பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு, அதில் இருந்து வெளியேற விரும்பும் பெண்களை திருமணம் செய்து கொள்ளப் போவதாக 1,400 இளைஞர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர்.
இவர்கள் தேரா சச்சா சவுதா என்ற சீக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாநிலம் சிர்சாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இன்று நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில், முதல்கட்டமாக 3 இளைஞர்கள் மட்டும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். மற்றவர்கள், ஓராண்டுக்குள், கொல்கத்தா மற்றும் டெல்லியைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளுவார்கள்.
எய்ட்ஸ் பரவலை தடுக்கும் வகையிலும், ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினாலோ, பாலியல் தொழிலில் இருந்து விடுபட எண்ணும் பெண்களும் கெளரவமான வாழ்க்கை நடத்த உதவும் வகையில் இந்த இளைஞர்கள் இத்தகைய புரட்சிகர முடிவை எடுத்துள்ளனர்.
இதோடு மட்டுமல்லாமல், அடிப்படைத் தேவைக்காக இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் சட்டப்படி தத்து எடுக்கவும் சில குடும்பங்கள் முன்வந்துள்ளன.
தனது குடும்பத்தினாலேயே இதுபோன்ற பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்களும், கடத்திவரப்பட்டு இந்த தொழிலில் விற்கப்பட்டவர்களும் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்றும், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி வருந்தும் பெண்களுக்கும் இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்புவோம்.