ஒரு குழந்தை பிறந்ததும், அதற்குத் தேவையான அனைத்தையும் அளிக்க வேண்டியது அதன் பெற்றோரின் கடமையாகிறது. தேவையானவற்றை அளித்து விட்டால் மட்டும் போதாது.. சிறந்ததைத் தேர்வு செய்து அளிக்க வேண்டியதும் கடமையாகும்.
இப்படி எது சிறந்தது என்று குழம்புவதற்கு பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் இங்கே உங்களைக் குழப்பப் போவது ஒரே விஷயத்தைப் பற்றியதுதான். அதாவது சிறுநீர் கழிக்கும் குழந்தைக்கு ஏற்றது துணியா அல்லது டயப்பர்களா?
என்ன எல்லோரும் கட்டுரைகள் மூலம் பலவற்றை தெளிய வைப்பார்கள் என்றால் நீங்கள் குழம்பப் போகிறோம் என்று சொல்கிறீர்களே என்று எண்ண வேண்டாம்.இரண்டிலும் இருக்கும், சாதக பாதகங்களை எடுத்துக் கூறி எங்கள் கடமையை நிறைவு செய்து கொள்ளப் போகிறோம். பிறகு ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. சரி விஷயத்திற்கு வருவோம்.பொதுவாக பிறந்த குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும். அதற்கு பெற்றோர்கள் பயன்படுத்துவது துணி அல்லது கடைகளில் விற்கும் டயப்பர்கள். இதில் இரண்டிலுமே நன்மை தீமைகள் உள்ளன. முதலில் துணி டயப்பர்களைப் பற்றி பார்ப்போம்...
குழந்தைக்கு துணி டயப்பர்களைப் பயன்படுத்துவது செலவை குறைக்கும். நல்ல பருத்தி துணிகளை வாங்கி வந்து குழந்தைகளின் தேவைக்கு ஏற்ற அளவில் உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் செலவு குறைகிறது.துணி என்பதால் ஒவ்வொரு முறை பயன்படுத்தியப் பிறகும் நன்கு துவைத்து காய வைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். வேலை அதிகம். மிகவும் நல்ல முறையில் துவைப்பதும் அவசியமாகிறது. மழைக் காலங்களில் உலர வைப்பதில் சிரமம் ஏற்படலாம். சரியாக காயாத துணியில் இருந்து துர்நாற்றம் வீசவும் கூடும். குழந்தை ஒரு முறை சிறுநீர் கழித்ததும், அந்த துணியை எடுத்து விட்டு வேறொரு துணியை வைக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் இரவிலும் அவ்வப்போது குழந்தை சிறுநீர் கழிக்கிறதா என்பதை பரிசோதித்து கழித்திருந்தால் துணியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் பெற்றோரின் தூக்கம் கெடலாம், சில சமயங்களில் குழந்தையும் ஈரத்தின் காரணத்தால் அழலாம்.
துணியைப் பயன்படுத்தி வருவதால், குழந்தைக்கு விரைவில் சிறுநீர் கழிப்பது குறித்தும், மலம் கழிப்பதையும் முறைப்படுத்துவது எளிதாகும். துணியைப் பயன்படுத்தும் குழந்தைகள் இதனை விரைவில் கற்றுக் கொள்கின்றன. வீட்டில் ஓரிடத்தில் அமர வைத்தால் அப்போது மலம் கழிப்பது, வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும் சிறுநீர் கழிப்பது போன்றவற்றை அவர்களாகவே செய்யத் துவங்குகின்றனர்.
பெரும்பாலான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுக்கு வீடுகளில் துணி டயப்பர்களையேப் பயன்படுத்துகின்றனர். வெளியில் எங்காவது செல்லும் போது மட்டும் கடைகளில் வாங்கும் டயப்பர்களை அணியவைத்து செல்கின்றனர்.
கடையில் விற்கும் டயப்பர்கள் எளிதானவை...
கடையில் விற்கும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் டயப்பர்கள் பயன்படுத்த மிகவும் எளிதானவை. கடையில் வாங்கினோமா.. குழந்தைக்கு அணிவித்துவிட்டு பிறகு தூக்கி எறிந்தோமா என்பதுதான் இதன் பயன்பாடு.
பயன்பாடு எளிதாக இருந்தாலும், இதற்கு ஆகும் செலவு அதிகப்படியானது. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 டயப்பர்கள் பயன்படுத்தினால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு பேக் வாங்க வேண்டி வரும். இது தான் இதன் முதல் குறைபாடு.
மேலும், 5 அல்லது 6 மணி நேரத்திற்கு மேல் ஒரு டயப்பரைப் பயன்படுத்துவதால் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சில குழந்தைகளுக்கு டயப்பரின் காற்றுப்புகாத் தன்மையால் சருமத் தொற்றும் ஏற்பட்டு ஒவ்வாமையாக மாற வாய்ப்பு உள்ளது.
வெயில், மழைக் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்துவதற்கு எளிது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய வேண்டியதுதான். இரவில் நீண்ட தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்கும்.வெளியிடங்களுக்கு குழந்தையை எடுத்துச் செல்லும் போது நம் மீது சிறுநீர் கழித்து விடுவானோ என்ற கவலையை விரட்டும். குழந்தையும் ஈர உணர்வின்றி நிம்மதியாகத் தூங்கும்.கடைகளில் கிடைக்கும் டயப்பர்கள் குழந்தையின் உடல் எடையைப் பொருத்து விற்கப்படுகிறது. எனவே, குழந்தையின் தேவையை சரியான வகையில் பூர்த்தி செய்கிறது இந்த டயப்பர்கள்.தூக்கி எறியும் டயப்பர்கள் பயன்படுத்தும் குழந்தைகள், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்கான முறையை கற்றுக் கொள்ள சிரமப்படும். ஏனெனில் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் சிறுநீர் கழித்துவிடுவதால், அந்த குழந்தைகளுக்கு சரியான முறையைக் கற்றுக் கொடுக்கும் தேவை விரைவில் பெற்றோருக்கு ஏற்படாது. இதனால் குழந்தை நன்கு வளர்ந்த பிறகே அந்த முறையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். எதுவாக இருந்தாலும், அவரவரது வசதி, வாய்ப்புகளை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு இதில் ஏதேனும் ஒரு டயப்பர்களைப் பயன்படுத்தலாம். இரண்டிலும் நன்மை தீமைகள் அடங்கியிருப்பதை கவனத்தில் கொள்ளவும்.