கோடை விடுமுறை என்றால் வெயில் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. அடுத்தபடியாக குடும்பம் குடும்பமாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதும், உற்றார், உறவினர்களது வீடுகளுக்குச் செல்வதும் நினைவுக்கு வரும்.
கோடை விடுமுறை தொடங்கிவிட்டால் பெரும்பாலானவர்கள் எங்கேயாவது சுற்றுலா அல்லது சொந்த ஊர் என்று வெளியூர் செல்ல திட்டமிடுவார்கள். அப்படி திட்டமிடாவிட்டால் வீட்டில் இருக்கும் வாண்டுகள் விடுவார்களா..
விடுமுறையை நல்ல முறையில் கழிக்க சுற்றுலா ஒரு நல்ல ஏற்பாடுதான். ஆனால், சுற்றுலாவிற்கு செல்லும் போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியதுதான் மிகவும் முக்கியம். அப்போதுதான் என்றும் நினைவில் நிற்கும் சுற்றுலாவாக அமையும். இல்லையேல் மறக்க வேண்டிய சுற்றுலாவாக மாறிவிடும்.
மேலும் திட்டமிட்டு சுற்றலா செல்வதும், தங்கும் இடம், பயணம் செய்யும் சேவை போன்றவற்றை முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது வீண் அலைச்சலைத் தவிர்க்கும்.சுற்றுலாக் கிளம்புபவர்களுக்கு சில விஷயங்களைக் கூறிவிட்டால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். என்ன ஆரம்பிப்போமா?முதலில் எத்தனை பேர், எங்கெங்கு போகப் போகிறோம் என்பதை எல்லோரும் சேர்ந்து முடிவெடுங்கள். அவர் வருவார், இவர் வரமாட்டார் என்று நீங்களாக எந்த கணிப்பும் செய்து கொண்டு பிறகு சுற்றுலாத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் போகத் திட்டமிட்டுள்ள இடங்களுக்கு போய், வருவதற்கான செலவு எவ்வளவு? எத்தனை நாட்கள்? எந்த விதத்தில் உங்கள் பயணம் அமையப் போகிறது என்பதை முன்கூட்டியே நல்ல முறையில் திட்டமிடுங்கள். எப்படி போகப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்த உடனேயே அதற்கான ஏற்பாட்டினையும் செய்து முடித்துவிடுங்கள். கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை, கார் இல்லை என்பது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.
ஒவ்வொருவருக்கும் தேவையான பொருட்களை அவரவரே அவர்களுக்கான தனித்தனி பைககளில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டாம், எதை மறந்தாலும், மறந்தவர்தான் அதற்கு பொறுப்பாளி. பொறுப்புகளை தனித்தனியாக ஒவ்வொருத்தருக்கும் பிரித்துக் கொடுத்து விடுங்கள். வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் உங்களோடு கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஒருவர் பொறுப்பாக கவனித்து வந்தால் பதட்டம் இருக்காது. இதனால் எந்த பொருளையும் இழக்க வேண்டி வராது. பயணத்தில் நேரம் தவறாமை மிகவும் முக்கியம். குடும்பத்துடன் செல்லும்போது உங்களுக்காக... மற்ற அனைவருமே காத்திருக்கும் சூழல் கசப்பை ஏற்படுத்தும். யாராவது ஒருவர் எப்போதும் தாமதமாகவே வருவார் என்று தெரிந்திருந்தால், ரயில் புறப்படும் நேரத்தை முன்கூட்டியே அதாவது 7 மணிக்கு ரயில் புறப்படும் என்றால் 5 மணி என்று சொல்லிவிடுங்கள். அப்போதுதான் அவர்கள் சரியாக 7 மணிக்கு வந்துவிடுவார்கள்.
யாருடன் நாம் சுற்றுலா சென்றாலும் அனைத்து செலவுகளையும் பகிர்ந்து கொள்வது நல்லது. ஏன் என்றால் ஒருவருக்கு சுகமாக இருப்பது மற்றவருக்கு சுமையாக இருக்கக் கூடாது.
அதிகமாக பணம் தேவைப்படும் இடங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் கையில் முழுத் தொகையையும் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். தற்போது ஏடிஎம்கள் எங்கும் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை வைத்துக் கொண்டு பயந்து கொண்டே இருக்க வேண்டியதில்லை அல்லவா?எப்போதும், எங்கு சென்றாலும், குழந்தைகள் மீதும், உடைமைகள் மீதும் கவனம் தேவை. சுற்றுலாவைத் துவக்கியதுமே, நிறையப் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டால் சுமையை அதிகமாக சுமக்க வேண்டி வரும். எனவே கிடைக்காத, அந்த இடத்தில் சிறப்பு மிக்க பொருட்களை தேர்வு செய்து வாங்குவது நல்லது. பேருந்து, ரயில் நிறுத்தங்களில் கிடைக்கும் பொருட்கள் பெரும்பாலும் மிகச் சிறந்த உணவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் வயிற்றுக் கோளாறு போன்ற சிக்கல் ஏற்படலாம். குடிநீரை மாற்றிக் கொண்டிருப்பதால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளும் வரலாம். எனவே, சுகாதாரமான உணவை பார்த்து வாங்கி உண்பது நல்லது. உடல் ஆரோக்கியம்தான் சுற்றுலாவை முழுமையாக ரசிக்க உதவும் முக்கிய விஷயமாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியதும், மற்றவர்களையும் கட்டுப்பாடாக நடத்த வேண்டியதும் அவசியமாகிறது.
உடலுக்கு ஒவ்வாதவை, எண்ணெய் பதார்த்தங்கள், எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
எந்த உணவு விடுதிக்குச் சென்றாலும் குடிக்க சூடான நீர் கிடைக்கும். அதைக் கேட்டு வாங்கிக் குடியுங்கள். இவ்வளவு கடுமையான வெயிலில் சூடு நீரா என்று கேட்காதீர்கள். குடிநீரில்தான் பல்வேறு நோய்கள் தொற்றுகின்றன. வேண்டுமென்றால் இளநீர், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம். சுற்றுலா செல்லும் போது விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்ல வேண்டாம். குழந்தைகளுக்கும் எந்த நகைகளையும் அணிவிக்க வேண்டாம். அதேப்போல வீட்டிலும் வைத்துவிட்டு செல்ல வேண்டாம். வங்கி லாக்கரில் விலை மதிப்புள்ள பொருட்களை வைத்து விட்டு செல்வது கவலையின்றி இருக்க உதவும். எங்கு சென்றாலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது. வீட்டில் அனைவரும் யாராவது ஒருவருடைய வழிகாட்டுதலில் பேரில் செல்வது நல்லது. ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி அதனை பின்தொடர வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம். இனிமையாக துவங்கும் சுற்றுலா இனிய நினைவுகளுடன் முடிய வேண்டும் என்றால் நாம்தான் அதனை திட்டமிட்டு, எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும்.ஜாலியாக சென்று வாருங்கள்.