Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

Advertiesment
சித்திரை திருவிழா - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும்.


 


திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
 
மதுரையில் தினந்தோறும் திருவிழாதான். ஆனால் சித்திரை திருவிழாதான் பிரசித்தம். மீனாட்சி திருக்கல்யாணமும் மறுநாள் நடக்கும் தேரோட்டமும், அதை தொடர்ந்து சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மதுரைவாசிகளுக்கு மறக்க முடியாத நினைவுகள். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு அழகரை காண வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. 
 
சித்ரா பௌர்ணமியன்று வானில் முழு நிலவு ஜொலிக்க தலை நிறைய மல்லிகை சூடி அழகரை தரிசிக்க கூட்டம் கூட்டமாய் போகும் மதுரை பெண்களை தரிசிப்பது தனி அழகுதான். அழகர் மலையில் இருந்து மதுரை வந்து ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை 'சாமி இன்னிக்கு எங்க இருக்குது?' என்பதே சித்திரைத் 
திருவிழாவில் மதுரைக்கு வரும் மக்களின் முக்கியமான கேள்வியாக இருக்கும். 
 
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை. 
 
அது ஓரு புறம் இருக்க, சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. 
 
சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன. எது எப்படியோ நமக்கு பத்துநாள் திருவிழா கிடைத்ததே அதுதான் முக்கியம்.

Share this Story:

Follow Webdunia tamil