Article Articles In Tamil %e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae %e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d 109040100106_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம அவதார‌ம்

Advertiesment
ராம அவதாரம்
தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.

webdunia photoWD
தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார்.

இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.

தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.

விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.

பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலை சென்றார். சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டுவந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.

மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர், முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

webdunia
webdunia photoWD
திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.

கைகேயியின் தாதி கூனி ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள்.


webdunia
webdunia photoWD
கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறியாத தசரதன் உயிர் துறந்தான்.

கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய ஈமக்கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான்.

காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அது வரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.

இராவணன் என்னும் அரக்கன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன் தங்கை சூர்ப்பனகை ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான்.

சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லவில்லை. `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்துவிட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தினான். அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.

இராவணன், மாரீசன் என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய சடாயு தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான்.

webdunia
webdunia photoWD
திரும்பி வந்த இராம, இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான்.

தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர். சுக்ரீவன் குரங்குகளுக்கு அரசனாகிய வாலியின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும் குரங்குகளும், இராமருக்குத் துணையாக வந்தனர்.


webdunia
webdunia photoWD
இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத்தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து பணிவுடன் சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.

அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டும். எனவே குரங்குகள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் அணைகட்டின. அவ்வணையின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.

இராவணனுக்குக் கும்பகருணன், வீடணன் என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். இராவணன் மறுத்துவிட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டு விட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.

பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் இந்திரசித்தும் மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர்.

கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர் : இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.

இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான்.

webdunia
webdunia photoWD
இராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக்கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.



Share this Story:

Follow Webdunia tamil