முந்தைய காலத்தில் இருந்தே பெண் அடிமைத் தனம் பற்றி நாம் நீண்டு முழக்கிப் பேசிக் கொண்டிருக்கிறோம். பெண் அடிமைத் தனம் மாறி தற்போது ஆண்கள் சுதந்திரம் கோரி கொடி தூக்கும் அளவிற்கு பெண் இனம் வளர்ந்து விட்டது. ஆனால், முந்தைய காலத்தில் இருந்தே திருமண சடங்குகளில் பெண்ணுக்கே முதல் இடம் அளிக்கப்பட்டு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பொதுவாக திருமணம் என்றால் அதிகமாக கவனிக்கப்படுபவர் மணப்பெண் தான். அவரது ஆடை அலங்காரம், அழகு, நகைகள் போன்றவைதான் திருமணத்திற்கு வரும் பெரும்பாலானவர்களின் கவனிப்பாக இருக்கும்.
இது வேறு, ஆனால் நாம் இங்கு கூற விரும்புவது பல்வேறு சமுதாயங்களில் திருமண சடங்கில் மணப்பெண்ணிற்கு அளிக்கப்படும் முன்னுரிமையைப் பற்றியதாகும்.
தென்னிந்திய இந்துக்களின் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு கணவர் வீட்டில் பட்டுப்புடவை முதல், நகைகள் என அனைத்தும் கொடுத்து தனது மகனுக்கு பெண்ணை முடிவு செய்வார்கள். அந்த காலத்தில், பெண் வீட்டார் வரதட்சணைத் தர தேவையில்லை. பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார்தான் ஈடு செய்து அதாவது பெண் வீட்டிற்கு பொன்னோ அல்லது பொருளோ கொடுத்து பெண்ணை அழைத்து வருவார்கள். அதன் பிறகுதான் பெண்ணிற்குத் தேவையானவற்றை பெண் வீட்டார் தரும் பழக்கம் நாளடைவில் வரதட்சணையாக மாறியது.மேலும், திருமணமாகி வரும் பெண்ணிடம், வீட்டின் சாவி கொத்தை மாமியார் கொடுப்பதும், இந்த வீட்டில் இனி உனக்கும் உரிமை உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாகவே அமையும்.இந்து திருமணங்களில், தலை குனிந்து தாலியை பெண் ஏற்றுக் கொண்டாலும், தன் கணவரது குடும்பத்தை தலை நிமிரச் செய்யும் விதமாக பெண்ணிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே அனைத்து திருமண சடங்குகளும் உள்ளன.மலையாளி நாயர் திருமண முறையில் மணப்பெண் கணவன், மாமனார், மாமியார் காலில் விழுந்து வணங்கும் சடங்குகள் இல்லையாம். மணப் பெண்ணை இளவரசியாக பாவிக்கும் முறை அந்த சமுதாயத்தில் உள்ளது. பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளுக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு என்பதை பறைசாற்றுகிறது. அதே சமயம், தாங்கள் விரும்பும் பெரியவர்கள் காலில் விழுந்து அவர்களது பரிபூரண ஆசிர்வாதத்தைப் பெறவும் அவளுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அவளது சுதந்திரத்திற்கு தடையேதும் இல்லாத திருமண சடங்காக உள்ளது இது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள திருமண சடங்கு நிகழ்ச்சியில் ஒரு விநோதமான சடங்கு உள்ளது. அதாவது திருமணம் முடிந்த பிறகு மணப்பெண்ணை அவர்களது உறவினர்கள் சிறு கிளைகளைக் கொண்டு தாக்குவார்கள். அதற்கு மணப்பெண்ணும் தன் கையில் ஒரு கிளையை வைத்துக் கொண்டு தன்னை தாக்குபவர்களை செல்லமாக திருப்பித் தாக்க வேண்டும். இதற்கு, தன்னை யாராவது மோசமாக நடத்தினால், அவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உள்ளது என்பதை சடங்கு மூலமாக பெண்ணிற்கு எடுத்துக் கூறும் வகையில் உள்ளது. வங்காளத்தில் நடக்கும் திருமணச் சடங்கில், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வரும் மருமகளை வரவேற்கும் வகையில் சிறப்பாக சடங்கு ஒன்று நடைபெறுகிறது. கணவர் வீட்டில் அவளுக்கு பூரண அதிகாரம் அளிக்கும் வகையில் அந்த சடங்கு அமையும். மேலும், கணவர் வீட்டை செழுமையூட்ட வந்திருக்கும் மகாலட்சுமியாக மணமகள் கருதப்படுவாள், இந்த சடங்கில் மணப்பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
மார்வாடி திருமண முறையில், வீட்டிற்கு வரும் மணப்பெண்ணிடம், மாமனார் பை நிறைய பணத்தை வைப்பார், அதில் மணப்பெண்ணால் இயன்ற அளவிற்கு பணத்தை கையால் எடுத்துக் கொள்ள வேண்டும். மாமனார் வீட்டில் தனக்கும் உரிமை உள்ளது என்பதைக் காட்டுவது போல இந்த சடங்கு அமைந்துள்ளது. இதேப் போன்று பல்வேறு திருமண முறைகளில் பெண்ணிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது பெண்ணினத்திற்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.