல் நடத்துகிறீர்கள், மாறாக கையேந்து பவன் போன்று வைத்து நடந்துங்கள் என்று சொன்னேன். என்ன சார், என்னுடைய கவுரவம் என்ன ஆகும். நீங்களே இதுபோல சொல்லலாமா? என்னுடைய ஊரில் என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள் என்றார். ஐயா, தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு தற்போது தொழில் நசிந்துபோயுள்ளது, வேலையாட்களுக்குக் கூட சம்பளம் கொடுக்க முடியாமல் மனையை விற்றுள்ளீர்கள். அதனால், நான் சொன்னபடி செய்யுங்கள்.
நல்ல இடமாகப் பார்த்து மூன்று நான்கு இடங்களில் கையேந்து பவன் போடுங்கள். வயதானவர்கள் வந்தால் உட்காருவதற்கு இரண்டு ஸ்டூல் மட்டும் போடுங்கள். மற்றவர்கள் நின்று சாப்பிட்டுவிட்டு போகட்டும் என்று சொன்னேன். அவரும் அதுபோலவே செய்தார். 2 மாதம் கழித்து வந்திருந்தார். எல்லா கடனையும் அடைத்துவிட்டேன். சென்னையில் ஒன்றிரண்டு இடங்கள் பார்த்திருக்கிறேன் என்றார். ஓட்டலா என்றேன், இல்லீங்க ஐயா எல்லாமே கையேந்து பவன்தான். இதற்கு மேலும் ஓட்டம் ஆரம்பிப்பேனா என்றார்.
அதாவது, இதுபோன்றெல்லாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் வெகுமானத்தைக் கொடுக்கக் கூடியவர் சனி. அவமானத்தை தந்து வெகுமானத்தை தரக்கூடிய கிரகம். சனியினுடைய வேலையே இதுதான்.
அவர் கடை போட்டதும், என்ன இதுபோன்று பிளாட்ஃபார்ம் கடை போட்டிருக்கிறீயே என்று கேட்டார்களாம். அதுவொரு சின்ன அவமானம்தானே அவருக்கு. எவ்வளவு பெரிய கடை வைத்து நடத்தியவர், இதுபோன்று வைத்தால் கொஞ்சம் அவமானம்தானே. ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு நல்ல வருமானம் வந்துள்ளது.
அதனால்தான் எந்தத் தொழில் ஜாதகத்திற்கு ஒத்துவரும் என்று பார்க்க வேண்டும். அந்தத் தொழிலிலேயே உயர் தொழில்நுட்பத்துடன் செய்யலாமா, அல்லது சாதாரணமாக குறைந்த முதலீட்டில் செய்யலாமா என்பதைப் பார்த்துவிட்டு செய்ய வேண்டும். அதுபோல செய்யும் போது நன்றாக அமையும்.