தமிழ்.வெப்துனியா.காம்: கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள்.
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி. அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும்.
அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.
நவமி என்பது 9வது திதி. 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும். இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.