உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது ஒரு சிறுநீரகத்தையே தானமாகக் கொடுத்துள்ளார் ஒரு மாமியார்.
மாமியார் - மருமகள் என்றால் ஏதோ எலியும் பூனையும் என்று பேசி வந்த கதைகளை மாற்றும் விதத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.
குஜராத் மாநிலத்தில்தான் இந்த சாதனைச் சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் நீதா தாக்கர். 39 வயதான இந்த பெண்மணியின் 2வது பிரசவத்தின் போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது உடல் வீங்கியது. மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே பழுதாகிவிட்டது தெரிய வந்து.
உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், நீதா தாக்கரின் தந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.
9 ஆண்டுகளுக்கு முன்பு நீதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உடல் நலம் தேறிவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நீதாவுக்கு மீண்டும் அதேப் பிரச்சினை ஏற்பட்டது. மாற்று சிறுநீரகமும் செயலிழந்தது தெரிய வந்தது.
உடனடியாக மாற்று சிறுநீரகத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலையில் குடும்பத்தினர் தவித்தனர். பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சகோதர, சகோதரிகளின் சிறுநீரகங்கள் பொருந்தும். ஆனால் நீதாவின் சகோதர, சகோதரிகள் சிறுநீரக தானம் தர மறுத்துவிட்டனர்.
நீதா இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நீதாவின் மாமனாரது தங்கை (அதாவது சின்ன மாமியார்) சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன் வந்தார்.
தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்தார். அவரது சிறுநீரகமும் நீதாவிற்கு பொருந்தும் என்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதா தற்போது உடல் நலம் சீரடைந்து வருகிறார்.
இந்த விஷயத்திற்கு மருத்துவமனை மருத்துவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. பொதுவாக இதுபோன்று மாமியார் எந்த மருமகளுக்கும் சிறுநீரகத்தை தானமாக அளித்தது இல்லை. இது மிகப்பெரிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிறுநீரகத்தை தானமாகப் பெற்ற நீதா கூறுகையில், ஒரு முறை சிறுநீரகம் செயலிழந்த போதே எனது ரத்த சொந்தங்கள் கைவிரித்துவிட்டனர். எனது தந்தை தான் என்னைக் காப்பாற்றினார். அதன் மூலம் கடந்த 9 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து வந்தேன். மீண்டும் சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும் அவ்வளவுதான் நம் வாழ்க்கை என்று நினைத்தேன். ஆனால் இறுதியாக என் மாமியார் எனக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்த கீதா பென் இது குறித்து பேசுகையில், நீதாவை எனது மகளாக நினைக்கிறேன். அவளை நேசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அவள் மருமகளாக நடந்து கொள்ளவில்லை. மகளாகவே வாழ்ந்துள்ளார். அவளது அன்பு, பெரியவர்களை மதிக்கும் குணம், அன்பான சுபாவம் எல்லாம் தான் அவளை எங்களது மகளாக நினைக்க வைத்துள்ளது. எனது மகளுக்கு என் சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்ததை நான் பாக்கியமாகவேக் கருதுகிறேன் என்று மனமுவந்துக் கூறினார். எப்போதும் போர் முனையில் சந்திக்கும் எதிரியாகவே மாமியார் - மருமகளை காண்பிக்கும் சினிமாக்களும், சின்னத்திரை தொடர்களும் இதுபோன்ற நிஜங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லா வீட்டிலும் மாமியாரும் மருமகளும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதில்லை. பாசமான மாமியாரும் உண்டு, அன்பான மருமகளும் உண்டு. என்ன சொல்றீங்க... நாங்க சொல்றது சரிதானே?