சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் குற்றவாளிகளை தண்டிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி அடைவார்கள். ஆனால் குடும்ப பிரச்சினையில் மட்டும் கணவனையோ, மனைவியையோ தண்டிப்பதால் பாதிக்கப்பட்டவரும் கூட வாழ்க்கையை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, குடும்ப பிரச்சினைகளில் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாமல், இரு தரப்பினரையும் அழைத்து வந்து பேசி, சுமூக முடிவு காண்டு வருகிறது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம்.
இதனால் குடும்ப உறவுகள் சீரழியாமல் காக்க முடிகிறது என்று கூறுகிறார் ஆணையர் ராஜேந்திரன்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், சமுதாயத்தில் தற்போது கணவர்களால், பெண்கள் பல கொடுமைகளை சந்திக்க நேரிடுகிறது. இது குறித்து வரும் புகார்கள் மீது தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கலந்தாய்வு மூலம் பிரச்சினையை தீர்த்துவைக்கிறோம் என்று கூறுகிறார்.
தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக பல பெண்கள் இன்னல்களை சந்திக்க வேண்டியதுள்ளது. என்னிடம் நிறைய பெண்கள் புகார் மனு கொடுக்கிறார்கள். அந்த பெண்கள் கொடுக்கும் புகார் மனுக்களை பார்க்கும்போது ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் உள்ளது. வடசென்னையை சேர்ந்த பெண்கள்தான் அதிகளவில் வந்து புகார் கொடுக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வசதி படைத்த அழகான இளம் பெண் ஒருவர், என்னிடம் வந்து கண்ணீர்விட்டு கதறி அழுதபடி புகார் கொடுத்தார். தன்னுடைய கணவர் குடிபழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், தினமும் போதையில் வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அந்த பெண்மணி கூறினார். அந்த பெண்மணி சொன்ன இன்னொரு தகவல் முதலில் எனக்கு சரியாக புரியவில்லை.
விசாரித்தபிறகு எனக்கே அதிர்ச்சியை கொடுத்தது. குடிபோதையில் அடித்து உதைப்பதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய நண்பர்களையும் அவர் வீட்டுக்கு அழைத்து வருவாராம். என்னிடம் இருப்பதுபோல, எனது நண்பர்களிடமும் அனுசரித்து போக வேண்டும் என்றும் அவரது கணவர் கூறுவாராம். இதை சொல்லி அந்த பெண்மணி என்னிடம் கதறி அழுதார்.
நானும் முதலில் அந்த கணவரை கைது செய்து சிறைக்கு அனுப்பத்தான் திட்டமிட்டேன். பின்னர் யோசித்து பார்த்தேன். அவ்வாறு கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பினால் அந்த இளம்பெண்ணின் குடும்ப வாழ்க்கை பாழாகி போயிருக்கும்.
பின்னர் கலந்தாய்வு மூலம் அந்த இளம் பெண்ணையும், அவரது கணவரையும் வரவழைத்து பேசி சமாதானப்படுத்தினோம். இப்போது அவர்கள் இருவரும் நன்றாக வாழ்கிறார்கள்.
இப்போது குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக கொடுக்கப்படும் புகார்கள் மீது நாங்கள் கைது நடவடிக்கை எடுப்பதில்லை. கலந்தாய்வு மூலம் பேசி தீர்த்து கணவன்-மனைவியின் பிரச்சினைக்கு முடிவு காண்கிறோம். இதனால் பல குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறோம்.
இப்போது கணவர்கள், தங்கள் மனைவியை ஒதுக்கிவிட்டு வேறு பெண்களோடு எளிதாக கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள். நமது நாட்டுக்கு என்று ஒரு பண்பாடு, காலாசாரம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த பண்பாடும், கலாசாரமும் வியக்கத்தக்க அளவில் மாறிவிட்டது. இணையதளங்களும், செல்பேசியும், டிவுச் சேனல்களும் இந்த மாற்றத்துக்கு காரணமாக இருக்கின்றன.
நமது நாட்டில் கூட்டு குடும்ப கலாசாரம் முன்பெல்லாம் ஓங்கியிருந்தது. இப்போது கூட்டு குடும்ப கலாசாரம் இல்லாமல் போய்விட்டது. வயதான முதியோர்கள்கூட பல பிரச்சினைகளுக்கு எங்களை நாடி வருகிறார்கள். நாங்கள் உதவி செய்கிறோம். குப்பை அள்ளவில்லை, குடிநீர் வசதி இல்லை என்பன போன்ற பொதுபிரச்சினைகளுக்கு கூட பொதுமக்கள் எங்கள் உதவியைத்தான் இப்போது நாடி வருகிறார்கள். நாங்களும் மக்களுக்கு உதவி செய்து வருகிறோம் என்று கூறினார்.