பொதுவாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சில அற்புதமான நகரங்கள் எத்தனையோ உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் நகரங்கள், கோயில்கள் நிறைந்த நகரங்கள், கடற்கரையோர நகரம், ஆறு பாயும் நகரம், மலைகளைக் கொண்டவை என எத்தனை எத்தனையோ விதமான நகரங்களைக் கூறலாம்.
ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எங்கு பார்த்தாலும் குப்பை மேடுகளும், சிவப்பு வண்ண ஓவியங்கள் துப்பப்பட்ட சுவர்களையுமே அதிகமாகக் காண முடியும். உண்மையில் சொல்லப் போனால் சென்னைக்கு மேற்கொண்ட அனைத்து பெருமைகளும் பொருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை எட்டாக்கனியாக செய்தது சென்னைவாசிகள்தான்.
கூவம் ஆற்றை, கூவம் கால்வாயாக மாற்றியுள்ளோம், ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையை பெரிய குப்பைத்தொட்டியாக்கியுள்ளோம், இயற்கை எழிலை கூட்டும் மரங்களை விட்டு வைப்பதே இல்லை. இப்படி இருக்க எப்படி இருக்கும் சென்னை மாநகரம் தூய்மையாக.சாலையோர நடைபாதைகளில் கடையைப் போட்டுக் கொண்டு சாலையையும் சேர்த்து அசுத்தம் செய்யும் கடைக்காரர்களும், வீட்டுக் குப்பைகளை குப்பைத் தொட்டியில் கொட்டாமல் சாலையோரத்தில் கொட்டிவிட்டுச் செல்லும் பொது மக்களும், வண்டியில் செல்லும் போது பாக்குப் போட்டுக் கொண்டு ஆங்காங்கே இச்க் இச்க் என்று துப்பிக் கொண்டே செல்லும் வாகன ஓட்டிகளும் மாறினாலும் மாறுவார்கள். ஆனால் சென்னையை மட்டும் தூய்மை நகரமாக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு சென்னை மாநகரத்தின் உடலில் அசுத்தம் எனும் புற்றுநோய் ரத்தம் முழுவதும் பரவிவிட்டது.
தமிழக அரசும் எத்தனையோ வழிமுறைகளைப் பின்பற்றிக் பார்க்கிறது. சாலையோர சுவர்களில் தெய்வங்களின் படங்களை வரைவது, ஓவியங்களை வரைவது போன்றவற்றை செய்கிறது. ஆனால் மக்கள் சுவர்களில் துப்புவதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு சாலையிலேயே துப்பிவிட்டுச் செல்கின்றனர். இந்த அளவுற்கு அவர்களது மனசாட்சி வேலை செய்வது எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. தெருவிற்கு ஒரு குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகளைக் கொட்டச் சொன்னால், அந்த குப்பைத் தொட்டியைக் சுற்றி குப்பையைக் கொட்டுகிறார்கள். அதிலும் காய்கறி, மீன் சந்தைகள் இருக்கும் பகுதிகளைக் கேட்கவே வேண்டாம்.
சில முக்கிய ஊர்களில் கூட ஒரு பக்கம் ஈ மொய்க்கும் சாலைகளும், அசுத்தமான மக்களும் ஏராளமாகக் காணப்படுகின்றனர். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும் என்று கூற வில்லை. இப்பகுதியை சுத்தமாக்க ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்பதே அப்பகுதியை தினம் தினம் கடந்து செல்லும் மக்களின் மனதில் தோன்றும் எண்ணமாக இருக்கும்.ஜோவென மழை பெய்தால் சென்னையின் தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாகும். ஆனால், லேசாக மழை பெய்தால் சென்னையே சாக்கடையாகிவிடும். சாலையில் ஒரு இடத்திலும் கால் வைக்க முடியாத அளவிற்கு சகதி தேங்கும். சாலையின் ஓரத்தில் சாக்கடையில் நடக்கிறாயா, நடுவில் சென்று பேருந்தில் நசுங்கி சாகிறாயா என்ற இரண்டே தேர்வுகள்தான் சென்னைக்கு வரும் வாசிகளுக்கு. இதில் பலரும் தேர்வு செய்வது நடுத்தெருவில் நடந்து செல்வதைத்தான்.
நியாய விலையில் பேப்பரும், பேனாவும் கிடைத்தாலும், கல்லூரி மாணவர்களுக்கு பேருந்துகளிலும், ரயில்களிலும் தங்களது பெயர்களை எழுதி ரசித்தால்தான் நிம்மதி. புத்தம் புதிய ரயில்களும், பேருந்துகளும் கூட இதுபோன்ற விளம்பரதாரர்களுக்கு பலிகடா ஆகியிருக்கும்.ரயில் நிலையத்தில் ஆங்காங்கே கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு குப்பையை எரிவது என்னவோ தண்டவாளப் பகுதியில்தான். தண்டவாளப் பகுதி என்றால் குப்பையைக் கொட்டுவதற்கு அனுமதி பெற்ற இடம் போல எல்லோருக்கும் ஒரு எண்ணம்.நமது ஊர்களில் வாழும் பசுக்களும், எருமைகளும்தான் மிகவும் பாவம். புல், பூண்டு கிடைக்காமல், காகிதத்தையும், பாலிதீன் கவர்களையும் மென்று தின்று வயிற்றில் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொள்கின்றன. குப்பைகளிலும் மக்கும் குப்பைகளைப் பற்றி கவலை இல்லை. அதுவே மக்காத குப்பைகள் நிலத்தையும், நீரையும் பாழாக்குகின்றன.
நீங்கள் ஒரு நாள் முதல்வராக இருப்பின் நமது ஊரைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள். உங்கள் கற்பனைக் குதிரையை கொஞ்சம் தட்டிவிடுங்கள் பார்ப்போம்.