நீங்கள் செல்போன் வைத்து இருக்கிறீர்களா? நாடு முழுவதும் செல்போன் சேவையை முறைப்படுத்தும் வகையில், செல்போன் வைத்து இருப்போரின் இருப்பிட மற்றும் அடையாள சான்றிதழ் விவரங்களை மறுசரிபார்ப்பு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
செல்போன் சேவை வழங்குவதில், மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனமும், தனியார் துறையில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன், ரிலையன்ஸ் என எண்ணற்ற நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இவற்றில் முன்பெல்லாம் சில நூறு ரூபாய்களைப் பெற்றுக் கொண்டுதான் சிம்கார்டுகள் வழங்கப்பட்டன. செல்போன் சேவையைப்பெற விண்ணப்பத்துடன், இருப்பிட சான்றிதழ், புகைப்பட அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் வழங்க வேண்டும்.
ஆனால் போட்டி அதிகரித்து செல்போன் சேவை அறிமுகமான புதிதில், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக, கேட்டவர்களுக்கெல்லாம், உரிய ஆவணங்கள் இன்றி தாராளமாக `சிம் கார்டு' வழங்கினார்கள்.
மாணவர்களுக்கு இலவசமாக சிம் கார்டுகளை டாக் டைமுடன் கொடுத்து வாடிக்கையாளர்களை பெருக்கும் நோக்கோடு சில புதிய நிறுவனங்கள் சிம் கார்டுகளை அள்ளி வீசின.
இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் சவால் ஏற்பட்டது. தற்போது செல்போன் என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகிவிட்டது. ஏதேனும் குற்றம் நடந்தால் அதை கண்டுபிடிப்பதில் செல்பேசி முக்கியப் பங்காற்றுகிறது.
எனவே, இதைக்கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் செல்போன் சேவையை முறைப்படுத்தும் வகையிலான தகவல் திரட்டும் பணியை, மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை மேற்கொண்டுள்ளது.
"செல்போன் சேவையை பயன்படுத்துவோர் உடனடியாக, தங்கள் முகவரி மற்றும் அடையாள சான்றிதழ், சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் (கையெழுத்துடன்) ஆகியவற்றை, விண்ணப்ப படிவத்துடன், இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று பி.எஸ்.என்.எல். உள்பட அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் கோரி உள்ளன. அதன்படி, தகவல் திரட்டும் பணிகள் தொடங்கி உள்ளன.
பி.எஸ்.என்.எல். இணைப்புகளை பொறுத்தவரையில் விண்ணப்பத்துடனேயே உரிய ஆவணங்களை பெறுகிறோம். இருந்தாலும், எஸ்.எம்.எஸ். மூலம் ஆவணங்களை மறுசரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம், மறுசரிபார்ப்பு பணிகள் மூலம், நாடுமுழுவதும், ஏறக்குறைய 30 லட்சம் செல்போன் இணைப்புகள் செயல்பாட்டை இழக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.