மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதா?

வெள்ளி, 28 ஜனவரி 2011 (18:58 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: மூலம் நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் மணமகன் தாயோ, தந்தையோ இழக்க நேரிடுமா? இதற்கு பரிகாரம் உண்டா? மூலம் நட்சத்திரம் 2ஆம் பாகம் உள்ள பெண்ணை திருமணம் செய்தாலும் இந்த பாதிப்பு வருமா? - வாசகர் கேள்வி

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கடந்த வாரத்தில் என்னிடத்தில் ஒருவர் வந்திருந்தார். அவர் மூலம் நட்சத்திரம். அவருடைய பையனும் மூலம் நட்சத்திரம். "ஆணி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்". அதாவது ஆணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல நிலைக்கு வருவார்கள். பின் மூலம் நிர்மூலம், மூலம் நட்சத்திரம் 4ஆம் பாகத்தில் பிறக்கக் கூடியவர்கள் எதிரிகளை வெற்றி காணக்கூடிய சக்தி, நிர்மூலமாக்குவது என்று சொல்வார்களே, பிரச்சனைகளை நிர்மூலமாக்குவது போன்ற சக்திகளெல்லாம் உண்டு.

இது காலப் போக்கில் என்னவானதென்றால், "ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்" என்று ஆகிவிட்டது. இது தவறு. அதே மாதிரி, மூலம் நட்சத்திரம் உள்ளவர்கள் என்னிடத்தில் எவ்வளவோ பேர் வருகிறார்கள். அவர்களிடத்தில், தைரியமாக பெண்ணைக் கொடுங்கள். அல்லது மாப்பிள்ளை மூலம் நட்சத்திரம் என்றால் தாராளமாக ஏற்றுக்கொள்ளுங்கள். மாமனாருக்கு ஆகாது என்பதெல்லாம் பொய். அதுபோன்று எதுவும் கிடையாது என்று சொல்லி அனுப்புவேன்.

1989 நவம்பர் 15 ஒரு ஜாதகத்திற்குப் பொருத்தம் பார்த்துக் கொடுத்தேன். 15.11.1989, பொருத்தம் பார்க்க வருகிறார்கள். அந்தப் பையனுக்கு மூலம் நட்சத்திரம். வடபழனியில் அந்தக் குடும்பம் இன்னமும் இருக்கிறார்கள். இந்த பெண்ணிற்கு இந்தப் பையனை கொடுக்கலாமா என்று கேட்கிறார்கள். அதற்கு, தாராளமாகக் கொடுங்கள். மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஆனால் பயப்படாதீர்கள். ஏனென்றால், அந்தப் பையனுடைய ஜாதகத்தில் மாமனார் ஸ்தானம் நன்றாக இருக்கிறது.

அதனால், வெறுமனே மூலம் நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்று தவிர்க்க வேண்டாம். இவர் உங்க குடும்பத்தையே எடுத்து நடத்துபவராகவும். அந்தப் பெண்ணிற்கு அடுத்து உள்ள இரண்டு பெண்களுடைய கல்யாணத்திற்கு உதவக் கூடியவராகவும், குடும்பத்திற்கு மூத்த பிள்ளை மாதிரியும் இருப்பார் என்று சொன்னேன்.

நாங்க, எங்க ஊர் கோவில்பட்டியில் பார்த்தோம். அங்கே பார்த்தவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று சொன்னார்கள். அதற்கு, நம்பி கொடுங்கள், அதற்கு நான் பொறுப்பு என்று சொன்னேன். அவர்கள் தயக்கத்துடன், நீங்கள் வந்தே 6 மாதம்தான் ஆகிறது என்று சொல்கிறார்கள். உங்களை எப்படி நம்புவது என்று கேட்டார்கள். நீங்கள் எதை நம்பி என்னிடத்தில் வந்தீர்கள் என்று கேட்டேன். இல்லை, நன்றாகச் சொல்வீர்கள், பளிச்சென்று சொல்வீர்கள் என்று சொன்னார்கள். தைரியமாக பகவானை நம்பிக் கொடுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொன்னேன்.

இன்று வரைக்கும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். அந்தப் பையனுடைய மாமனாரும் நன்றாகத்தான் இருக்கிறார். கணவன், மனைவியும் சந்தோஷமாக இருக்கிறார்கள். பையனும் நன்றாக இருக்கிறார். மாமனாரும் நன்றாக சந்தோஷமாக இருக்கிறார். மாமனாருக்கே இவர்தான் வலது கரம் மாதிரி இருக்கிறார். அதனால், எது ஒன்றையும் அப்படியே தூக்கிப் போட்டுவிடக்கூடாது.

பரணி தரணி ஆள்வார் என்றால், எத்தனையோ பரணியை சாதாரணமாகத்தான் பார்க்கிறோம். மகம் ஜெகம் ஆளும் என்று சொல்கிறோம். ஒருத்தரை வைத்து மகம் ஜெகம் ஆளும் என்று சொல்லிவிட முடியுமா? மாடு மேய்க்கும் மகத்தையும் பார்க்கிறோம். கிரக அமைப்புகளையும் பார்க்க வேண்டும். அதனால் நட்சத்திரத்தை வைத்தெல்லாம் முடிவு சொல்லிவிடக் கூடாது. கிரகங்கள், லக்னங்கள் இருக்கிறது. இதுபோன்ற அமைப்புகளை அடிப்படையாக வைத்துதான் முடிவெடுக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்