எல்லோருமே புலம்புவது ஒன்றே ஒன்றுதான். அதாவது, எவ்வளவுதான் சம்பாதித்தாலும் எதுவுமே கையில் நிலைப்பதில்லையே என்று.. இப்படி புலம்பக் காரணம் நாம் செலவழிக்கும் விதம்தான்.
செலவழிக்காமல் வாழ முடியாது. ஆனால், தேவையான அளவு பணத்தை செலவழித்துவிட்டு மிச்சத்தை சேமித்து வைக்கவும் முடியும்.
அதற்கு சில வழிகள் உள்ளன. அதாவது, ஒவ்வொருவரும் அவர்கள் செலவிடும் தொகையை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வர வேண்டும். இது எதற்கு என்று நீங்கள் சிந்திக்கலாம். எழுதும் போதுதான் நாம் எத்தனை தேவையில்லாத செலவுகளைச் செய்கிறோம் என்பது நம் மனதில் பதியும். மேலும், அடுத்த முறை சில செலவுகளை எப்படி சமாளிக்கலாம் என்றும் ஒரு யோசனை பிறக்கும். நமது வரவும், செலவும் சரியாக இருக்கும் என்றால், எந்த இடத்தில் செலவை குறைக்கலாம் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த செலவை ஒரேயடியாக நிறுத்திவிடலாம், சிறிது சிறிதாகக் குறைக்கலாம்.மேலும், நமது முதல் செலவே சேமிப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். சேமிப்பு என்றால் ஏதோ பெரியத் தொகையைத் தான் வங்கியில் செலுத்த வேண்டும் என்பதில்லை. தபால் அலுவலகத்தில் 100 ரூபாய் செலுத்தி ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்கினால் கூட போதும். கையில் கிடைக்கும் தொகையில் அதில் செலுத்தி வாருங்கள். அவசரத்திற்கும் உதவும், உங்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.இந்த சேமிப்பு ஆற்றல் உங்களை செலவாலியில் இருந்து செல்வந்தராகக் கூட மாற்றலாம்.
வீட்டிற்குத் தேவையான ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்காக ஒரு உண்டியல் வாங்கி வந்து அதில் கையில் கிடைக்கும் சிறு தொகையை அதில் போட்டு வரலாம். அது கணிசமான தொகையாக சேர்ந்ததும், நீங்கள் விரும்பியப் பொருளை வாங்கலாம். இது 100 ரூபாய் பொருளில் இருந்து 1000 ரூபாய் பொருள் வரைக்கும் பொருந்தும்.
சில சின்ன சின்ன விஷயங்களைச் செய்து பார்க்கலாம்...தேவையற்றப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்ப்பது, தேவையற்ற இடங்களுக்குச் செல்வது போன்ற விஷயங்களையும் மூட்டை கட்டிவிடுங்கள். மாதத்தில் முதல் 15 நாளில் ஒரு நாளும், அடுத்த 15 நாளில் ஒரு நாளும், நாள் முழுவதும் எந்த பொருளும் வாங்காமல், செலவழிக்காமல் இருந்து பாருங்கள்.
வீட்டிற்குத் தேவையானப் பொருட்களை பட்டியலிட்டு வாங்கி வாருங்கள். பட்டியலில் இல்லாதப் பொருட்களை வாங்குவதையும், பட்டியலில் இருக்கும் பொருளை விட்டுவிடுவதையும் தவிர்க்கவும்.
நீங்கள் செல்லும் இடத்திற்குத் தேவையான தொகையைத் தவிர அதிகமாக பணம் எடுத்துச் செல்வதைத் தவிருங்கள். மாதக் கடைசியில் செலவழிக்க சிறு தொகையை எப்போதும் தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இப்படி செய்து வந்தால் கையில் காசே இருப்பதில்லை என்று பலரும் புலம்புவது போல நீங்களும் புலம்ப தேவையில்லை.