இந்தியாவில் படிப்பறிவு இல்லாத பலரும் செய்யும் ஒரு தொழில் வீட்டு வேலைக்குச் செல்வது. படிப்பறிவில்லாத ஏழை பெண்கள் அருகில் இருக்கும் வீடுகளுக்கு வீட்டு வேலை செய்யச் சென்றாலே அங்கு அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாதவை. இதில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் நிலையை எடுத்துக் கூற வேண்டுமா?
ஊரில் பிழைப்பின்றி, குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு, தெரிந்தவர்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு வீட்டு வேலை செய்யப் போகும் பெண்கள் பலரது நிலைமையும் கவலை கொள்ளும் விதமாகவே உள்ளது.
சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஜோர்டான், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகம் என்ற போதிலும் சவுதி அரேபியாதான் இதில் முதலிடத்தில் உள்ளது.
வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இத்தனை மணி நேரம்தான் வேலை என்றில்லாமல் நாள் முழுவதும் வேலை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் போதிய உணவும் அளிக்கப்படாமல், பேசிய ஊதியமும் அளிக்காமல் வைத்துக் கொள்ளும் எஜமானர்களும் உண்டு.
சிறு தவறுகளுக்காக அடிப்பது, உதைப்பது, திட்டுவது என்றும் நித்தம் நித்தம் இதுபோன்ற பெண்கள் அனுபவிக்கும் கொடுமை ஏராளம். இதற்கெல்லாம் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது.
வீட்டு வேலைக்குச் சேர்ந்ததும், எஜமானரிடம் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது. இதுபோன்றவர்கள் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டியே பல காரியங்களை சாதித்து விடுகின்றனர்.பாஸ்போர்ட்டும் கிடைக்காமல், சொந்த நாட்டுக்கு திரும்பிப் போகவும் முடியாமல், வேலை பார்க்கும் இடத்தில் நடக்கும் கொடுமைகளை வீட்டிற்கும் தெரியப்படுத்தாமல் பல பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் சொல்லி மாளாதவை.தற்போது, இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள், தங்கள் நாட்டுப் பெண்கள வெளிநாடுகளுக்கு வீட்டு வேலை செய்யப் போவதை தடை செய்துள்ளது. இதனால், இந்தியா, இலங்கை, பிலிப்பைனஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தற்போது அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் நைட்டி மட்டுமே அணிந்தபடி சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போலக் காணப்பட்டார். அவரிடம் இருந்த பாஸ்போட்டை வாங்கிப் பார்த்த காவல்துறையினருக்கு அவர் சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பது உறுதியானது. இவர் புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள மருதன்கோன் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகள் ரேவதி (வயது 25) என தெரியவந்தது.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நைட்டியுடன் விமானத்தில் ஏறி சென்னைக்கு வந்துள்ளார் என தெரியவந்தது. உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரேவதியை மீட்டுச் சென்றனர்.
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் பலர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகளில் சிக்கி மனநிலை பாதிக்கப்பட்டு நாடு திரும்புவதாகவும், இது போன்று தான் ரேவதியும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தியின் பின்னணியில், வீட்டு வேலைக்குச் சென்ற பெண், மன பாதிப்புக்குள்ளாகி மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இவர் மன நிலை பாதிக்கும் அளவிற்கு வீட்டு உரிமையாளரால் சித்ரவதை அனுபவித்திருப்பார். இப்படி தன் நிலையை அறிந்து கொள்ளக்கூட முடியாத நிலையில் ஏராளமான பெண்கள் நாடு திரும்புகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வறிக்கை.வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு நாட்டின் கடமையாகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பெண்களை பாதுகாக்க கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டியதும் அவசியம்.இதையடுத்தே வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்கு இந்தியப் பெண்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் இந்திய ரூபாயில் ஒரு லட்சத்திற்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இந்திய அரசின் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்குச் செல்வோர் இத்தகைய வங்கி உத்தரவாதத்தை அளிக்கத் தேவையில்லை. வங்கி உத்தரவாதத்தை அளிப்பதன் மூலமே வளைகுடா நாடுகளிலுள்ள தூதரகங்களில் அனுமதியைப் பெற முடியும். மேலும், இளம் பெண்கள் வீட்டு வேலைகளுக்குச் செல்வதால் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், குறைந்தபட்ச கல்வித் தகுதியுடையவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும். 30 வயதுக்குட்பட்ட பெண்கள் வெளிநாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குச் செல்லாதீர்கள் என்று இந்தியா, இலங்கை, நேபளா அரசுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசமே வைத்துக் கொள்ளவும், நினைத்த நேரத்தில் அந்த நாட்டை விட்டு தாயகம் திரும்ப உரிமை அளிக்கும் வகையில் சவுதியில் சட்ட திருத்தம் கொண்டு வரவும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.