மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. வீடடிற்குள்ளே அடங்கிக் கிடந்த பெண் சமுதாயம், வெளி உலகிற்கு அடி எடுத்து வைக்கும் போது ஏற்பட்ட பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு சவால்களில் வெற்றி பெற்றதன் அடையாளமாகவே இந்த உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் பெண்ணின் சுவாசக் காற்று இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்களின் கை ஓங்கி உள்ளது.
பெண் இனமே பிறக்கத் தகுதி இல்லாத இனம் என்று கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் பழக்கம் இருந்த இந்த உலகத்தில், தற்போது மருத்துவத் துறையில் உயிர்களைக் காப்பாற்றும் பணியில் கூட பெண்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும் காலமாக உருவாகியுள்ளது.
ஆண்களுக்கு எதிராகவும், பெண்களுக்காக போடப்பட்டு வந்த மூட நம்பிக்கை முடிச்சுகளுக்கு எதிராகவும் போராடி பெற்ற சுதந்திரம் தற்போது பெண்களாலேயே நசுக்கப்பட்டு வருகிறது.
மறைமுகமாகவும், நேரடியாகவும் பெண் சமுதாயம் இன்றளவும் பல கொடுமைகளை அனுபவித்து வந்தாலும், பெண்களால் பெண்கள் படும் கொடுமைகள்தான் அதிகம் என்று மனதிற்குள் ஒரு நெருடல்.
மாமியார் கொடுமையில் துவங்கி, பெண்களைப் பற்றி புரளி பேசும் பெண்கள் வரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பலவற்றில் பெண்களின் பங்குதான் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது.ஒரு குடும்பத்தில் பெண் இறந்துவிட்டால் உடனடியாக ஆணுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்து சிதறியக் குடும்பத்தை ஒன்றாக்கும் பெண் சமுதாயம், அதேக் குடும்பத்தில் ஆண் இறந்துவிட்டால் உடனடியாக அந்தப் பெண்ணைக் கைம்பெண் ஆக்கி அழகு பார்க்கிறது. பெற்றப் பிள்ளைகளை படிக்க வைப்பதும், வளர்த்து ஆளாக்குவதும் ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்படுகிறது.கட்டிய கணவனை தாயிடம் இருந்து பிரித்துக் கொண்டு செல்வதும் பெண்தான், தனது மகனை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு வரும் மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்து தற்கொலைக்குத் தூண்டுவதும் ஒரு பெண் தான்.
திருமணமான ஆண் என்று தெரிந்தும் மோக வலை விரித்து இன்னொரு பெண்ணிற்கு துரோகம் செய்வதும் பெண் இனம்தான். தனது கணவருடன் ஏற்படும் சண்டையில், கணவரது குடும்பத்தையே காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து குற்றவாளிகளாக நிறுத்துவதும் பெண் இனம்தான்.
பெண் சமுதாயம் முன்னேற வேண்டும் என்று கொடுத்த சலுகைகளை தவறான வழிகளில் பயன்படுத்திக் கொள்ளாமல், நமது முன்னேற்றத்திற்கு நாம் மட்டும் காரணமல்ல, நமக்குப் பின்னால் இருந்த ஆண் சமுதாயமும் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது இந்த நாளில் ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.நாம் படித்துவிட்டோம் என்பதற்காக நமது குடும்பத்தையோ, வேலைக்குச் செல்கிறோம் என்பதற்காக கணவனையோ தூக்கி எறியக் கூடாது. வாழ்வின் அடிப்படையே நமது குடும்பத்தான் என்பதை மறக்கவும் கூடாது.
சில பெண்கள் செய்யும் தவறினால் மொத்த பெண் சமுதாயமும் அல்லவா பழியை சுமக்கிறது. எனவே, சிறந்த பெண்மணியாக வாழ்வோம் என்று உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது நாம் உறுதி ஏற்போம்.