பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று வாக்கு இருக்கிறது. ஆனால் பெண்ணாய் பிறந்தவள், அவளது பெற்றோருக்குக் கூட உதவ முடியாத ஒரு நிலை தற்போது சமுதாயத்தில் உள்ளது.
அதாவது, பெற்றோரின் சொத்தில் சம பங்கு தர வேண்டும் என்று பெண்ணிற்கு உரிமை வாங்கித் தந்த இந்த சமூகம், அந்த பெண்ணால் பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு எந்த ஆதாயமும் கிடைக்க வழி செய்யவில்லை.
ஒரு ஆண் குடும்பத்திற்கு சேர்த்து ஆயுள் காப்பீடு எடுத்தால், அது அந்த ஆணின் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், அதே சமயம் ஒரு பெண் என்றால் அவளது குடும்பம் என்பது அவளது கணவன் மற்றும் குழந்தைகள் மட்டுமே. இதில் பெண்ணின் தாய், தந்தையர் வரமாட்டார்கள்.அதேப்போல, அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆணுக்கு ஈ.எஸ்.ஐ. பணம் பிடிக்கப்பட்டு, அதற்கான சேவையைப் பெறுவாரானால் அவரது தாய், தந்தைக்கும் அது பொருந்தும். இதுவே திருமணமான பெண் என்றால் அதில் அவளது கணவன் மற்றும் குழந்தைகள் மட்டுமே இடம்பெறுவர். (தற்போது இது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது)இதேப்போல, ஒரு பெண் தனது திருமணத்திற்குப் பிறகு தான் பிறந்த வீட்டை எந்த வகையிலும் ஆதரிக்க இந்த சமூகம் வழி செய்யவில்லை. இந்த நிலையில், ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு ஆதரவாக இருப்பதை அவளுடைய திருமணம் மாற்றி விடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு மராட்டிய அரசு சட்டத்தின்படி, அரசுத் துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பணியின்போது இறந்து விட்டாலோ அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறும் பட்சத்திலோ, அவர்களுடைய மகன் அல்லது மகள் அல்லது சட்டப்பூர்வ உரிமை பெற்ற வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஆனால் பெண் பிள்ளையாக இருக்கும்பட்சத்தில், அவர் திருமணமாகாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவருக்கு வேலை கிடைக்கும்.இந்த சட்டத்தின்படி புனேயை சேர்ந்த மேதா பார்கே என்ற பெண்ணுக்கு அரசு வேலை தரப்பட்டது. அவருடைய தந்தை முன்கூட்டியே ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மேதா பார்கேவுக்கு வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்த பிறகு அவருக்கு வேலை கிடைத்தது. இந்த 3 ஆண்டு காலத்தில் அவருக்கு திருமணம் நடந்து விட்டது.எனவே இதனை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு, டிசம்பர் 21-ந் தேதி அன்று மேதா பார்க்கர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் அவர் கடந்த 2006-ம் ஆண்டு, ஜனவரி 31-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். அவருடைய மனுவை விசாரித்த நீதிமன்றம், மேதா பார்கேயை வேலையில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது. எனவே அவருக்கு வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட நாளில் இருந்து தர வேண்டிய சம்பளத்தை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றததில் மராட்டிய அரசு மேல்முறையீடு செய்தது. அதில், மேதா பார்கருக்கு திருமணமாகி விட்டதால், அவருடைய தந்தையின் வேலைக்கு அவர் உரிமை கோர முடியாது என்று கூறி இருந்தது.
அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி நிஷிதா மாத்ரே விசாரித்து தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார். தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை நீதிபதி உறுதி செய்தார்.
நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், மனுதாரரின் பெயர் 3 ஆண்டு காலம் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, பின்னர் வேலை தரப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தது. ஆனால் காத்திருப்பு பட்டியலில் பெயர் இருக்கிறது என்ற காரணத்துக்காக மனுதாரரை அவர் தன்னுடைய வாழ்க்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றோ, அல்லது விட்டு விட வேண்டும் என்றோ எதிர்பார்க்கக் கூடாது. திருமணம் செய்ததன் மூலம் பார்கே மோசடி செய்து விட்டார் என்று கூறுவது நியாயமற்ற தொழிலாளர் நடைமுறை ஆகும்.
தற்போதைய கால கட்டத்தில் திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டு உறவை துண்டித்து விட்டு, அவர்களை வறுமையில் தவிக்க விட்டு விடுவார் என்று கருதக்கூடாது. பிறந்த வீட்டிற்கு ஆதரவாக இருப்பதை ஒரு பெண்ணின் திருமணம் மாற்றி விடாது.மராட்டிய அரசின் சட்டம் பெண்களுக்கு எதிரானது. எனவே மேதா பார்கேயை வேலையில் இருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது என்று கூற முடியாது. அவரிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் பணிநீக்கம் செய்தது நியாயமற்ற தொழிலாளர் நடவடிக்கை ஆகும் என்று கூறியுள்ளனர்.இந்த தீர்ப்பு, பெண்களுக்கு சட்ட ரீதியாக மறுக்கப்பட்டு வந்த பல்வேறு உரிமைகளை மீட்டுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோருக்கு எந்த வகையிலும் ஆதரவாக இருக்க முடியாத வகையில்தான் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்ணைப் பெற்ற பெற்றோர் வீதியில்தான் நிற்க வேண்டுமா? ஆணைப் பெற்றவர்கள் மட்டும்தான் அனைத்து சலுகைகளையும் பெற்று வாழ வேண்டுமா? பெண்ணுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்த இந்த சமூகம், பெண்ணைப் பெற்றவர்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.ஒவ்வொரு பெண்ணிற்கும், தன்னைப் பெற்றவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களது உதவியை பெற்றோர் பெறவும் பல நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இதைத்தான் இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது.