Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெற்றோர்களைப் பிரிந்து வாழ்வதும் நல்லதா? எ‌ப்படி?

பெற்றோர்களைப் பிரிந்து வாழ்வதும் நல்லதா? எ‌ப்படி?
, செவ்வாய், 9 நவம்பர் 2010 (19:17 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: பேசும்போது ஒருவ‌ரிட‌ம் குறிப்பிட்டீர்கள், ‌பி‌ள்ளை‌ப்பேறு இ‌ல்லாத இந்த நிலையில் நீங்கள் உங்கள் தாய், தந்தையருடன் ஒன்றாக இருக்கக் கூடாது என்று. பொதுவான, ஒரு பிடிமானமான கருத்து என்பது தாய், தந்தையர் இல்லாமல் வாழக்கூடாது என்பது. ஒரு ஆண் அவர்களுடன்தான் வாழ வேண்டும். அப்படியிருக்கையில், உங்களுக்குப் பிள்ளை பேறு உண்டாக வேண்டுமென்றால், தற்பொழுது பிரிந்திருந்துதான் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள். ஒரு தனிப்பட்ட மனிதரைச் சார்ந்த விஷயமாக இருந்தாலும் கூட, அது ஏற்புடையதாக இல்லை. அதை எப்படிச் சொன்னீர்கள்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அவருடைய ஜாதகத்தில் தாய், தந்தைக்குரிய கிரகம் அவருடைய லக்னத்தில் போய் மறைந்து கிடக்கிறது. அவருடைய ஜாதகத்தைப் பார்த்தபோது, தாய், தந்தை மீது பாசம் உள்ளவர் நீங்கள். ஆனால், அவர்கள் மனசு புன்படும்படி திட்டிக் கொண்டே இருப்பீர்களே? என்று கேட்டதற்கு, அது உண்மைதான் சார், ஆனால் அவர்களை என்னால் பிரிந்திருக்க முடியாது என்று கூறினார்.

உதாரணத்திற்கு அவர் கடக லக்னம் என்று வைத்துக்கொள்வோம். கடக லக்னத்திற்கு லக்னாபதி சந்திரன். அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால், அந்த லக்னாதிபதிக்கு 6, 8, 12ல் தாய், தந்தைக்குரிய கிரகங்கள் மறைந்து கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாதுர்காரகன் சந்திரன் நன்றாக இருந்தாலும், பிதுர்காரகன் சூரியன் கெட்டுப்போய் கிடக்கிறது.

அதனால்தான் அவரிடம் சொன்னேன், நீங்கள் தாய், தந்தையருடன் இருப்பதால் உங்களுடைய ஜாதகப்படி அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறது. அவர்களுடைய ஜாதகப்படியும் உங்களுக்கு சில பாதிப்புகள் உண்டாகிறது. உங்களுடைய லக்னாபதி சந்திரனும் மறைந்து கிடக்கிறார். லக்னாதிபதி மறைந்திருந்தாலோ, பலவீனமாக இருந்தாலோ, பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து வரும்போது அவர்களுடைய வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனால்தான் அவரை தாய், தந்தையரை விட்டுப் பிரிந்து இருங்கள் என்று சொன்னேன்.

அதுமட்டுமல்லாமல், இவருக்கு தற்பொழுது திருமணமும் ஆகிவிட்டது. தற்பொழுதும் மனைவி முன்பாகவே அப்பா, அம்மாவை பேசியிருக்கிறார். இப்படி அவர்களை கேவலமாகப் பேசுவதை விட, அவர்களை விட்டுப் பிரிந்தே இருக்கலாம். அவர்கள் அன்பான, ஆதரவான வார்த்தைகளை விரும்புவார்கள். அவர்களை பாதுகாக்கிறேன் என்று இப்படி செய்வதை விட, அவர்களுடைய சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு வந்தால் அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்.

அதுமட்டுமல்லாமல், தாய், தந்தையை விட்டுப் பிரிவதால் முன்னுக்கு வரும் ஜாதகமெல்லாம் உண்டு. சில பெற்றோர்களுக்கெல்லாம் நான் சொல்வதுண்டு, உங்களுடைய பிள்ளையை கொஞ்ச நாட்களுக்கு வெளியூர் அனுப்புங்கள், வெளிநாடு அனுப்புங்கள், அப்பொழுதுதான் அவருக்கு சிறப்பாக இருக்கும் என்று. ஏனென்றால் சிலருக்கு 10க்கு உரியவன் 8ல் போய் மறைந்திருப்பான். 10 ஆம் இடம் உத்தியோகஸ்தானம். 10க்கு உரியவர் எட்டிலோ, பன்னிரண்டிலோ போய் மறைந்தால் அவர் இருக்கிற நாட்டில், அவர் இருக்கிற மாநிலத்தில் வேலை கிடைக்காது.

