சவுதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான இஸ்லாமிய சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் அங்கு பல்வேறு உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் பர்தா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும், தனியாக கார் ஓட்டக் கூடாது போன்ற பல்வேறு சட்டங்கள் பெண்களுக்கு எதிராக உள்ளன. அவ்வளவு ஏன், சட்டம் படித்த பெண்கள் அங்கு நீதிமன்றங்களில் வாதாட அனுமதி கிடையாது.
சட்டம் படித்த பெண்கள் வெறுமனே அரசு அலுவலகங்களில் பணியாற்றலாம் அல்லது நீதிமன்ற அலுவலகங்களில் பணியாற்றலாம். அவ்வளவுதான்.
இந்த நிலையில், சட்டம் படித்த பெண்கள் நீதிமன்றங்களுக்கு வந்து வாதாட வழி செய்யும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.
சவுதி அரேபியாவின் சட்ட அமைச்சர் ஷேக் முகமது அல் இசா செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், நீதித்துறையை மேம்படுத்த மன்னர் திட்டமிட்டு இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக பெண்கள் நீதிமன்றங்களில் வாதாட அவர் அனுமதி அளிக்க இருக்கிறார். இது தொடர்பாக பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இந்த சட்டத்தின்படி, குழந்தைகள் யாரிடம் வளர்வது, விவாகரத்து போன்ற குடும்ப வழக்குகளில் பெண்கள் வழக்குறைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் தற்போது ஏற்பட்டு வரும் பெண்களுக்கு ஆதரவான புரட்சியில், இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கருதப்படுகிறது.