மன அழுத்தம் என்பது யாரை எல்லாம் பாதிக்கும் என்று கேள்வி கேட்டால் சமுதாயத்தில் வாழும் அனைவரையுமே மன அழுத்தம் என்பது பாதிக்கும் என்று கூறுகிறார் மன நல மருத்துவர் ஒருவர்.
இந்த பதிலுக்கே பலர் கதிகலங்கி விடுவார்கள். மன அழுத்தம் என்பது ஒருவரது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், தோல்வி, ஏமாற்றம், நிராசைகள் போன்றவற்றால் ஏற்படுவதாகும். இவை ஒவ்வொரு மனிதரும் தினமும் நமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகள்தான்.
எனவே அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால், மன அழுத்தம் நம்மை அழுத்தாத வகையில் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் உள்ளது.நம்மிடம் விடப்பட்ட வேலையோ அல்லது எதிர்கொள்ளும் மனிதரையோ சமாளிக்கும் விஷயத்தில் ஏற்படும் சவாலினால் மனதில் ஏற்படும் ஒரு உணர்வே மன அழுத்தமாகும். இது சிலருக்கு எப்போதாவது ஏற்படும். ஒரு சிலருக்கு எப்போதுமே ஏற்படும். சிலருக்கு ஒரு சில விஷயத்தில் ஏற்படலாம். மன அழுத்தங்களில் இதுபோல் பல வகைகள் உள்ளன.இந்த மன அழுத்தத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால், மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். நகைச்சுவை உணர்ச்சிதான் அதற்கான உரிய மருந்தாகும்.மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறோம் என்று நம்மில் பலரும் அறிவதற்கே பல காலம் ஆகிறது. அதற்குப் பிறகு அதற்கான தீர்வை கண்டறிந்து வழி காண தாமதமாகிவிடும். அதற்குள் நமக்கு சிடுமூஞ்சி, சிரிக்க பணம் கேட்பார் என்பது போன்ற பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டு பல காலம் ஆகியிருக்கும்.மன அழுத்தத்தில் இருந்து நிரந்தரமாக தப்பிக்க இயலாது. ஆனால் அதை குறைக்கவோ, அதை சமாளிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியும். இதற்குத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. மன அழுத்தத்தை குறைக்க நமக்குள்ள பிரச்சினையை, நமது நலம் விரும்பி, உயிர் தோழன் அல்லது தாயிடம் சொல்லி மனதை லேசாக்கிக் கொள்ளலாம். அல்லது வாய் விட்டு அழுவது கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் கருவியாக இருக்கும். அழுதப் பின் மனம் லேசாகி விடுவதை பல முறை நாம் உணர்ந்திருப்போம்.மேலும், மன அழுத்தத்தை சமாளிக்கலாம். அதற்கு நமக்கு மன தைரியம் வேண்டும். நமக்கு வரும் பிரச்சினையை பிறரிடம் சொல்வதை விட, அதை எவ்வாறு சமாளிக்கலாம், அந்த பிரச்சினையால் அதிகபட்ச இழப்பு என்ன? நாம் முயற்சித்தால் மாற்றக் கூடிய விஷயமா? என பல கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு பதில் சொல்லிக் கொண்டே வாருங்கள். உங்களால் முடிந்த வற்றை செய்தாகிவிட்டதா? அதற்கு மேல் உங்கள் கையில் எதுவும் இல்லை என்றால், பின் எதற்காக அதைப் பற்றி கவலைப் பட வேண்டும். கவலை மட்டும் படுவதால் எந்த பிரச்சினையும் தீராது என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு மன அழுத்தத்தை சமாளிக்கலாம்.
சிலர் யாரிடமும் எதையும் கூறாமல் உம்மென்று இருப்பார்கள். ஏதேனும் பிரச்சினை என்றால் எல்லோரிடமும் எரிந்து விழுவார்கள். கோபப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு என்னதான் பிரச்சினை என்று யாரிடமும் சொல்ல மாட்டார்கள். இதனால் அவர்களது மன அழுத்தத்தை அவர்கள் தாங்கிக் கொண்டு அதை வேறு வழியில் வெளிப்படுத்துகின்றனர். அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாம் சமாளிக்கலாம் என்று நம்பிக்கையோடு மன அழுத்தத்தை தாங்கிக் கொள்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் மன நிலையைப் பொருத்ததே அமையும்.வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழி எதற்கு பொருந்துமோத் தெரியாது, மன அழுத்தத்திற்கு அதிகமாக பொருந்தும். எனவே, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள வாய் விட்டு சிரியுங்கள் போதும்.