வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது எனறு நம்மில் பலர் நினைக்கிறோம். இதுவே நாம் நமது சந்தை விலையைக் குறைக்க வித்திடுகிறது. நாம் எதிர்பார்க்கும் ஊதியத்துடன் வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் திறமையான ஊழியருக்கு நல்ல ஊதியம் தருகிறது என்பதுதான் உண்மை. இதைவிடப் பெரிய உண்மை என்னவென்றால், ஆணுக்கு அதிக ஊதியமும் அதே வேலையைப் பார்க்கும் பெண்ணுக்கு குறைந்த ஊதியமும் சில நிறுவனங்கள் தருகின்றன! இதற்கு முக்கிய காரணம் பெண்கள் சிந்திக்கும் விதமும் அவர்களுடைய மனப்பான்மையும் என்றே கூறவேண்டும்.
தங்கள் திறமைகளை மதிப்பிட்டு ஒரு தொகையை ஊதியமாக நிறுவனங்கள் முன்வைக்கின்றனர் என்று பெண்கள் நினைக்கின்றனர். “நம் திறைமைக்கு இவ்வளவுதான் ஊதியம் கிடைக்கும்” என்ற தாழ்வு மனப்பான்மையும், “இதற்கு மேல் கேட்டால் வேலை கிடைக்காமல் போய்விடுமோ” என்று அச்சமும் குறைந்த ஊதியத்திற்கு அவர்கள் வேலை செய்யக் காரணமாகிறது. அதே நேரத்தில் ஆண்கள் இது பேரம் பேச தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு என்று நினைக்கின்றனர். இந்த வித்தியாசமான மனப்பான்மையே பெண்களுக்கு குறைவான ஊதியத்தை பெற்றுத் தருகிறது.
இந்த மனப்பான்மையை மாற்றி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை பெண்கள் பெற கீழே உள்ள குறிப்புகள் உதவும்.
பேசப் போவது என்ன?
எந்த ஒரு இன்ட்டர்வியூவிற்கும் செல்வதற்கு முன்னர் அந்த நிறுவனத்தில் அதே வேலையில் உள்ளவர்களுக்கு என்ன ஊதியம் கிடைக்கிறது, மற்ற நிறுவனங்களில் என்ன ஊதியம் கிடைக்கிறது என்று ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். அத்துடன் இந்த வேலைக்கு உங்கள் தகுதி, அனுபவம் ஆகியவற்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நிறுவனங்கள் முதலில் முன்வைக்கும் தொகை குறைவானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் தன்னம்பிக்கையுடன் அதிகமான தொகையைக் கேளுங்கள். கிடைத்தால் நல்லது, கிடைக்கவில்லை என்றால் கவலை இல்லை. கேட்டிருந்தால் கிடைத்திருக்குமோ என்ற கவலையும் இருக்காது.
நிறுவனங்களின் மனப்பான்மை என்ன?
பல பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் அதே ஊதியத்தை தருவார்கல் என்று நம்ப வேண்டாம். ஊதியத்தைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் திறமையை வெளிப்படுத்தும். குறைவான ஊதியத்தை ஒத்துக்கொண்டால் உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்வதாகும். இந்த ஊதியத்திற்கு இவர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நிறுவனங்கள் நம்புவதாலேயே அவர்கள் ஒரு குறைவான தொகையை உங்கள் முன்வைக்கின்றனர். அத்துடன் பெண்கள் வேலைப் பார்ப்பது குடும்பத்தை நடத்துவதற்கு அல்ல என்றும் அது அவர்களுக்கு ஒரு 'எக்°டிரா' தொகை என்றும் பலர் இன்றும் நம்புகின்றனர்.
உங்கள் திறமைகள் என்ன?
எனக்கு அதிகப்படியான ஊதியம் வேண்டும் என்று கேட்டால் மட்டும் பத்தாது. அதை ஏன் அந்த நிறுவனம் தர வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான ஒன்று என்றாலும் பெண்கள் தங்களைப்பற்றிக் கூறுவதை விரும்புவதில்லை. நான் அதைச் சாதித்தேன், நான் இதைச் செய்தேன் என்று பறைசாற்றிக்கொள்ள பொதுவாக அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு கூறும் வகையில் எதுவும் செய்யவில்லை அல்லது இதுதான் உங்கள் முதல் வேலை என்றால், வேலையில் உங்களுக்கு உள்ள ஆர்வத்தையும், திறமைகளை வளர்த்துக்குகொள்ள உங்களுக்கு உள்ள விருப்பத்தையும் நிறுவனங்களுக்கு புரியவைப்பது மிகவும் முக்கியமாகும்.
முடிவு என்ன?
அதிகாமான ஊதியம் வேண்டும் என்று கூறிவிட்டீர்கள். அனால் நிறுவனத்திடம் இப்போது வசதி இல்லை, உங்களுக்கு அனுபவம் போதவில்லை, இதைவிட குறைவான ஊதியத்திற்கு வேலையில் சேர காத்திருக்கும் நபர்கள், என்று பல காரணங்களால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படலாம். இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால் “மன்னிகவும் என்னால் இந்த ஊதியத்திற்கு வேலையில் சேர முடியாது” என்று கூறிவிட்டு வந்துவிடுங்கள். இல்லை வேறு வேலை கிடைப்பது சிரமம் என்றால், உடனே ஒத்துக்கொள்ளாதீர்கள். நிறுவனத்திற்கு உங்கள் மேல் உள்ள மதிப்பு குறைந்துவிடும். அதற்காக ஊதியத்தை விட்டுவிட்டு வேறு எந்த விதத்தில் நிறுவனத்தால் உங்களுக்கு உதவ முடியும் என்பதைப்பற்றி பேசிப் பாருங்கள். அத்துடன் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகு ஊதியத்தை அதிகரிக்க ஒப்புக் கொண்டால் வேலையை ஒப்புக் கொள்ளலாம்.