வரும் ஜூன் மாதம் 1,2,3 இந்த தேதிகளில் உங்கள் குழந்தையின் பள்ளிகள் திறக்கப்படலாம். புது வகுப்பில் முதல் நாள் பள்ளிக்குச் செல்ல உங்கள் குழந்தைகள் தயாராக உள்ளனரா?
இப்போது மே மாதம்தானே.. இதற்குள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்லத் தயாராக்க வேண்டுமா என்று யோசிக்காதீர்கள். சரியாக இன்னும் 3 வாரம் மட்டுமே உள்ளது. பள்ளிக்குச் செல்ல தயாராக்குவது என்றால், அவர்களது மனநிலை மற்றும் பழக்க வழக்கங்கள் பள்ளிக்குச் செல்வதற்கான ஆயத்தங்களோடு இருக்கும் வகையில் மாற்றுவதைப் பற்றிக் கூறுகிறோம்.
முதலில் உங்கள் குழந்தைகளை இந்த விடுமுறையில் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற உதவுங்கள். அதாவது நல்ல சிறந்த சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லுங்கள். சுற்றுலா என்றால் ஏதோ கொடைக்கானல், ஊட்டிக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவர்கள் விரும்பும் ஒரு பொழுதுபோக்குத் தலத்திற்கு (விஜிபி, எம்ஜிஎம்) ஒரு நாள் முழுவதும் அவர்கள் விளையாடி மகிழும் வகையிலான ஒரு இடத்திற்காவது அழைத்துச் செல்லுங்கள்.
அருகில் உள்ள கோயில்கள், உறவினர்கள் வீடுகளுக்கும் அழைத்துச் செல்லுங்கள். ஒரு சில நாளைக்காவது உறவினர்களது வீடுகளுக்குச் சென்று தங்கும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். இதன் மூலம் பல புதிய நண்பர்களையும், பல புதிய விஷயங்களையும் அவர்கள் அறிந்து கொள்ள வழி ஏற்படும்.
இந்த விடுமுறையை அவர்கள் மகிழ்ச்சியாகக் கழித்தால்தான் வரும் மாதங்களில் அவர்களது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எனவே, விடுமுறைக் கொண்டாட்டத்தை அவர்கள் சிறப்பாக செலவழிக்க வழி ஏற்படுத்துவது உங்கள் கடமையாகிறது.மேலும், பள்ளிக்குத் தேவையானப் பொருட்களை பை, சீருடை, புத்தகங்கள் போன்றவற்றை வாங்கவும் இதுதான் சரியான நேரமாகும். பள்ளித் துவங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு எங்கும் கூட்டமாக இருக்கும். அதில்லாமல் சீருடைகளை புதிதாக தைக்க வேண்டியது இருந்தால் அதற்கும் நேரம் ஆகும். தற்போதே துணிகள் எடுத்து தைக்க கொடுப்பது கடைசி நேரத்தில் சிக்கலைத் தவிர்க்க உதவும்.
பிள்ளைகளை இரவில் அதிக நேரம் தூங்காமல் இருந்து விளையாட அனுமதிக்க வேண்டாம். இது பள்ளிக்குச் சென்ற பிறகும் தொடரும் வாய்ப்பு உண்டு. எனவே இனிமேல் சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்திரிக்க பழக்கப்படுத்துவது அவசியமாகிறது.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். தேவையற்ற உணவுகளை வாங்கிக் கொடுத்து பள்ளிக்குச் செல்லும் போது பல வியாதிகளோடு செல்ல வேண்டி வரக் கூடாது. பெண் குழந்தைகளின் தலை முடி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள். தலை வாரி பின்னல் போடுவதாக இருந்தால் அதற்கான ரிப்பன் போன்றவற்றை வாங்கி அதனை பத்திரப்படுத்துங்கள். இல்லை தலை முடியை சிறியதாக வெட்டுவதாக இருந்தால் அதையும் இப்போது செய்யலாம்.
சிறிய பெண் குழந்தைகளுக்கு தலை முடி வெட்டி விடுவதுதான் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தலையில் அழுக்கு சேராமலும், பேன் போன்றவை ஏற்படாமலும் தடுக்கலாம். காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்திற்கு எளிதான வழியாக இருக்கும்.மேலும், விரைவில் பள்ளிக்குச் செல்லவிருக்கிறோம் என்பதை நினைவூட்டி, அது பற்றிய மகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதாவது, மீண்டும் உங்கள் நண்பர்களை சந்திக்கப் போகிறீர்கள், ஜாலியான நேரங்கள், விடுமுறை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்று நல்ல விஷயங்களைப் பற்றி பேசுங்கள்.
அவர்களுக்கு பள்ளிக்குச் செல்வது பற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்படி உங்கள் பேச்சு அமைய வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். அதே சமயம், குழந்தைகளை நனறாக விளையாட அனுமதியுங்கள். வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.மாலையில் அதிக நேரம் விளையாட அனுமதிப்பது நல்லது. இரவில் நல்ல கதைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களது பழக்க வழக்கத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கடந்த முறை செய்த தவறுகள்.. பள்ளிக்கு காலதாமதமாகச் செல்வது, அடிக்கடி விடுமுறை எடுப்பது, பள்ளி வகுப்பு நேரத்தின் போது அரட்டை அடிப்பது போன்ற நடவடிக்கைகளை வரும் ஆண்டில் தவிர்க்க வேண்டும் என்று உறுதி ஏற்க வலியுறுத்துங்கள்.அவர்கள் படிப்பில் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறி அதற்கு அடுத்த நிலையை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கூறுங்கள். அப்படி ஒரு படி முன்னேறினால் அதற்காக நீங்கள் என்னப் பரிசு வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் என்றும் கூறுங்கள்.இன்னும் இருக்கும் 3 வாரத்தில் உங்கள் பிள்ளை, மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் செல்வதற்கான வழிகளை பின்பற்றுங்கள். அவர்களை பள்ளிக்குச் செல்லத் தயாராக்குங்கள்.