ஒரே பிள்ளைங்க, வேறு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா என்றெல்லாம் சிலர் கேட்பார்கள். இதுதாங்க பரிகாரம் என்று சொல்வேன். உங்க பையன் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அனுப்பி வையுங்கள். கொஞ்ச நாட்களுக்கு அவருக்கு கஷ்டமாக இருக்கும். பிறகு அவரே அங்கிருந்து வரமாட்டார். இதுபோல, நிறைய பேர் போய் நல்ல மாற்றங்கள் வந்திருக்கிறது.

அதனால்தான், கிரகங்களுடைய செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். அந்த கிரகங்களுடைய யதார்த்தமான இயல்பு என்ன? இந்த தசை புக்திக்கு அந்த கிரகம் எப்படி செயல்படும். அதைத் தெரிந்துகொண்டு நடைமுறைப் பரிகாரம் செய்தால், அது வெற்றியைக் கொடுக்கும்.

நான் சொன்ன பிறகு அவர் தாய், தந்தையரைப் பிரிந்து இருந்தார். இவருக்கும் வளர்ச்சி, அவர்களுக்கும் நிம்மதி. இவருக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகியிருக்கிறது. சாதாரண கம்பெனியில் இருந்து பெரிய கம்பெனியில் சேர்ந்திருக்கிறார். மாத ஊதியம் அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. முன்பை விட தற்பொழுது அப்பா, அம்மாவிற்கு அதிகமாகச் செலவு செய்கிறார்.

அதனால், சில கிரங்களை வைத்துப் பார்க்கும் போது, என்னதான் பெற்றோர்கள், சகோதரர்கள் என்று பாசமாக இருந்தாலும், கிரக அமைப்புகளை வைத்து அவரவர்கள் சில இடைவெளிகளை கடைபிடிக்கும் போது உறவு முறையும் பாதிக்காமல் இருக்கும், அதே நேரம் பகைமையும் வராமல் இருக்கும்.

இன்னொரு பெண்மணி ஒருவர் வந்திருந்தார். தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று 7 வருடமாக இவருடன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். கணவருடைய ஜாதகத்தைப் பார்க்கும் போது, அது தனிக்குடித்தனம் போகக்கூடிய ஜாதகமாகவே இல்லை. அவர் ஜாதகப்படி, மிதுன லக்னம். லக்னாதிபதி புதன். லக்னத்திலேயே புதன் உட்கார்ந்திருக்கிறார். 4க்குரிய கிரகமும், அதாவது தாய்க்குரிய கிரகமும் அவர்தான். அடுத்து 9க்குரியவர். தகப்பனாருக்கு உரியவர் சனி பகவான். எல்லாமே புதன், சனி லக்னத்திலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். கூடவே சுக்ரனும் உட்கார்ந்திருக்கிறார்.

நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். இவர் தனிக்குடித்தனம் வரமாட்டார். அப்படி நீங்கள் தனிக்குடித்தனத்திற்கு அழைத்துச் சென்றால், இவருக்கு சில நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு, தனிக்குடித்தனத்திற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தனியாகப் போனால் நன்றாகத்தானே இருப்போம். நீங்கள் சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள் என்று சொன்னார். இவருடைய ஜாதகத்திற்கு இப்படித்தான் இருக்கிறது என்று மீண்டும் சொன்னேன்.

பிறகு அந்தப் பெண்மணி அவரிடம் போராடி தனிக்குடித்தனம் வந்துவிட்டார்கள். தனிக்குடித்தனம் வந்த மூன்றாம் நாளே விபத்தில் சிக்கியிருக்கிறார். கணவரும், மனைவியும் சேர்ந்து காரில் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறது என்று அந்தப் பெண்மணி சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான், எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி கார் கதவு கழட்டிக் கொண்டு போய், கால்களில் பலத்த அடிபட்டு ஸ்டீல் ராட் வைத்திருக்கிறார்கள் அவருக்கு. உடனே, அந்தப் பெண்மணி ·போன் செய்து விபத்தாகவிட்டது சார், என்று சொன்னார்கள். அந்த மாதிரி சில கிரக அமைப்புகள் உண்டு.

சில பிள்ளைகள் உண்டு. எப்பொழுது பார்த்தாலும் அவருடைய அம்மாவிடமே பேசிக் கொண்டிருக்கிறார். என்னிடத்தில் பேசமாட்டேங்கிறார் என்று மனைவி புலம்புவார்கள். சில ஜாதகம் அம்மா பிள்ளையாக இருக்கும். சில ஜாதகம் அப்பா பிள்ளையாக இருக்கும். அதை நாம் தடுக்கக் கூடாது. அதைவிட்டுவிட்டு அம்மாவிடம் பேசக்கூடாது. அம்மாவிடமே பேசுகிறார் என்று குறைபடக் கூடாது. அந்த நேரத்தில் என்ன திசை, என்ன புக்தி என்று பார்த்துவிட்டு அதன்படி நாம் செயல்பட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil