குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை வணங்கலாம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும். இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.