Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி!

ஆனந்தம் பொங்கும் மஹா சிவராத்திரி!
, வெள்ளி, 22 பிப்ரவரி 2013 (15:21 IST)
FILE
சிவன் தியானத்தில் ஆழ்ந்து அசைவற்று மலைபோல் அமர்ந்ததால் துறவிகள் கொண்டாடுகிறார்கள். அன்று பார்வதியை மணந்து மணவாழ்வைத் துவங்கியதால் குடும்பங்களில் கொண்டாடுகின்றனர். அவன் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதால் தொழில் செய்பவர்கள் கொண்டாடுகின்றனர். மஹா சிவராத்திரியைக் கொண்டாட வேறென்ன காரணமிருக்க முடியும்?

அதுவும் சிவன் அமர்ந்த மலையான வெள்ளியங்கிரியில் மஹா சிவராத்திரிக் கொண்டாட்டம். சிவன் அமர்ந்துவிட்டால் மட்டும் போதுமா? என்ன செய்தாலும் கைலாயம்போல் ஆகுமா? தென்கைலாயம் என்று பேர் பெற்ற வெள்ளியங்கிரி மலை, சிவன் இளைப்பாற அமர்ந்த மலையல்ல. தன் துயரத்தையெல்லாம் அவன் தவம் செய்து தொலைத்திட்ட மலை. அப்படி என்ன துயரம் சிவனுக்கு?

புன்னியாக்‌சி என்னும் பெண் சிவனை திருமணம் செய்யப் பல காலம் கடுந்தவம் புரிந்ததைப் பார்த்து, சிவன் மனம் குளிர்ந்து அவளைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அத்திருமணம் நடக்காமல் தடுக்க நினைத்த தேவர்களின் சூழ்ச்சியால், சிவன் புன்னியாக்‌சியை மனம் செய்யும் முன்பாகவே, அவள் கன்னியாகுமாரியில் கன்னியாக உயிர் துறந்தாள். அதனால் மனமுடைந்து போன சிவன் வந்து அமர்ந்த இடம்தான் இந்த வெள்ளியங்கிரி மலை.

அவர் தவம் செய்த காரணத்தால் கைலாய பர்வதத்தைப் போலவே சக்தி கொண்டது இம்மலை என நம்பப்படுகிறது. காட்சியையும் அளவையும் பொருத்தவரை மட்டுமே இது சிறியதாகத் தோன்றுமே தவிர, சக்தி நிலையில் சிறிதும் குறைந்ததல்ல. சிவன் வந்து சிறப்பித்த பின்பு, இம்மலை எண்ணற்ற சித்தர்களையும் யோகிகளையும் ஞானப்பாலூட்டி வளர்த்திருக்கிறது, இன்னும் வளர்த்துக் கொண்டும் இருக்கிறது. இந்த சக்தியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தால், முழு உலகத்தின் ஆன்மீகத் தேவைக்கும் இதுவே போதுமானது.

இந்த வருடம் இதைத் தெளிவாக உணர்ந்திடவும் உணர்த்திடவும் சிவாங்கா சாதனா பெரும்பங்கு அளிக்கப் போகிறது. ஒரு முறை கண்மூடி இம்மலையை மனத்தில் நிறுத்தி சிவநாமம் சொன்னாலே அருள் கிட்டும்போது, ஓராயிரம் பேர் அதன் மேலேறிவந்து மனதுருக வணங்கும்போது அருள் வெள்ளம் பாயுமன்றோ! உங்களையும் இவ்வெள்ளம் அடித்துச் செல்ல வேண்டுமென்றால் மஹா சிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு வாருங்கள்!

webdunia
FILE
வேறென்ன விசேஷம் வெள்ளியங்கிரியில்? பூமியின் சுழற்சி, வெளிமுகமாகச் செல்லும் மைய விலக்கு விசையை உருவாக்குகிறது. பூமத்திய ரேகையிலிருந்து 33 டிகிரி ரேகைவரை இவ்விசை நல்ல நிலையில் இருந்தாலும், இது செங்குத்தாக மேலே பாய்வது 11 டிகிரியில். உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு சுழற்றினால் எப்படி இரத்தம் தலைக்குப் பாயுமோ, அப்படித்தான் 11 டிகிரியில் உங்கள் உயிர்சக்தியும் இயற்கையாகவே மேல்நோக்கி செங்குத்தாகப் பாய்கிறது. ஈஷா யோகா மையமும் தியானலிங்கக் கோயிலும் நேரே 11 டிகிரியில் இருப்பது எதேச்சையாக இருக்க முடியாது. சிவன் நமக்குச் சாதகமாகச் செய்த சதியாகத்தான் இருக்க முடியும்.

கோள்களால் கோலம் போட்டு, காரிருள் என்னும் போர்வை போர்த்தி, முதுகை மட்டும் நேராக வைத்தால் முதுகுத்தண்டில் சீரிப்பாயக் காத்திருக்கிறான் சிவன். அவன் நீங்களும் நானும் பார்த்திருக்கும் சிவனன்று, சிவகாசி காலண்டர் காட்டும் சிவனுமன்று. ஆதியந்தமிலாமல் எங்கும் நிறைந்திருக்கும் வெறுமையும் இருளுமான சிவனவன். அவனை நாடி நாம் செல்லத் தேவையில்லை, அன்று அவன் நம்மை நாடி வருகிற அற்புதத்தை ஆகாயமே நமக்கு உணர்த்திவிடும்!

ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி விழாவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இவ்வருடம் ஈஷாவில் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி விழா தன் 19ஆம் ஆண்டில் கால் பதிக்கிறது. பல்லாயிரம் மக்கள் நேரடியாக கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சி பல தொலைக்காட்சி சேனல்களிலும் இணையத் தளங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்புடன் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மார்ச் 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை இவ்விழா நடைபெறும்.

மார்ச் 10ம் தேதி மஹா சிவராத்திரி.

Share this Story:

Follow Webdunia tamil