தற்போது படிக்கும் மாணவர்கள் முதல், வயதான தாத்தா பாட்டிகள் வரை அனைவரது கையிலும் இருப்பது செல்போன்தான். மக்கள் எண்ணிக்கையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல. ஏனெனில் ஒருவரே பல செல்போன்களை வைத்திருப்பதுதான் காரணம்.
இந்த செல்போன்கள் பல வகைகளில் பயனுள்ளதாக இருந்தாலும், சில வகைகளில் இடையூறாகவும் உள்ளன.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு செல்போன் மூலமாக பல வகைகளில் பிரச்சினை ஏற்படுகிறது.
சில பெண்களின் எண்களுக்கு முன்பின் தெரியாத நபரின் செல்பேசியில் இருந்து எஸ்.எம்.எஸ். வருவது, சிலர் தொலைபேசியில் அழைத்து தேவையில்லாத வார்த்தைகளைப் பேசுவது என பல்வேறு சிக்கல்கள் நேரிடுகின்றன.
கேமரா உள்ள செல்பேசிகளை வைத்துக் கொண்டு, சிலர் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது போன்றவையும் அரங்கேறுகின்றன.
இதுபோல வரும் அழைப்புகளை பெண்கள் ஒரேயடியாய் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாகும்.
சிலர் இதுபோன்ற தெரியாத நபர்களின் அழைப்பைக் கூட நல்ல முறையில் பேசி வைப்பார்கள். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் உறவு காதலாகவோ, நட்பாகவோ மாறி, வாழ்க்கையேக் கேள்விக்குறியாகும் நிலைக்குக் கூட போய் இருக்கிறது.இதுபோன்ற முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளைப் பற்றி நீங்கள் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்.அதாவது, எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? அல்லது ஆகாதவரா என்பதை உங்களால் உறுதி செய்ய முடியாது. அவர் கூறும் தகவல் பொய்யாகவும் இருக்கலாம் அல்லவா?
உங்களை செல்பேசியில் அழைத்துப் பேசும் நபர், நல்ல குணவானாக, நல்ல நடத்தையுள்ளவராக உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ள இயலும். ஆனால் அதுபோலவே அவர உண்மையில் இருப்பார் என்பதற்கு சான்று உள்ளதா?
நீங்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல பொறுப்பில் இருப்பீர்கள். ஆனால் உங்களிடம் பேசுபவரும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவராக இருப்பாரா? அப்படி இருந்தால் இதுபோன்ற அழைப்புகளை அவர் செய்ய வாய்ப்புள்ளதா?
சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர் மூலமாக நம்மைப் பற்றி அறிந்து கொண்டு, ஏதோ ஒரு வழியில் நமது செல்பேசி எண்ணை வாங்கி நமக்கு அவர் அழைப்பு விடுக்கலாம். ஆனால் தனது முகத்தைக் காட்டத் துணியாத ஒரு நபரின் நட்பு உங்களுக்கு அவசியமா?உங்களைச் சுற்றி எத்தனையோ உறவுகளும், கைத் தொடும் தூரத்தில் எத்தனையோ நட்புகளும் வலம் வரும் போது இதுபோன்ற முன்பின் தெரியாத ஒருவரது நட்பு உங்களுக்கு எந்த விதத்தில் அவசியமாகிறது?ராங் கால் போட்டு பேசி ஒருவருடன் நட்பு கொள்ள விரும்பும் ஒருவரது நடத்தை எந்த விதத்தில் நல்லவிதமாக இருக்கும்?நம்முடன் ஒன்றாகப் படித்து/வேலை பார்த்து ஒன்றாக இருக்கும் நண்பர்களையே சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளாமல் போகும் போது, இவர்களை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறீர்கள்?ராங் காலில் வரும் அழைப்புகளுடன் நட்பு கொண்டாடுவதற்கு முன்பு இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இதில் ஒரு கேள்விக்காவது உங்களிடம் நேர்மறையான பதில் வருமா? நிச்சயம் வராது.முக்கியமாக பெண்கள் தங்களுக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளுக்கு கண்டிப்பான பதிலைத் தர வேண்டும். இந்த நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளத்தான் செல்பேசியேத் தவிர, அதனை படுகுழியில் தள்ளிக் கொள்ள பயன்படுத்திவிடக் கூடாது. நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?