ஆண்டுதோறும் மாதத்திற்கு ஒருமுறை சிவராத்திரி வந்தாலும் ஆண்டிற்கு ஒருமுறை வரும் மகாசிவராத்திரி முக்கியமான நாளாக உள்ளது.
சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிவராத்திரி ஒன்று என்றால் சிவபெருமானின் பூரண ஆசியை பெற மகாசிவராத்திரி அனைத்திலும் முக்கியமான ஒன்று. தமிழ் மாதமான மாசி மாதத்தின் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் அமாவாசைக்கு முதல் நாள் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து மனமுருகி வேண்டினால் நினைத்த காரியங்கள் கைகூடும். சகல பாவங்களும் நீங்கி புண்ணியம் பெருகும். மகாசிவராத்திரியில் சிவபெருமானுக்கு மேற்கொள்ளும் விரதத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மஹேஸ்வரன் உக்கிரமான கடவுளாதலால் பலர் சிவபெருமானுக்கு விரதம் இருத்தல் மற்றும் வணங்குதலுக்கு அஞ்சுவர். ஆனால் சரியான முறையில் விரதம் மேற்கொண்டால் அளப்பரிய அருளை அள்ளி வழங்குபவர் சிவபெருமான்.
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி?
சிவராத்திரி மொத்தமாக ஐந்து வகைப்படும். நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி. இதில் மகா சிவராத்திரி சிவபெருமானின் பூரண அருளை பெறும் நாள் என்பதால் விரத முறையில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும்.
மகா சிவராத்திரி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்றைய நாளில் ஒருமுறை ஆகாரம் மேற்கொண்டு பின்னர் உபவாசமாய் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் சமைத்த உணவை உண்ணாமல் பால், பழங்களை உண்டு பசியாறலாம்.
அதிகாலையே எழுந்து குளித்து, வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து சிவபெருமான் படம் அல்லது விக்ரஹம் முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். வழிபடும்போது “நமச்சிவாய” மந்திரத்தை உச்சரிக்கலாம். அல்லது திருவாசகம், தேவாரம் உள்ளிட்டவற்றில் உள்ள பதிகங்களை பாடி பூஜை செய்யலாம். முக்கியமாக தேவாரத்தில் உள்ள திருக்கேதீச்சர பதிகம், திருவண்ணாமலை பதிகங்களை பாடுவது மகா சிவராத்திரி வழிபாட்டிற்கு கூடுதல் சிறப்பை தரும்.
மாலைக்கு மேல் சிவபெருமான் கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ இரவு முழுவதும் கண்விழித்து சிவ மந்திரங்களை உச்சரித்து வழிபடலாம். அதிகாலை 4 மணிக்கு கால பூஜைகள் முடிந்த பின் ஆகாரம் மேற்கொள்ளலாம்.
மகா சிவராத்திரியின்போது செய்யக் கூடாதவை?
மகா சிவராத்திரி விரதத்தின் போது சிலர் அறிந்தோ, அறியாமலோ சில தவறுகளை செய்து விடுவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று, இரவு முழுவதும் விழித்திருந்தால் போதும் என நினைப்பது. இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை மனமுறுக வழிபடவே சிவராத்திரி. ஆனால் சிலர் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் என்பதற்காக வீடியோ கேம் விளையாடுவது, படம் பார்ப்பது, செல்போன் பார்ப்பது என நேர விரயம் செய்வர். அவ்வாறு செய்வது விரதமாக கிரஹிக்கப்படாது.
இரவு முழுவதும் விழித்திருந்து விரதம் மேற்கொள்ள பாசுரங்கள் பாடலாம், துதிக்கலாம் அல்லது ஒரு நோட்டில் தொடர்ந்து “ஓம் நமச்சிவாய” என எழுதலாம்.
அதுபோல சிவராத்திரி முடிந்து காலை ஆனதும் பலர் தூங்கி விடுவதுண்டு. இதுவும் விரத முறையில் தவறாகும். சிவராத்திரி முடிந்து காலை சிவபெருமானை வணங்கி பூஜை செய்த பின் ஆகாரம் மேற்கொள்ளலாம். அதன்பின்னர் தங்களது அன்றாட வேலைகளை தொடரலாம், ஓய்வு நாளாக இருக்கும்பட்சத்தில் தூங்காமல் வேறு ஏதாவது செய்யலாம். சிவராத்திரிக்கு பிந்தைய காலையில் உறங்குவது விரதத்தின் பலனை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.
சிவபெருமானின் மொத்த அருளையும் பெற்று வாழ்வில் சிறக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் பாக்கியமான மகா சிவராத்திரியை முறையாக விரதத்துடன் கடைபிடித்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.