Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆவிகள் உண்டா?

ஆவிகள் உண்டா?
, திங்கள், 15 ஜூலை 2013 (17:22 IST)
மந்திரம், தாயத்து என்று பேசுபவர்களைப் பற்றிக் கேட்டிருப்போம், ஆவிகளுடன் உரையாடுபவர்கள் சிலரையும் அறிந்திருப்போம். காத்து, கறுப்பு அடித்துவிட்டால் என்ன செய்வது என்று அட்வைஸ் செய்வதற்கு ஊருக்குள் ஒரு கமிட்டியும் போட்டிருப்போம். ஆனால் ஆவிகளை நீங்கள் பார்த்ததுண்டா? நீங்கள் செய்யும் பூஜைகள் பயத்திலா அல்லது உண்மையில் அவற்றை கண்டதாலா? இங்கே ஆவிகளைப் பற்றி சத்குரு பேசுகிறார்... மர்ம முடிச்சு அவிழ்கிறது!
FILE

எல்லோருக்கும் அமானுஷ்யமான தொடர்புகள் வைத்திருக்க ஆசை. கல்லூரி விடுதிகளில் ஆவியுடன் பேச முற்படும் முயற்சி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இளைஞர்களுக்கு இது சுவாரஸ்யமான பொழுதுபோக்கு போலிருக்கிறது.

ஆவிகளைச் சந்திக்க வேண்டும் என்று எனக்குச் சிறு வயதில் தோன்றிய ஆசை, கேளிக்கைக்காகத் தோன்றிய ஆசை அல்ல. மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்து கொள்ள என்னுள் எழுந்த விழைவே அது. சுடுகாடுகளோடு அந்தத் தேடுதல் முடிந்துவிடவில்லை.

அமானுஷ்யமான நிகழ்வுகள் எங்கே நடப்பதாகக் கேள்விப்பட்டாலும், அங்கே தவறாமல் போய்விடுவேன். ஆவிகளின் நடமாட்டம் இருக்கிறது என்று சொல்லப்படும் கட்டடத்தில் நள்ளிரவுகளைக் கழிக்க நான் தயங்கியதில்லை. தன் ரத்தத்தை அருந்தக் கொடுத்து, ஆவிகளை வரவழைப்பதாகச் சொன்ன ஒருவருடன் பல அமாவாசை இரவுகளில் காத்திருந்து ஏமாந்திருக்கிறேன். அவருடைய ரத்தம் வீணாகியிருக்கிறதே தவிர, எந்த ஆவியும் வந்ததில்லை.

எனக்குத் தெரிந்த இளைஞனின் தந்தை, மனிதர்களைப் பீடித்த ஆவிகளைப் பிடித்து பாட்டில்களில் அடைத்துவிடுவார் என்று சொல்லக் கேட்டு, அவர் பின்னால் சிறிது நாட்கள் அலைந்தேன்.

ஒருமுறை அவருடைய தொழில் முறையை நேரில் காண வாய்ப்புக் கொடுத்தார். ஆவித் தொந்தரவு இருப்பதாகச் சொல்லப்பட்ட வீட்டில், தரையில் அரிசியால் பெரிது பெரிதாகக் கோலமிட்டார். அதன் ஐந்து முனைகளில் முட்டைகளை வைத்தார். ஏதேதோ மந்திரங்கள் சொல்லி, இரு கைகளையும் தட்டினார். பட்பட்டென்று ஐந்து முட்டைகளும் ஒரு சேர உடைந்தன. உடனே, விரல்களால் ஏதோ செய்து, அவர் கொண்டு வந்த பாட்டிலை பரபரப்பாக அழுத்தி மூடினார். அதற்குள் ஆவி சிறைப்பட்டுவிட்டதாகச் சொன்னார்.

