கோமா நிலையில் கடந்த 36 ஆண்டுகளாக இருக்கும் தனது தோழியை நிம்மதியாக சாக விடுங்கள் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஒரு பெண்.
மராட்டிய மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர் அருணா ராமச்சந்திரா ஷான்பாக். 1966-ம் ஆண்டு செவிலியர் (நர்ஸ்) படிப்பை முடித்த அவர் மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்தார். மருத்துவமனையில் சிறந்த சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் தனது செவிலியர் பணியை சிறப்புடன் செய்து வந்த ஷான்பாக்கின் வாழ்வில் ஒரு நயவஞ்ஜகனின் காம வெறி சூறாவளியாகத் தாக்கியது.
1973-ம் ஆண்டு ஒரு துப்புரவு தொழிலாளி ஷான்பாக்கை பாலியல் வன்முறை செய்து கற்பழித்துவிட்டான். தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய ஷான்பாக்கை, அந்த காமுகன் தாக்கினான். இந்த தாக்குதலில் நினைவிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்தான், கடந்த 36 ஆண்டுகளாக நினைவிழந்து கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.
தற்போது அவருக்கு, 59 வயதாகிறது. அவருக்கு மீண்டும் நினைவு திரும்புமா? என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், படுத்த படுக்கையாக, நினைவின்றி இருக்கும் ஷான்பாக்கின் உடல், எலும்புகள் தெரியும் வகையில் மெலிந்து காணப்படுகிறது. அவரைப் பார்ப்பவர்களின் உள்ளத்தில், யாருக்கும் இந்த கதி நேரக் கூடாது என்ற வேதனையும், இந்த பெண்ணிற்கு எந்த இந்த வேதனை என்ற கவலையும்தான் தோன்றுகிறது.
இந்த கருணை எண்ணம்தான், தற்போது நீதி தேவதையின் கதவுகளை தட்டியிருக்கின்றன. ஷான்பாக்கின் பரிதாப நிலையை கண்டு பொறுக்க மாட்டாமல், அவரது நெருங்கிய தோழி, பிங்கி விராணி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நினைவின்றி இருக்கும் என்னை நிம்மதியாக சாக விடுங்கள் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று ஆலோசித்தது.
அப்போது, ஷான்பாக்கின் வக்கீல் சேகர் நப்டே கூறுகையில், இந்த மனு கருணைக் கொலை கோருவது அல்ல. இது மனித உரிமை சம்பந்தப்பட்டதும் அல்ல. ஷான்பான்க்கின் வாழ்கை அழிந்து வரும் விலங்கினங்களை விட மோசமாக உள்ளது. எனவே அவர் சாவதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்' என்று கனத்த மனதுடன் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், ஷான்பாக்கின் உடல் நலம் குறித்து மராட்டிய அரசும், மும்பை நகர நிர்வாகமும், மருத்துவ சோதனைகள் நடத்த உத்தரவிடவேண்டும் என்று நப்டே கேட்டுக் கொண்டார்.
அப்போது, நமது நாட்டின் சட்டப்படி ஒருவர் சாவதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுவின் மீது மத்திய அரசுக்கும், மராட்டிய மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்ப ஒப்புக்கொண்டனர்.
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பதில் மனுவைப் பொறுத்தே ஷான்பாக்கின் மரணம் முடிவு செய்யப்படும்.