அந்த வீட்டார் மகிழ்ந்து, அவருக்கு சகல மரியாதைகள் செய்து, அமர்க்களமான விருந்தும் கொடுத்தனர். ஆவியைப் பிடித்து அடைத்த அந்த பாட்டிலைத் திருடி வரக்கூட முயன்றேன். முடியவில்லை.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பறிபோயிற்று. அவரால் சிறைப்படுத்த முடிந்த ஆவியை ஏன் என்னால் பார்க்கக்கூட முடியவில்லை?

மறுநாள் கொய்யா மரத்தடிக்குச் சென்றேன். ஒரு கொய்யாவை உற்றுப் பார்த்து கைகளைத் தட்டினேன். என்ன ஆச்சர்யம்! அந்தக் கொய்யா அறுத்து விழுந்தது. அட, இவ்வளவு எளிதா? இனி கல்லடித்துப் பழங்களைப் பறிக்க வேண்டியதில்லையா? என் நண்பர்களைக் கூட்டி வந்து அவர்கள் கண்ணெதிரில் சில கொய்யாக்களைக் கைதட்டியே விழ வைத்தேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்று அந்தச் செயலைத் தவிர்க்கச் சொல்லி வற்புறுத்தியது. அதன் பிறகு, அந்த வேலையில் ஈடுபடவில்லை.

சில உன்னத அனுபவங்கள் எனக்கு சாத்தியமான பிறகு, ஆவிகள் உண்டா என்ற கேள்விக்குத் தானாகவே விடை கிடைத்தது.

ஆவிகள் பற்றி என்னிடம் கேட்கப்படும் போதெல்லாம், "உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றிச் சொல்வதில் அர்த்தமில்லை" என்றே சொல்லி வந்திருக்கிறேன். இப்போதும் என் அனுபவங்களை வைத்து நீங்கள் எந்த முடிவுக்கும் வரத் தேவையில்லை.

தியானலிங்கம் நிர்மாணிக்கப்பட்டபோது மிக சக்தி வாய்ந்த சூழல் அமைந்திருந்தது. அங்கே பல ஆவிகள் தாமாகவே இழுக்கப்பட்டன.
webdunia
FILE

உடலோடு இருக்கையில், உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். உடலற்ற நிலையில், உள்பதிந்த குணங்களை ஒட்டி, ஆவிகள் பல்வேறு சூழல்களுக்கு இழுக்கப்படுகின்றன.

அப்போது மட்டுமல்ல... சில சந்தர்ப்பங்களில் ஆவிகள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றன. ஆனால், அது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினால், அது உங்களுள் பல கற்பனைகளைக் கிளப்பும் என்பதால் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஆவிகள் இருப்பது நிஜம். ஆனால், அவை தலைகீழாகத் தொங்கும். இரண்டு கொம்பு முளைத்திருக்கும். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும் என்றெல்லாம் உலவும் கதைகளை நம்பி இருட்டு மூலைகளில் அச்சம் கொள்ளாதீர்கள்.

கடவுளிடம் உங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொல்லி சில இடைத்தரகர்கள் பிழைப்பது போல, ஆவிகளுடன் பேசுவதாகச் சொல்லியும் சில இடைத்தரகர்கள் பிழைப்பு நடத்துகின்றனர்.

அப்பாவின் ஆவி வந்தது. பாட்டியின் ஆவி வந்தது என்பதெல்லாம் கற்பனை. மரணத்தில் உடலைத் துறந்த பின், உடல் ரீதியான எல்லா உறவுமுறைகளும் அறுந்துவிடுகின்றன.

நம் பாரம்பரியத்தில் குரு-சிஷ்ய உறவு மிக மேன்மையானது என்று சொன்னதற்குக் காரணம், அந்த உறவு மட்டும்தான் மரணத்தைத் தாண்டியும் தொடரவல்லது.

கடவுளானாலும், ஆவியானாலும், யாரோ சொல்வதற்காக அதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தினாலேயே அது கிடையாது என்று மறுப்பதும் முட்டாள்தனம்!

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil